க்ளீவ்லேண்டில் வசிக்கும் இந்தியர்களின் அடையாளச் சின்னமாகவும், இந்தியக் கலாசாரத்தை வட அமெரிக்காவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் உணர்த்தக் கூடியதுமான க்ளீவ்லேண்ட் தியாகராஜ ஆராதனை நிகழ்ச்சி வழக்கம்போல் இந்த வருடமும் ஈஸ்டர் வார இறுதியை ஒட்டி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
கடந்த இருபது வருடங்களாக, இந்த ஆராதனை நிகழ்ச்சி ஒரே மாதிரியான வடிவமைப்பைக் கொண்டுதான் நடைபெற்று வருகிறது. புனித வெள்ளி அன்று சின்னக் குழந்தைகளுக்கும், இளைஞர்களுக்கும் அதாவது 18 வயதுக்குக் குறைவானவர்களுக்குப் பாட்டுப் போட்டி நடத்தப்படும். அதற்கு மறுநாளிலிருந்து ஆராதனைக் கொண்டாட்டங்கள் தொடங்கும். ஸ்ரீராமரின் மீது பாடப்பட்ட பக்திப் பாடல்களும், ஸ்ரீ தியாகராஜர், ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர், ஸ்ரீ சியாமா சாஸ்திரி ஆகியோர் எழுதிய பாடல்களும் இந்த ஆராதனைக் கொண்டாட்டத்தில் பஜனை களாகக் குழந்தைகளால் பாடப்படும். ஸ்ரீ தியாகராஜரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் இந்த பஜனை 'பஞ்சரத்ன கீர்த்தனை'யிலிருந்து தொடங்கும். இதைத் தொடர்ந்து, ஸ்ரீ தியாகராஜருக்கு மரியாதை செலுத்த விரும்புபவர்கள், அவர் எழுதிய பாடல்களைப் பாடவோ, வாத்தியக்கருவிகளில் இசைக்கவோ செய்வார்கள்.
அன்றைய தினத்தின் மதிய வேளையில் இந்த வருடம், லால்குடி குழுவினர் இனிமையான கச்சேரி நிகழ்த்தினார்கள். அதைத் தொடர்ந்து, கர்நாடக இசைக்குப் பல்வேறு வழிகளில் சேவை செய்தவர்கள் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். இந்தக் கொண்டாட்டத்தின் மிக முக்கிய அம்சம், சிறந்த இசைக்கலைஞருக்கு 'சங்கீத ரத்னகாரா' விருது வழங்கிக் கெளரவிப்பதுதான். கடந்த பல வருடங்களாகக் கச்சேரி, ஒர்க்ஷாப்ஸ், லெக்சர்ஸ், ஹரிகதா, நடனம்... என்று பல வழிகளில் பத்து நாட்களுக்கு மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பெரும்பாலானவர்களிடத்தில் இந்த சந்தேகம் இருக்கிறது. ஏன் இந்த ஆராதனை நிகழ்ச்சி க்ளீவ்லேண்டில் கொண்டாடப்படுகிறது? பரப்பளவை வைத்துப் பார்த்தாலும், க்ளீவ் லேண்டு மிகவும் சின்ன நகரம். நியூயார்க், ஹெளஸ்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், டொரன்டோ, சிகாகோ மற்றும் வளைகுடாப் பகுதியோடு ஒப்பிடும் போது க்ளீவ்லேண்டில் மிகக் குறைவான எண்ணிக்கையில்தான் இந்தியர்கள் வாழ்கிறார்கள். போதாக்குறைக்கு வட அமெரிக்காவிலுள்ள மற்ற நகரங்களோடு ஒப்பிடும்போது ஒவ்வொரு வருடமும் இந்தியர் களின் வருகை க்ளீவ்லேண்டில் அதிகரித்தாலும், ஒட்டுமொத்த க்ளீவ்லேண்டின் மக்கள் தொகை குறைந்து கொண்டுதான் வருகிறது. அப்படிப் பார்த்தால் ஆராதனைக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பும் குறைந்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக ஒரு நாள் கொண் டாட்டமாகத் தொடங்கிய இந்த ஆராதனை நிகழ்ச்சி தொடர்ந்து 10 நாட்களுக்குக் கொண்டா டப்படும் வகையில் மக்களுக்கு இதில் ஆர்வமும் வரவேற்பும் அதிகரித்திருக்கிறது.
க்ளீவ்லேண்டின் அமைவிடம் அதற்கு சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது என்றுதான் நான் சொல்வேன். சிகாகோ, டெட்ராய்ட், ப·பல்லோ, பிட்ஸ்பர்க், டொரன்டோ, கொலம் பஸ் போன்ற இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் முக்கிய நகரங்களிலிருந்து பயணத்திற்கு வசதியான தூரத்தில் இந்த க்ளீவ்லேண்ட் அமைந்திருக்கிறது. இதனால் அருகிலுள்ள பல முக்கிய நகரங்களில் வசிக்கும் கர்நாடக இசை விரும்பிகளும் வார இறுதிநாட்களிலாவது இந்த ஆராதனை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஏதுவாக இருக்கிறது. இந்த ஆராதனை நிகழ்ச்சி வளைகுடாப் பகுதியில் நடக்குமேயானால் இந்த வசதி சாத்தியப்படாது.
இந்த ஆராதனை நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருவரும் முழுமனதோடு ஈடுபட்டால்தான் இந்த நிகழ்ச்சி வெற்றியடையமுடியும் என்பது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து. இது போன்ற ஒரு நிகழ்ச்சி முழுக்க முழுக்க உணர்வுப்பூர்வமானது. ஒருவரது பாரம்பரியத்தை, மண்ணின் பெருமையை, பெருமைக்குரிய நம் கலாசாரத்தைத் தன் குழந்தைகளுக்கு அதாவது அடுத்த தலைமுறைக்கு அதுவும் வேற்று மண்ணில் வசிக்கும் போது கொண்டு செல்வ தற்கு இது நிச்சயம் அருமையான முயற்சி. மேற் சொன்ன காரணங்களோடு இன்னும் மூன்று முக்கிய காரணங்கள் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்குக் காரணமாக இருப்பதாக நான் எண்ணுகிறேன்.
முதல் காரணம் குரு. இந்த வருடத்துக் க்ளீவ் லேண்டு ஆராதனை நிகழ்ச்சியில் கலாஷேத்திராவின் இயக்குநர் ஸ்ரீ. எஸ். ராஜாராம் அவர்கள் தனது உரையில் கூறியது போல, குரு இல்லாமல் எதுவுமே சாத்தியப்படுவதில்லை. மிகச் சிறந்த மிருதங்க வித்வான் ராம்நாட் ஸ்ரீ ராகவன் அவர்கள் க்ளீவ்லேண்டில் பல வருடங்கள் வாசம் செய்ய நிச்சயம் க்ளீவ் லேண்ட் கொடுத்து வைத்திருக்க வேண்டும். க்ளீவ்லேண்ட் பஜன் குழுவை உருவாக்கி தியாகராஜ ஆராதனைக் கொண்டாட்டத்திற்கு வித்திட்டவரே ஸ்ரீ ராகவன் அவர்கள்தான். உருவாக்கியதோடு இதில் ஆர்வமுள்ளவர்களுக்குப் பஞ்சரத்ன கீர்த்தனைகளைக் கற்றுக் கொடுக்கவும் செய்தார். வேலை, குடும்பம் என்று தங்களுக்கே உரிய சொந்த வேலைகளில் சிக்குண்டு கிடப்பவர்களைப் பல மாதங்கள் மாலைப் பொழுதுகளில் ஒருங்கிணைத்துப் பயிற்சி கொடுத்து, வெவ்வேறு படிகளில் இசையறிவு உள்ளவர்களை ஒரே குரலில் சுருதி அமையும் வகையில் பாடச் செய்தது ஸ்ரீ ராகவன் அவர்களின் மிகப் பெரிய முயற்சி. சுயநலமில்லாத ராகவனின் இந்த சேவையை இந்த ஆராதனைக் கொண்டாட்டத்தில் பங்கேற்கும் ஒவ்வொரு வரும் நினைத்துப் பாராட்ட வேண்டும்.
இரண்டாவது காரணம் ஒரு தலைமையின் கீழ் மொத்த இசைப்பிரியர்களின் பங்கேற்பு. எந்தவித வரைமுறையோ கட்டுப்பாடோ இல்லாமல் பங்கேற்ற ஒவ்வொருவரும் தன்னால் முடிந்த அளவு தன்னை வெளிப்படுத்திக் கொண்டார்கள். முழுமனதோடு ஈடுபட்டு இந்தக் கொண் டாட்டத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். அரங்கம் ஏற்பாடு செய்வது, கலைஞர்களை வரவழைப்பது, போக்குவரத்து போன்ற வகைப்படுத்தப்பட்ட ஏற்பாடுகளானாலும் சரி, உணவு தயாரித்தல் மற்றும் வழங்கல், வருகை புரிந்த கலைஞர்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்ளுதல், மேடையலங்காரம் உட்பட அமைப்பின் அனைத்துத் தேவைகளையும் உடனுக்குடன் பூர்த்தி செய்தல் போன்ற வகைப் படுத்தப்படாத ஏற்பாடுகளானாலும் சரி, தாமாகவே முன்வந்து பலர் இந்த விழா ஏற்பாடுகளைச் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆராதனைக் குழுவின் தலைவர் என்கிற முறையில் இந்த விழாவின் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி சொல்ல இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.
மூன்றாவது காரணம் வட அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள், க்ளீவ்லேண்ட் ஆராதனை நிகழ்ச்சியைத் தங்கள் வீட்டு நிகழ்ச்சியாகவே பாவித்து முழுஈடுபாட்டோடு தங்கள் பங்களிப்பை அளித்து இத்தனை வருடங்களாக இந்தக் கொண்டாட்டத்தை வெற்றி பெறச் செய் திருக்கிறார்கள். இனிமையான சூழ்நிலையும், நட்பின் அடிப்படையில் அமைந்த சூழலும், விருந்தோம்பல் பண்பும் இந்த ஆராதனைக் கொண்டாட்டத்தின் மூலம் வடஅமெரிக்க இந்தியர்களின் ஒருங்கி ணைவுக்குக் காரணமாக இருக்கின்றன.
இந்த க்ளீவ்லேண்ட் ஆராதனை நிகழ்ச்சியை வெற்றி பெறச் செய்ய ஆதரவு அளித்த அத்தனை இந்தியர்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். எங்களுக்குக் கிடைத்த ஆதர வின் மூலம் பெரிய அளவில் இது போன்ற மேலும் சில நிகழ்ச்சிகளை வடஅமெரிக்காவின் பல்வேறு நகரங்களிலும் நடத்த முடியும் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு உருவாகியிருக்கிறது.
க்ளீவ்லேண்டு பாலு |