தென்றல் தமிழ் நடையைப் பற்றிச் சென்ற மாதம் எழுதிய கட்டுரைகள் பற்றி வாசகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தென்றலின் ஒவ்வொரு பக்கமும் தமிழ் கற்பிக்கும் கருவியாய் விடுமோ என்று அஞ்சுகிறார் வாசகி மீரா சிவா. “போதனை செய்யவோ பாடம் நடத்தவோ தென்றலுக்கு எண்ணமில்லை” என்று ஆசிரியர் அசோகன் சென்ற மாதத் தலையங்கத்திலே எழுதியிருந்தார். அதனால் அஞ்ச வேண்டாம்! வாசகர் திருமலை ராஜனுக்கு வேறு கவலை. தென்றல் தமிழ் நடையின் தரத்தைத் தாழ்த்தி விடாதீர்கள் என்று வேண்டுகிறார் இவர். முடிந்த மட்டிலும் செந்தமிழில் எழுத வேண்டும் என்ற கொள்கை சரி என்கிறார். தென்றல் தமிழ் நடை எளிய சொற்களில், புரியும்படி, நேரடியாகக் கருத்தை உணர்த்தும் அதே நேரத்தில் நல்ல செந்தமிழில் அமைந்திருக்கிறது என்று எழுதுகிறார் இவர். கலைச்சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களை அடைப்புக் குறிக்குள் கொடுப்பதைப் பலரும் வரவேற்றிருக்கிறார்கள். ஏற்கனவே எழுத்தாளர் சுஜாதா இந்த உத்தியைப் பயன்படுத்திப் பல கலைச்சொற்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி வந்திருக் கிறார். அவர் காட்டிய வழியில் நாமும் தொடர்வோம்.
அட்லாண்டா வாசகர் பெரியண்ணன் சந்திரசேகரன் “மாணவர்களுக்கு” என்ற நூலில் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் “எழுத்தாளனாக” என்ற தலைப்பில் எழுதிய பக்கங்களை அனுப்பியிருக்கிறார். “உயர்ந்த உள்ளத்தைப் பெற்று நிறைந்த கருத்துகளைத் தேடி, சிறந்த சொற்களைக் கொண்டு குறைந்த எழுத்துகளால் எழுதப்படுவதே எழுத்து. அவ்வாறு எழுதுபவனே எழுத்தாளன்” என்று இலக்கணம் வகுக்கிறார் கி. ஆ. பெ. “பேசுவது போல எழுதுகிறவன் எழுத்தாளி ஆகான்; பிழைபட எழுதுகிறவன் படிப்பாளி ஆகான்; வைது எழுதுகிறவன் அறிவாளி ஆகான்; பல மொழிச் சொற்களைக் கலந்து எழுதுபவன் ஒரு மொழியிலும் பற்று இல்லாதவன்” என்கிறார். “பேசுவதைப் போல எழுதுங்கள் எனக் கூறாமல், எழுதுவதைப் போலப் பேசுங்கள் எனக் கூறுவது நலமாகும்”என்று வலியுறுத்துகிறார்.
ஆங்கிலத்தில் எழுதும் எவரிடமும் கட்டாயம் இருக்க வேண்டிய குட்டிப் புத்தகங்கள் இரண்டு: The Elements of Style by Strunk and White, The Golden Book on Writing by David Lambuth. பத்தொன்பதாம் நூற்றாண்டில் எழுதிய Wren & Martin புத்தகத்தோடு மல்லாடி விக்டோரிய ஆங்கிலத்தில் பயிற்சி பெற்ற இந்தியர்களுக்கு இந்த இரண்டு அமெரிக்க நூல்களின் அருமை புரியும். தமிழிலும் இவை போன்ற நூல்கள் இல்லையே என்ற குறையைத் தீர்க்கிறது மொழி வெளியீட்டின் “தமிழ் நடைக் கையேடு.” சில தமிழ்த் துறைப் பேராசிரியர்கள் இதைக் குறை சொன்னாலும், 140 பக்கத்துக் குள் எழுத்தாளனுக்குத் தேவையானவற்றைத் தருவதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்நூல். டாக்டர் பூவண்ணனின் “மொழித்திறன்”, அ. கி. பரந்தாமனாரின் “நல்ல தமிழ் எழுத வேண்டுமா” என்ற நூல்களின் வரிசையில் இணைகிறது “தமிழ் நடைக் கையேடு.”
தகவல் தொழில் நுட்பப் புரட்சியின் தாக்கத்தை அன்றாட வாழ்வில் காணும் நாம் மனித குலத்தின் முந்தைய தொழில் நுட்பப் புரட்சிகளின் தாக்கங்களையும் ஓரளவுக்கு ஊகிக்கலாம். விலங்காய் இருந்த நாம் நெருப்பை ஆளக் கற்றுக் கொண்ட பின் சூழலைக் கட்டுப்படுத்தும் அறிவுள்ள மனிதர் ஆனோம். நீரை ஆளக் கற்றுக் கொண்டு பயிர் விளைக்கத் தொடங்கியபோது பண்படத் துவங்கினோம். நாகரீகங்களுக்கு வித்திட்டோம். நகரங்களின் கொடைதான் எழுத்தறிவுப் புரட்சி. எழுத்தறிவின் தாக்கத்தில் அரசுகளும், பேரரசுகளும் உருவாயின. கருத்துகள் தலைமுறைகளைத் தாண்டிச் சாகா வரம் பெற்றன. அச்சுப் புரட்சி எழுத்துகளை மடங்களிலிருந்து மீட்டு மக்களைச் சென்றடையச் செய்தது. வானொலி, தொலைக் காட்சியைத் தொடர்ந்து இன்று இணையப் புரட்சியின் தாக்கம் எப்படி இருக்குமோ என்று வியக்கிறோம்.
தமிழகத்தில் எழுத்தறிவு தோற்றுவித்த புரட்சி பற்றிச் சென்ற மாதம் நான் குறிப்பிட்டிருந்த “பண்டைத் தமிழ்க் கல்வெட்டு எழுத்துகள்” என்ற நூலில் அறிஞர் ஐராவதம் மகாதேவன் எழுதியிருக்கிறார். ஒரே சமயத்தில் எழுத்தறிவு தென்னிந்தியாவுக்கு வந்திருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே தாய் மொழியில் எழுத முனைந்திருக்கின்றனர். தமிழுக்கு இணையான மொழி வளர்ச்சி அப்போது தெலுங்கிலும், கன்னடத்திலும் இருந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கிறார் மகாதேவன். இருந்தாலும், ஆந்திராவிலும், கர்நாடகத்திலும், எழுத்தறிவு மௌரியர்களின் ஆட்சி மொழியான பிராகிருதத்துடன் நின்று விட்டது. தமிழ் நாட்டில் மட்டும் தமிழில் எழுத்தறிவுப் புரட்சி தோன்றி இருக்கிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழின் வாய்மொழி இலக்கியங்கள் எழுத்து வடிவம் பெற்று விட்டன. ஆனால், தெலுங்கிலும், கன்னடத்திலும் இருந்திருக்கக் கூடிய வாய்மொழி இலக்கியங்கள் மறைந்து விட்டன. அந்த மொழிகளில் இலக்கிய வளர்ச்சி ஆயிரம் ஆண்டுகள் பின்னடைய வேண்டியிருந்தது. இதற்கு என்ன காரணம்? இந்த எழுத்துப் புரட்சி வேறு எந்தெந்த சமூக மாற்றங்களைத் தோற்றுவித்தது? இந்த வரலாறு கற்பிக்கும் பாடங்கள் என்ன? இவை போன்று கல்வெட்டுகளில் மறைந்திருந்த பல சுவையான செய்திகளை விளக்குகிறார் ஐராவதம் மகாதேவன்.
மணி மு. மணிவண்ணன் |