மும்பையிலிருந்து, சிகாகோ வந்து போகும் எனக்கு, இந்த முறை, தென்றல் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மார்ச், ஏப்ரல் இதழ்களில் அமெரிக்க வாழ் தமிழர்களின் 'விமர்சனத் திறன்', வாசகர் பக்கத்தில் தெரிந்தது. கீதா பென்னட்-சிக்கில் குஞ்சுமணி வாதம், அந்த காலத்தில் 'சுப்புடு', 'செம்மங்குடி', 'வீணை பாலசந்தர்', 'பாலமுரளி' முதலியவர்களிடையே நடந்த மோதல்களை விட கண்ணியமாக இருந்தது.
பாரதி களஞ்சியத்தைப் பற்றி தென்றல் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். மனு பாரதியின் 'நவீன சிறுகதைகள் - ஒரு அறிமுகம்' சிறப்பாக அமைந்து, அந்த மாதிரியான கதைகளுக்கு அடிகோலிய 'மறுமலர்ச்சி' எழுத்தாளர்களாகிய, தி. ஜானகிராமன், கு.ப.ரா., வ. ரா., புதுமைப்பித்தன், சிசு. செல்லப்பா, ஆகியோரை நினைவூட்டியது. இரு இதழ்களுமே கதை, கட்டுரைகளில் 'சிலோன் தமிழ்' நெடி இருப்பது போன்ற ஒரு பிரமை உண்டாயிற்று. இந்த இரு இதழ்களையும் முடிந்தால், மே மாத இதழையும் எனது இலக்கிய சகாக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக இந்தியாவிற்கு எடுததுப் போகிறேன். வாழ்த்துகள்.
எஸ். வி. ராமன், சிகாகோ
*****
நான் பம்பாயில் வசிக்கும் தமிழன். அரசுப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவன். இப்போது என் பெண்களோடு தங்குவதற்காக கலி·போர்னியா வந்துள்ளேன். சமீபத்தில் ஒரு இந்திய உணவகத்துக்குச் சென்றபோது 'தென்றல்' கிடைத்தது. பார்த்துப் படித்து மகிழ்ந்தேன். கடல் கடந்து வந்த நீங்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்யும் சேவை மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும். ''தென்றல்'' தொடர்ந்து இனிதே வீச இறைவனை வேண்டுகின்றேன்.
வடுவூர் கிருஷ்ணன்
*****
நாங்கள் ரிவர்சைட் அருகே ரெட்லேண்ட் என்ற நகரில் வசித்து வருகிறோம். ஆர்டீஸியா/செரிட்டோஸ் செல்லும் போது, மட்டுமே தென்றலின் பிரதி கிடைக்கிறது. தங்களின் ஆசிரியர் பக்கம் கட்டுரைகளும் இதழின் படைப்புகளும் மிகவும் ஆர்வமுடம் படிக்கத் தூண்டுகிறது. தபாலில் தென்றல் பிரதிகள் பெற என்ன செய்ய வேண்டும் என்பதைத் தெரிவிக்க வேண்டுகிறேன். இந்தத் தென்றல் இதழுக்கு என்னால் இயன்ற சேவைகள் ஏதேனும் இருப்பின் செய்ய ஆவலாய் உள்ளேன்.
அஜய்குமார் ராஜூ
*****
சென்ற மாத தென்றலைப் படிக்கப்படிக்க எனக்குப் பல சந்தேகங்கள் தோன்றின. இது தென்றல் தானா அல்லது முதுநிலை தமிழ் பட்டபடிப்பு புத்தகமா என்று?
ஆங்கிலத்தைத் தமிழில் எழுதி பேச்சுத்தமிழ் என்று சப்பைகட்டு கட்ட வேண்டாம். இலக்கண சுத்தமான நல்ல தமிழில் தென்றல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பத்திரிகை முழுவதுமே தமிழ் கற்றுக்கொடுக்கும் கருவியாக இருந்தால் வாசகர்கள் பாவம் இல்லையா? அமுதமே ஆயினும் அளவோடு அருந்த வேண்டும்! புழக்கடை பக்கத்தில் குறிப்பிடப்பட்ட டாக்டர் ஐராவதத்தின் புத்தகத்தைப் பற்றி விரிவாக எழுதலாமே!
விருது பெற்ற அமெரிக்கா வாழ் இந்தியர்களைப் பற்றி தொடர்ந்து எழுதுங்கள். படிக்க மிகவும் இன்பமாகவும் பெருமையாகவும் இருந்தது.
மீரா சிவக்குமார்
*****
''குழந்தைகளுக்கான சிறு வைத்தியங்கள், ஒவ்வொரு திருக்குறள், சிறுநீதிக்கதைகள் போன்றவற்றைப் பிரசுரிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சசிகலாவதி
*****
நான் சென்னையிலிருந்து வடஅமெரிக்கா வந்து தற்சமயம் தியாரகில் எனது மைத்துனர் இல்லத்தில் உள்ளேன். தங்கள் தென்றல் இதழ் பத்திதிரிகையை நியூயார்க் பிள்ளையார் கோயில் திருமண மண்டபத்தில் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சுவையான விஷயங்களை மிகத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள்.
சிவ. கணேசன்
*****
தென்றலின் சுகம்
வருகுது, வருகுது வேனில் அ·து வந்து வாட்டும் நேரம் உடலோ தகிக்கக் கூடும் சுகம் தன்னை உடல் தேடும்.
அந்த நேரம் ஏர் கூலர் போலே, குளிர்காற்று தரும் காற்றாடி போலே, மனதிற்குச் சுகம் தரும் இதமான தென்றல் வந்து தடவும் நம்மை.
தென்றலின் சுகம் இங்குமட்டுமா? அறிய ஏங்குது மனது மே திங்கள் 27-ல் மீண்டும் வைகை நோக்கிப் பயணம் அதற்கு முன் தென்றலின் தீண்டும் சுகம் கிட்டுமா? பார் எங்கும் வீசிச் சுகம் பரப்பும் எண்ணம் உண்டோ?
பார் புகழ் பாராட்டும் பலபெற்று நீந்தி, தவழ்ந்து, வெற்றிநடைபோட்டு தென்றல் பலகாலம் இதமாக வீச ஆசிகூறி வாழ்த்தும் நெஞ்சம்
வா. சாவித்திரி, கலி·போர்னியா |