தாமத பேச்சுவார்த்தை
தமிழக அரசு தனியார் மருத்துவக்கல்லூரிகளைத் தொடங்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி மருத்துவ கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். ஏப்ரல் 23ல் தொடங்கி மே 21 வரை போராட்டம் நடைபெற்றது. மாணவர்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனால் போராட்டம் உக்கிரம் அடையத் தொடங்கியது. மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் வரை சென்றனர். மாணவர்களின் உடல்நிலை மோசமானதால் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

தொடர்நது மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு டாக்டர்களும் பேராட்டத்தில் குதித்தனர். இதனால் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்களின் சிகிச்சையின்றி அப்பாவிப் பொதுமக்கள் பலர் பாதிக்கப்பட்டனர். ஒரு சிலர் தகுந்த சிகிச்சையின்றி மரணமடைந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் டாக்டர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. 2060 டாக்டர்களுக்கு குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டது. 5 ஆயிரம் மாணவர்களை இடைநீக்கம் செய்வதாக அரசு அறிவித்தது.

இதற்கிடையே அரசுக்கும் மாணவர் தரப்புக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை போராட்டத்தை விலக்கிக் கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கியது. மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிப்பதாக உறுதிமொழி வழங்கியுள்ளது.

துரைமடன்

© TamilOnline.com