மே மாதம் 3ஆம் தேதி, முற்பகல் பதினோரு மணிக்கு அந்தச் செய்தி பரவிய போது ஒட்டு மொத்த தமிழ்த் திரையுலகமும் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோனது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரே நாளில் மூன்றரை கோடி ரூபாய் வருமான வரி கட்டியவர், கடன் தொல்லை காரணமாக இறந்து விட்டார் என்பதை யாராலுமே தாங்கிக் கொள்ள முடியவில்லை. பட அதிபர் ஜீ.வி. (ஜீ.வெங்கடேஸ்வரன்) தற்கொலை செய்து கொண்டார் என்பது தான் திரையுலகத்தினரின் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் ஆளாக்கிய செய்தி.
நாயகன், தளபதி, உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்தவர் ஜீ.வி. சமீபகாலத்தில் அவர் தயாரித்த 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே!', 'தமிழன்', 'சொக்கத்தங்கம்' போன்ற படங்கள் அவருக்குப் பெரிய அளவில் நஷ்டத்தைக் கொடுத்தன. இந்தப் படங்களை எடுப்பதற்கு முன் மும்பையில் மைக்கேல் ஜாக்சன் கலந்து கொள்ளும் மிகப் பெரிய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார் ஜீ.வி. கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று ஜாக்சன் அறிவித்துவிட பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார் ஜீ.வி.. பல கோடி ரூபாயை அந்த விழா ஏற்பாடுகளுக்காகச் செலவழித்திருந்ததுதான் அவரது அதிர்ச்சிக்குக் காரணம். இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததால் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய வேண்டும் என்று மைக்கேல் ஜாக்சன் மேல் அவர் வழக்கு தொடர்ந் திருக்கிறார். அந்த வழக்கின் முடிவும் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கிறது. தீர்ப்பின் முடிவும் ஜீ.வி.க்கு சாதகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் இவரின் தற்கொலை பேரதிர்ச்சியாகவே இருக்கிறது.
கடைசியாகத் தொலைபேசியில் யாருடனோ, ஏதோ பேசியவர், ஒரு முடிவுடன் வேலைக்காரியிடம் காபி போடச் சொல்லிக் குடித்திருக்கிறார். பின் பூஜை செய்துவிட்டு நிதானமாகத்தான் தூக்குப் போட்டிருக்கிறார். அந்த சமயத்தில் இவரது மனைவி கொடைக்கானலில் இருந்திருக்கிறார். இவரது மறைவுச் செய்தியைக் கேட்டதும், கோல்கத்தா சென்றிருந்த டைரக்டர் மணிரத்னம் உடனடியாக சென்னை வந்தார். மணிரத்னமும் ஜீ.வி.யும் உடன் பிறந்த சகோதரர்கள்.
கடன் தொல்லையால் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கலாம் என்பது ஒரு யூகம் தான். ஜீ.வி. தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க காவல்துறை தன் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது.
யாமினி |