''முத்துக் குளிக்க வாரீகளா! மூச்சை அடக்க வாரீகளா!'' சூரிய குளியல், மணல் குளியல், கடலில் குளிக்க வாரீகளா! ஹவாயியில் ஹாய்யாக விடுமுறை கழிக்க வாரீகளா!
ஹவாயிக்கு வருபவர்களுக்கு இப்படியும் பாடத்தோன்றும். ஸான் பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் 'Pleasant Holidays' என்ற வாசகத்தைப் படித்தபடியே இனிய பயணத்தைத் தொடங்கினோம். ஐந்து மணிநேரம் பறந்து களைத்த விமானம் ஹானலூலூவில் இறங்கியது. ஹவாயி செல்லும் விமானத்திற்காக gate மாறவரும்போது பயணிகள் அனைவருக்கும் புஷ்பமாலை போட்டு வரவேற்றார்கள்.
ஹவாயியில் ஐந்தாறு தீவுகள் உள்ளன. ஹவாய், பிக் ஐஸ்லண்டு (Big Island) இரண்டிலும் 6 நாட்களைக் கழித்தோம். ஹவாய், தோட்டங்கள் நிறைந்த தீவு என்பதால் இயற்கை மணம் கமழ்கிறது. எங்கு திரும்பினாலும் வாழை, தென்னை மரங்கள், கரும்பு வயல்கள், பனை, கோக்கோ, பேரீச்சை மர தோட்டங்கள், செம்பருத்தி.. என்று பச்சைப் பசேல் மரங்களையும், விதவிதமான வண்ணத்திலும் வடிவத்திலும் மலர்ந்து சிரிக்கும் புஷ்பங்களையும் காண்பது கண்ணுக்கு நல்ல விருந்து. முதல்நாள் walina ஆற்றில் படகு சவாரி செய்தோம். படகில் ஹவாயியின் ஆதிவாசிகள் கிடார் இசைத்துக் கொண்டே, கலாசாரம் நிறைந்த பழமையான பாடல்களைப் பாடி, ''Aloha" (ஹலோ) சொல்லி வரவேற்று ஆடிப்பாடி மகிழ்வித்தார்கள். பக்கத்திலிருந்த Fern grotto என்ற இடத்தில், மேலிருந்து பச்சைநிற திரை தொங்க விட்டதுபோல் அடர்த்தியான மரஞ்செடிகள். Sleeping giant என்ற மலை விரிந்து ராட்சதன் படுத்திருப்பது போலவே தோற்றமளிக்கிறது. Smith Trapical paradiseல் சுதந்திரமாக மயில்கள் தோகை விரித்து நடனமாடுவதும் கோழிகளின் கொக்கரிக்கும் ஒலியும் பறவைகளின் கீச்கீச் சத்தமும் காணக்கிடைக்காத அழகான காட்சி.
ஹவாயியின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்று Waimea Canyon.. 3600 அடி ஆழத்தில் 10 மைல் நீளத்தில் உலர்ந்த பாறை பாதாள அகழி போல் உள்ளது. பாறையைச் சுற்றி ஒரே பச்சை மயம். அருவிபோல் கொட்டும் நீர்வீழ்ச்சிகள், இயற்கைக் காட்சி நிறைந்த தோட்டம், மலை, நதி, கடல் என எல்லாவற்றின் அழகையும் இந்த இடத்தில் அள்ளிப்பருக முடிகிறது. Sprouting என்ற இடத்தில் கடல் அலைகள் தன் வேகத்தினால் தண்ணீரை lava tubeல் தள்ளுவதும், அதே வேகத்துடன் திரும்பவும் வாரி இறைத்துத் தெறிப்பதும் அற்புதமான காட்சி. இயற்கையின் பிரமிப்பில் opetca fallsம் அடக்கம்.
Kapa என்ற இடத்தில் Wailna நதிக் கரையை நோக்கி ஸன்மார்க்க இறைவன் கோவில் அமைந்திருக்கிறது. ஸத்குரு சிவாய சுப்ரமண்ய ஸ்வாமிகள் அதன் ஸ்தாபகர். தற்சமயம் நடராஜர், பிள்ளையார், முருகன், சுற்றிலும் 108 நடராஜர் விக்ரகங்கள் விதவிதமான நடன கோலத்தில் வைக்கப்பட்டுள்ளன. நடுவில் உள்ள ஸ்படிகலிங்கத்திற்கு தினசரி பூஜை அபிஷேக ஆராதனை நடக்கிறது.
ஹவாய் ஏர்போர்ட்டிலிருந்து Big Island செல்ல 20 நிமிட விமானப் பயணம். Milo harbourல் நின்ற கப்பல்களை வேடிக்கை பார்த்துவிட்டு இரண்டரை மணிநேர கார் பயணம் செய்தால் valcano பார்க்க சரியான நேரத்திற்கு வந்துவிடலாம். மாலை 7 மணி அளவில் இருட்டும் தறுவாயில் எரிமலை வெடித்துச் சிதறுவதை ஆரஞ்சு வண்ண நிறத்தில் புகை மண்டலத்துடன் பார்க்க முடியும். குளிர்ந்த லாவா பாறைகளின் மேல் தகுந்த காலணி இல்லாவிடில் நடப்பது சிரமமாகிவிடுகிறது. Wave erosion மூலம் பல மைல் தூரம் lavaக்களால் மூடப்பட்டுள்ளது.
Kona கடற்கரை சென்று அங்கிருந்து படகில் ஏறி சிறிது தூரம் சென்ற பிறகு அதிலிருந்து மாறி, கடல் நடுவில் submarineல் பயணம் செய்யலாம். கடலுக்குள் 1 மணி நேரம் பயணம். உள்ளே 150 அடி ஆழம் வரை செல்லும்போது ஆச்சரியமும் பயமும் பிரமிப்பும் கலந்த அனுபவம் கிடைக்கும். 60 அடி ஆழம் சென்றவுடன் கலர் கலரான மீன்கள், கடல் பாம்புகள், திமிங்கலம், ஆகியவற்றைப் பார்க்க முடிகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறி கடல் நீர் மட்டத்திற்கு வந்து மீண்டும் படகுக்கு மாறி ஏறிய இடத்திற்கே வந்துவிடலாம். முத்து, பவழம், கிளிஞ்சல்கள், சோழி, மாலைகள் அவைகளில் செய்த அழகுப்பொருட்கள் இவையெல்லாம் கடற்கரையோரக் கடைகளில் விதவிதமாக விற்பனைக்கு வைத்திருந்தார்கள்.
Hiloவிலிருந்து வடக்கே 7 மைல் தூரத்தில் ஹவாய் பாட்டனிக்கல் கார்டன் இருக்கிறது. அப்பப்பா, இயற்கையின் வண்ணஜாலங்களை இறைவன் அள்ளித் தெளித்திருக்கும் விந்தையை இங்கே காணலாம். பல நாடுகளிலிருந்தும் வரவழைக்கப்பட்டு பயிர் செய்து, அதில் அழகாக அந்தந்தத் தாவரத்தின் பெயர் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான அழகைக் கண்டுகளிக்க ஆண்டவன் அமைத்த சொர்க்கம் இதுதான் என்றால் அது மிகையாகாது.
இதிலிருந்து கொஞ்ச தூரத்திலிருக்கும் Rain forest, boiling pot, lavaக்களால் அமைந்த குகை போன்ற சுரங்கப்பாதை எல்லாமே கட்டாயம் பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள். Macademia nut factoryயில் சாக்லெட் தயாரிப்பதை விளக்கமாகப் பார்க்கலாம். உள்ளே நுழைந்ததும் free samples சாக்லேட்டு கொடுப்பார்கள். அதைச் சுவைத்துக்கொண்டே அவ்விடத்திலுள்ள coffee shopல் உட்கார்ந்து, அங்கே வைக்கப்பட்டிருக்கும் TVயில், சாக்லேட் தயாரிக்கும் விதத்தைப் பார்க்கலாம். TVயில் மட்டுமில்லை, கண்ணாடிக் கதவு வழியாக சாக்லெட் தயாரிக்கும் விதத்தை மாடி ஏறி factoryயின் உள்ளே நேரடியாகவும் பார்க்கலாம்.
இயற்கையின் அதிசயங்களைத் திகட்டத் திகட்ட ரசித்து அனுபவித்து, மீண்டும் எப்போது வழக்கமான பரபரப்பான வாழ்க்கை எப்போது ஞாபகத்திற்கு வருகிறதோ அப்போது வீடு திரும்பலாம்.
குளிரை மறந்து குதூகலமாய் வெயிலில் சுற்ற,
கவலையை ஓரம்கட்டிவிட்டு ஹாய்யாக விடுமுறையைக் கழிக்க,
ஹவாய் ஏற்ற இடம் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
சீதா துரைராஜ் |