வள்ளுவரும் தற்கால நிர்வாகத் தத்துவமும்
வ.வே.சு. ஐயர் அவர்கள் செய்த திருக்குறள் ஆங்கில மொழி பெயர்ப்பின் உதவியோடு, திரு. வி.ஸ்ரீனிவாசன் அவர்கள் New Age Management Philosophy from Ancient Indian Wisdom என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.

சென்னைப் பேருந்துகளில் பயணம் செய்யும் போது அதில் எழுதியிருக்கும் திருக்குறள் களை மனனம் செய்வதில் தொடங்கியது இவரது ஆர்வம். கணிதம் மற்றும் வணிக இயலில் தேர்ச்சி பெற்றபின், தற்போது ICICI நிறுவனத்தின் சார்பு நிறுவனமான 3I Infotech என்ற நிறுவனத்தின் தலைமைப் பதவியை வகித்துவருகிறார்.

தான் எவ்வாறு குறளின் வழி நடந்து தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் எண்ணிக்கையை 3,500 ஆகவும், ஆண்டு வருமானத்தை 150 மில்லியன் அமெரிக்க டாலராகவும் உயர்த்த வள்ளுவம் எவ்வாறு உதவியது என்பதைப் பல அனுபவ பூர்வமான உதாரணங்களோடு விவரித்துள்ளது மிக அழகு. நூலாசிரியர் தானே தனது அன்றாட அலுவலில் குறள்நெறியைக் கடைப்பிடித்து வெற்றி கண்டதன் மூலம் குறள் கூறும் நிர்வாக வழிமுறைகள் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பதை நிரூபித்துள்ளார் என்றால் மிகையாகாது.

இன்றைய சூழலில் ஒரு வர்த்தக நிறுவனம் நல்ல முறையில் இயங்க நல்ல நிர்வாகம் தேவை. அந்த நிர்வாகத்தைத் தலைமை தாங்கி வழி நடத்துபவர் திறமையும், தகுதியும் பெற்றவராக இருக்க வேண்டும். ஒரு நிறுவனத்தைத் தொடங்கும் முன் எவ்வாறு திட்டமிட வேண்டும் என்பதை தெரிந்து செயல்வகை, காலம் அறிதல், இடம் அறிதல் போன்ற அதிகாரங்களின் துணைகொண்டு படம் பிடித்துக் காட்டியுள்ளார்.

எள்ளாத வெண்ணிச் செயல்வேண்டுந் தம்மொடு
கொள்ளாத கொள்ளா துலகு

(குறள்: 470)

தலைமைப் பதவியில் உள்ளோர் ஒரு நிறுவனத்தை எவ்வாறு நெறிப்படுத்த வேண்டும் என்பதை அமைச்சு, தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் போன்ற அதிகாரங்கள் மூலம் தெளிவுபடுத்துகிறார். தன் நிறுவனத்தில் இந்த அதிகாரங்களின் வழிகாட்டலில் எவ்வாறு திறமையானவர் களைத் தேர்ந்தெடுக்க முடிந்தது என்பதையும், அதனால் நிறுவனம் எவ்வாறு உயர்ந்தது என்பதையும் விரிவாகக் கூறுகிறார்?

இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு

(குறள்: 385)

உட்பகை, பகைத்திறம் தெரிதல், வினைசெயல்வகை போன்ற அதிகாரங்களில் காணப்படும் அரிய கருத்துக்களைத் தலைமைப் பதவியில் இருப்பவர் தனது பணியின் பன்முகச் செயல்பாடுகளில் எவ்வளவு நேர்த்தியாகப் பயன்படுத்தலாம் என்பதைப் பல உதாரணங்களோடு விளக்கியுள்ளார்.

வழிநடத்துவோன் எப்படிப் பேச வேண்டும் என்பதை அவையறிதல், சொல்வன்மை ஆகிய அதிகாரங்களின் மூலம் எளிமையாக எடுத்துரைக்கிறார். ஒரு தலைவனுக்குத் திறமைகள் இருந்துவிட்டால் போதாது, பல வாழ்நெறிகளும் இருக்க வேண்டுவது அவசியம். இன்றைய காலச் சூழலில், நன்றாக இயங்கிய பல நிறுவனங்கள் சீர்குலைந்துவிடக் காரணம், அவர்கள் வள்ளுவனின் கேள்வி, வாய்மை, அருளுடைமை, இறைமாட்சி போன்ற அதிகாரங்களில் உள்ள நெறிகளைப் பின்பற்றாமையே என்பதைத் தெளிவாகப் பல உதாரணங்களுடன் விளக்கியுள்ளார்.

மேலாண்மைப் பதவிகள் வகிப்போர் மட்டுமல்லாமல், தொழில்முனைவோரும் இந்நூலைப் படித்தால் மிகுந்த பயன்பெறலாம்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என்று வள்ளுவனின் வழியிலேயே சென்று 121 பக்கங்களில் இன்றைய 'கார்ப்பொரேட் யுக'த்துக்குத் தேவையான பல முக்கியக் கருத்துக்களை குறட்பாக்கள் கூறியபடி எழுதியுள்ள இவரை இந்நூலை படிப்பவர்கள் அனைவரும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இந்நூல் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் அறப்பணிகளுக்குக் கொடையாகத் தரப்படும்.

இந்நூலைத் தமிழாக்கம் செய்தால் தமிழ்கூறும் நல்லுலகம் மிகவும் பயன்பெறும்.

நூல்: New Age Management Philosophy from Ancient Indian Wisdom

இணையதளத்தில் வாங்க: www.vsrinivasan.com

இலவசம்: தென்றல் இதழுக்கு 5 ஆண்டுச் சந்தா செலுத்தினால் இந்நூலை இலவசமாகப் பெறலாம்.

வி. கண்ணன்

© TamilOnline.com