அஞ்சனா ஜன்னல் வழியாக வெளியே வெறித்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்த சந்த்ரு அவள் இடுப்பை வளைத்துத் திருப்பினான். “என்னைத்தானே எதிர்பார்த்துக் காத்துக்கிட்டுருந்தே?”எனக் கேட்டான். அவள் வெட்கித் தலை குனிந்தாள். “அய்யோ அப்படி வெட்கப்படாதேடீ...எனக்கு மூடு வருது” என்ற சந்த்ருவை தள்ளிவிட்டு “ச்சீ! இரண்டு பிள்ளைகள் பிறந்தும் இப்படி அலையறீங்களே” என்று பொய்க் கோபத்தோடு மேலும் முகம் சிவந்தாள் அஞ்சனா.
“ஆமா பசங்க எங்கே?”
“அவங்க வெளியே எதிர் வீட்டுப் பசங்களோட விளையாடிட்டிருக்காங்க. நீங்க உட்காருங்க நான் காபி கலந்துட்டு வரேன்” என்று சமையலறை நோக்கி நகர்ந்தாள் அஞ்சனா.
அவள் காபி கலந்து கொண்டு வருவதற்குள் சந்த்ரு லுங்கி டீ-சர்ட்டில் தன்னை நுழைத்துக் கொண்டு, கை கால் கழுவி புத்துணர்ச்சியோடு உட்கார்ந்து 'சிஎன்என்' பார்க்க ஆரம்பித்தான். காபி, டிபன் தட்டுடன் நுழைந்த அஞ்சனாவைப் பார்த்த சந்த்ரு “அட முறுக்கு! எப்ப பண்ண?”.
“காலையிலே எல்லோரும் ஆபீஸ் ஸ்கூல்-ன்னு பறந்து போய்டறீங்க. எனக்கு நாளெல்லாம் வீட்டுக்குள்ளேயே ஒண்ணும் பண்ணாம இருந்தா 'போர்' அடிச்சுப் போய்டுது. அதான் இப்படி கிச்சன்ல வேலை செஞ்சா நேரமும் கழியுது, எக்சர்சைஸ் பண்ணா மாதிரியும் இருக்கு. அதான்” என்று இழுக்க...
“உன்னைத் தான் இதெல்லாம் ஒண்ணும் பண்ணாதே.. ரெஸ்ட் எடுன்னு சொன்னேனுல்ல? நான் சொல்றத நீ கேக்கறதேயில்லே. இரண்டு பசங்களும் சிசேரியன், போதாக்குறைக்கு ஒரு 'ஓவரி'யை வேற எடுத்தாச்சு. டாக்டர் உன்னை நல்லா ரெஸ்ட் எடுக்கணும்னு சொல்லி யிருக்காரு. நீ என்னடான்னா இதெல்லாம் செஞ்சுக்கிட்டிருக்கே”
“ஆமாமா அதுக்காக எத்தன நேரம் தான் நான் சும்மா உட்கார்ந்துகிட்டிருக்கறது? அதான் பண்ணேண். நல்லா இருக்கா சொல்லுங்க”.
அதற்குள் பிள்ளைகள் இருவரும் வெளியி லிருந்து ஓடி வந்தனர். பெரியவள் காயத்ரி 7 வயது. சிறியவள் காவேரி 3 வயது. இருவரும் ஓடி வந்து “அப்பா” எனச் சந்த்ருவை கட்டிக் கொண்டனர். “என்னடா ஸ்கூல் எப்படி இருந்தது?”
“ஜாலியா விளையாடினேன் அப்பா” என்ற காவேரி தட்டிலிருந்து ஒரு முறுக்கை எடுக்க,
“வெளியே விளையாடிட்டு கைகால் கழுவாம சாப்டற பொருள தொடக்கூடாதுன்னு எத்தன தடவை சொல்லியிருக்கேன்?”அஞ்சனா முறைத்து விட்டு அதட்டினாள்.
“ஏய் அஞ்சு! விடு. குழந்தைதானே அவ. என்ன தெரியும் என் குட்டிக்கு. நீ வாடா நான் தரேன்.” என்று வக்காலத்து வாங்கி முறுக்கை காவேரிக்கு ஊட்டி விட்டான்.
“நீங்க இப்படிக் கொஞ்சியே கெடுத்திருங்க. பெண் குழந்தைய அடக்கமா வளர்க்காம இதென்ன கொஞ்சிக்கிட்டு”
“ஏய் அஞ்சு. என்ன நீ 21st செஞ்சுரில போய் பொண்ணு பையன்னுகிட்டு... எல்லாம் ஒண்ணுதாம்மா. அப்படியெல்லாம் பாகுபாடு சொல்லி நாமளே நம்ம பசங்கள வளர்க்கக் கூடாது”. காவேரியிடம் “நீ இன்னைக்கு ஸ்கூல்ல என்னடா கத்துக்கிட்டே?”
“ஏ பி சி டி சொல்லிக் கொடுத்தாங்கப்பா.”
“எங்க... அப்பாவுக்கு ஒரு தரம் சொல்லிக்காமி பார்ப்போம்.” மழலையுடன் சொல்ல ஆரம்பித்தது குழந்தை. முடிந்தவுடன் எல்லோரும் ஆர்ப்பரித்தனர்.
கை தட்டும் ஓசை கேட்டு திடுக்கிட்டுத் திரும்பினாள் அஞ்சனா.
அங்கு கோபத்தோடு நின்று கொண்டிருந்த சந்த்ரு “இரண்டு பொண்ணுங்களைப் பெத்து அதுங்களையும் உன்னை மாதிரியே ரோட்ல மேய விட்டுட்டு நீ இங்க பால் பொங்கறதக் கூட கவனிக்காம எவனை நினைச்சுடீ கனவு கண்டுக்கிட்டுருந்தே நாயே” என்று திட்டியபடியே அவள் தலைமுடியை கொத்தாகப் பிடித்து இழுத்தான்.
இதைக் கேட்ட அஞ்சனா தீயிலிட்ட புழுவாய்த் துடித்து வாய் விட்டு ''ஐயோ!'' என அலறினாள்.
மறு நிமிடம் அப்பொழுது காய்ந்த பாலை எடுத்து அவள் தலையில் கொட்டி “இனிமே எவனும் உன்னை கனவிலே கூட பாக்க மாட்டாண்டீ” என்று கறுவிவிட்டு வெளியேறினான்.
அவள் தன் முகத்தைத் துடைத்துக் கொண்டு தரையைத் துடைத்து விட்டு தன் தலையை அலச பாத்ரூமிற்குள் சென்று, விட்ட கனவைத் தொடரலானாள்.
நந்தினி |