சலங்கைஒலி
பரதநாட்டியம் இப்போது மேட்டுக்குடி மக்களின் சமாச்சாரமாக ஆகிவிட்டது. ஒரு கணக்கு சொன்னால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். இன்று ஒரு பரதநாட்டிய அரங்கேற்றத்துக்கு 50ஆயிரம் முதல் 1 லட்சம் வரை செலவாகிறது. அது தவிர அரங்க வாடகை சுமார் ஐயாயிரம். வாத்தியக்குழு பத்தாயிரம். ஜவுளி ஒரு புடவை ஐயாயிரம். தையல்கூலி இரண்டாயிரம். மேலும் தலைச்சாமான் என்று கூறப்படும் ஆபரணங்கள் ஆயிரம். எல்லாவற்றுக்கும் மேலாக அரங்கை நிரப்புவதற்கான வாகனவசதி ஏற்பாடு. இதனால் மத்திய வர்க்கக்குடும்பங்கள் எவ்வளவு அல்லல்களுக்கு உள்ளாகின்றன என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம். நாட்டியம் இருக்கிறதே அது ஒரு தீராத வியாதி. ஒரு தடவை காலில் சலங்கையை கட்டிவிட்டால் ஆடும் ஆசை பிளேக் மாதிரி ஒட்டிக்கொள்ளும். அப்புறம் அவனைப் பிடி இவனைப் பிடி என்று அப்பாமார்களும் அம்மாமார்களும் லோ லோ என்று அலைந்து ஏகப்பட்ட டொனேஷன்களை கொடுத்து சபாக்களில் இடம் பிடிக்க வேண்டும். தனால் பல குடும்பங்கள் நாசமாகப் போயிருக்கின்றன.

சுப்புடு, இசை விமர்சகர் இந்திய டுடே மே 7, 2003

*****

கண்கெட்ட பிறகு...

பொடா சட்டத்தை ஆதரித்து வோட்டுப் போட்டு தவறு செய்துவிட்டேன்'' என்று வைகோ சொல்லியிருக்கிறார். தொடர்ந்து பல ஆண்டுகளாக எம்பியாக இருப்பவருக்கே ஒரு சட்டம் எப்படி எல்லாம் பயன்படுத்தப்படும் என்பது தெரிவதற்கு அவரே பத்து மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருக்கிறது.

பொடாவுக்கு எதிர்ப்புக் காட்ட ஆரம்பித்திருக்கும் அரசியல் தலைவர்கள் போலீஸ் செய்யும் என்கெளண்டர்களை கண்டிப்பதில்லை.

ஒருவேளை இதிலும் அனுபவம் ஏற்பட்டால்தான் என்கெளண்டர்களை எதிர்பார்ப்பார்களோ என்னவோ?

சில அரசியல் தலைவர்கள் உள்ளே போனதற்காகத்தான் பல அரசியல் தலைவர்கள் பொடாவை எதிர்க்கிறார்கள். நக்ஸலைட்டுகள் என்று குற்றம்சாட்டி பல அப்பாவிகள் கைதாகியிருப்பதைக் கண்டிக்க இவர்களுக்கு மனமில்லை.

'இதுபோன்ற அடக்குமுறைச் சட்டம் நம்மை அண்டாது.

தீவிரவாத எண்ணம் கொண்ட இளைஞர்களை அடக்கத்தான் இது' என்னும் தலைவர்களின் நினைப்பைத் தகர்த்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

அ. மார்க்ஸ், பேராசிரியர், மனித உரிமைவாதி, சென்னையில் நடைபெற்ற பொடா எதிர்ப்புக் கூட்டத்தில் பேசியது...

*****

அடையாளம்

பெண் என்பதைவிட, தலித் பெண் என்பதில் தான் என் அடையாளம் உள்ளது. தலித் பெண் என்பதால் பல சாதகங்களும் பல பாதகங்களும் இருக்கவே செய்கின்றன.

சாதகங்கள் என்று சொல்லப்போனால் தலித் பெண்ணுக்கே உரிய வீரம், யதார்த்தத்தன்மை, கலகலப்பு, எத்தனை கஷ்டம் வந்தாலும் எதிர்நீச்சல் போட்டு எந்திரிக்கோணும் என்ற மனப்பக்குவம், சின்னச் சின்ன சந்தோஷங்களை நிறைவாக அனுபவிக்கிற மனநிலை இப்படி நிறைய விஷயங்கள் உள்ளன. அதுதான் வாழ்க்கைக்கு ஆதாரம்.

தலித் பெண் என்றில்லாமல் வெறும் பெண்ணாக மட்டும் நான் வாழ முடியாது. அது ரொம்ப சங்கடமான செயற்கைத்தனமாகத் தெரிகிறது. ஒரு பண்பாட்டு ரீதியான இந்த அடையாளம்தான் என்னைப் பலப்படுத்துகிறது.

பாமா, எழுத்தாளர், காலச்சுவடு மே-ஜூன் 2003

*****


மாற்றுயார்?

தமிழகத்தைத் தற்போது ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு எல்லா வழிகளிலும் தோல்வியுற்று இருக்கிறது.

பல வாக்குறுதிகளை வாரி வழங்கி வெற்றி பெற்று வந்தவர்கள், இன்று வாக்களித்த மக்களின் விருப்பத்தை நிறைவேற்ற முடியாமல் தடுமாறுகிறார்கள்.

தமிழக மக்கள் இந்த ஆட்சியின் செயல்பாட்டினால் மட்டுமல்ல, இரு திராவிடக் கட்சிகளின் செயல்பாட்டிலும் வெறுத்துப் போயிருக்கிறார்கள்.

அந்த மாற்று காங்கிரஸ் கட்சிதான் என்பது மக்களின் ஏகோபித்த நம்பிக்கை.

நரேஷ் ராவல், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்களில் ஒருவர்.

*****

தடை பல தாண்டினாலும்...

பெண்கள் அரசியலுக்கு வருவதென்பது திடீரென நடப்பதல்ல... ஏற்கனவே விடுதலைப் போராட்டக் காலத்திலேயே பெண்கள் ஆண்களுக்குச் சமமாக பேராட்டங்களில் கலந்து கொண்டு ஜெயிலுக்கும் தூக்கு மேடைக்கும் சென்றுள்ளனர். எனவே பெண்கள் அரசியலில் ஈடுபடுவது என்பது புதிது கிடையாது. அப்படி இருக்கும் போது நாடாளுமன்றத்தில் பெண்கள் பங்கேற்பது உறுதி செய்யப்பட வேண்டும்.

தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் 33% என்பது அமலில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 43,000 பெண்கள் உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்களாகவும், பிரெசிடெண்டாகவும், மாநகராட்சி மேயராகவும் உள்ளனர். பெண்களுக்கு அனுபவம் இல்லை என்று கூறுவது ஏமாற்று வேலை.

பாலபாரதி, திண்டுக்கல் எம்எல்ஏ, நக்கீரன் இதழ்.

© TamilOnline.com