கீதா பென்னட் பக்கம்
அமெரிக்காவில் வாழ்கிற இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒரு முறையாவது விமானப் பயணம் செய்திருக்கிறோம் அல்லவா? உங்களில் நிறைய பேர் போலவே என்னுடைய முதலாவது விமானப்பயணமும் அமெரிக்காவிற்குத் தான். அதற்குப் பிறகு எத்தனையோ முறை சென்னைக்கும், மற்ற வெளி நாடுகளுக்கும், உள்ளூரிலேயே சில இடங்களுக்கும் நூற்றுக்கணக்கான தடவை விமானத்தில் பறந்திருந்தாலும், ஒரு முறை நியூயார்க்கிலிருந்து சென்னைக்கு மும்பை வழியாகப் பயணித்ததை என்னால் மறக்கவே முடியாது.

புதியதாக அமெரிக்காவிலிருந்து பிறந்த மண்ணை மிதிக்க மிகுந்த ஆவலுடனும் கனவுகளுடனும் விமானப் பயணத்திற்குப் பயணச்சீட்டு (டிக்கெட்) வாங்கும் நண்பர்களுக்கு, எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஏற்படக்கூடாது என்பதற்காகத்தான் இதைப் பற்றி இந்தப் பக்கத்தில் எழுதுகிறேன்.

அந்த சமயத்தில் என் கணவர் பென்னெட்டும் நானும் ஆறு வயது ஆனந்துடன் கனெக்டிகட் மாநிலத்தில் நியூ ஹேவனில் இருந்தோம். அங்கே இருந்த ஒரு ஏஜென்ட் கென்னெடி விமான நிலையத்திலிருந்து ஒரு புதிய ஏர்லைன்ஸின் பெயரைச் சொல்லி அதில் (அப்போது) பம்பாய் வழியாக (அப்போது) மதறாஸ் செல்ல ஆனந்திற்கும் எனக்கும் டிக்கெட் ஏற்பாடு செய்து கொடுத்தாள்.

நான் புத்திசாலியாக ஒரு கேள்வி கேட்டேன். "ஒரு வேளை பம்பாய்க்கு விமானம் தாமதமாகப் போனால் என்ன செய்வது?"

"குவைத் ஏர்லைன்ஸ் அலுவலகம் பம்பாய் இன்டெர்நேஷனல் விமான நிலையத்தில் இருக்கிறது. அங்கே போய்க் கேட்டால் உதவி செய்வார்கள்." என்று அதற்குப் பதில் வந்தது. அந்த பதில் எனக்கு நிம்மதியைக் கொடுத்ததால் நியூயார்க்கிலிருந்து ஆனந்துடன் பயணப் பட்டேன்.

எந்த வேளையில் அந்தக் கேள்வியைக் கேட்டேனோ! பம்பாய்க்கு நான்கு மணி நேரம் தாமதமாகப் போய் இறங்கினோம். அடித்துப் பிடித்துக் கொண்டு பிரம்மாண்டமான அந்த விமான நிலையத்தின் மஹா கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஆனந்தின் கையை இறுகப் பற்றிக் கொண்டு கஸ்டம்ஸ¤க்கு ஓடினேன். அதற்கு இடையில் எத்தனை பேருடைய காலை மிதித்திருப்பேனோ? புடவை தடுக்கி நான் விழ-அதனால் ஒருவருடைய விஸ்கி பாட்டில் உடைந்து போக-அவர் குய்யோ முறையோ என்று கத்திக் கொண்டு என்னைப் பார்த்து இந்தியில் திட்ட-எனக்கோ புடவையெல்லாம் விஸ்கி நாற்றம் அடிக்கிறதே என்று கவலை!

ஒரு வழியாக கஸ்டம்ஸ் முடிந்தது. ஆனால் சென்னை செல்லும் விமானம் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் கூட இல்லையே! அதனால் என்ன? குவைத் ஏர்லைன்ஸில் வேலை செய்பவர்களிடம் சொல்லி சென்னை செல்லும் விமானத்தை எங்களுக்காக நிறுத்தி வைக்கச் சொல்லலாம் என்று அறியாமையில் நினைத்துக் கொண்டேன். குவைத் ஏர்லைன்ஸ் அலுவலகம் அங்கே எங்கு உள்ளது என்று கேட்டுக் கொண்டு தேடிப் போய்ப் பேசினால், 'எங்களுடைய கடமை பம்பாயோடு முடிந்து விட்டது. நீங்கள் பேச வேண்டியது இந்தியன் ஏர்லைன்ஸ¤டன்.." என்று சொல்லி கதவை இழுத்து மூடிவிட்டார்கள்.

அங்கிருந்த ஒரு ஆபிஸர் என்ன நினைத்தாரோ, இரக்கப்பட்டு "சென்னை விமானம் இந்த ஏர்போர்டிலிருந்து போகாது. நீங்கள் டொமொஸ்டிக் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டும்..." என்று மட்டும் சொன்னார். அது வரை நான் அதிருஷ்டசாலி தான்!

அந்த ஆளின் சொல்லில் நாணயம் தெரிந்ததால் டொமஸ்டிக்கைத் தேடிக் கொண்டு விமான நிலையத்திலிருந்து அவசரமாக வெளியே வந்தேன். தாடி வைத்திருந்த டாக்ஸிகாரர் ஒருவரிடம் ஆங்கிலத்தில் என்னை டொமெஸ்டிக் ஏர்போர்ட்டுக்கு அழைத்துப் போகக் கேட்டேன். அவர் கூலாக ஒரு பெருந்தொகையைக் கேட்டார். அதுவும் டாலரில். வேறு வழி? ஒப்புக் கொண்டு ஏறி உட்கார்ந்தால் அரை மணி நேரம் கழித்து உள்ளூர் விமான நிலையத்தில் கொண்டு விட்டார்.

ஒடிப் போய் இந்தியன் ஏர்லைன்ஸ் ஆபிசைக் கண்டு பிடித்தேன்.

"நானும் என் மகனும் இந்த எண் விமானத்தில் சென்னை போக வேண்டும். தயவு செய்து எங்களை அனுப்புங்கள்..." என்று வேண்டிக் கொண்ட போது கவுண்டரில் இருந்த ஆள் 'அதோ...' என்று கைக் காட்டினார். அவர் காட்டிய இடத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று ஆனந்தையும் என்னையும் பம்பாய் விமான நிலையத்தில் விட்டு விட்டுச் சென்னை இருக்கும் திசை நோக்கிச் சீராக ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்ததை ஏமாற்றத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்போது என்ன செய்வது? கையைப் பிசைந்து கொண்டு கவுண்டரில் கேட்டேன்.

'சென்னை செல்லும் விமானம் இனி நாளை காலையில் தான். அது வரை இதோ இந்த இடத்தில் நீங்களும் உங்கள் மகனும் இருங்கள். வெயிட்டிங் லிஸ்டில் உங்கள் பெயரை எழுதி வைக்கிறேன். உங்களுக்கு அதிருஷ்டம் இருந்தால் ஒரு வேளை நாளைக்கு நீங்கள் சென்னை போகலாம்.." என்று கைக் காட்டி விட்டார் ஒருவர்.

அவர் அப்படிக் கைக்காட்டிய இடம்... விமான நிலையத்தில் அரெஸ்ட் செய்யப்படும் கைதிகளை அடைத்து வைக்கும் சிறைச்சாலை!!

மீதி அடுத்த இதழில்....

(தொடரும்)

© TamilOnline.com