ஒரு மொழிக்கு அழகு சேர்ப்பது பேச்சு வழக்கில் உள்ள 'idioms' என்று சொல்லப்படும் வசனங்கள் ஆகும். தஞ்சை ஜில்லாவில் புழக்கத்தில் இருந்த பல கிண்டலான உவமைகள் வழிவழியாய் வந்து இன்றும் வழக்கத்தில் உள்ளன. 'வெட்டு ஒன்று, துண்டு இரண்டு' என்று நேர் பேச்சு பேசுவது ஒரு ஆற்றல் என்றால் 'வண்ணான் வீடு எங்கே? ஆத்துக்கு அக்கரை'' என்று சுற்றி வளைத்துக் கேட்பவரை நீண்ட பயணம் அழைத்துச் செல்வது ரசிக்கத்தக்க ஒரு கலைதான்.
பல வசனங்களுக்கு முன்னால் ருசியான கதைகள் இருக்கும். 'போதும் போதாததுக்கு பொன்னியும் திரண்டாளாம்' என்பதின் பின்னால் இருந்த நீண்ட கதையைக் கேட்ட போது, இத்தனை விஷயம் இருக்கா... இந்த ஒரு வரியில் என்று ஆச்சரியமாய் இருந்தது. அரைகுறையாய் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு, யாரோ சொல்கிறார்கள் என்று நானும் சேர்ந்து சொன்னால், என் அம்மா ''அடியும் துணியும் பொத்தலாங்காதே'' என்பார். அதற்குப் பின்னால் வேடிக்கையான கதை உண்டு. வீட்டில் கல்யாணம். கோலம் போட, பாட்டுப் பாட என்று உதவிக்கு ஒரு மாமியை அழைத்து வந்தார்களாம். மாமி தன் மகளுடன் முன்னதாகவே வந்து வேளாவேளைக்குச் சாப்பிட்டு, ஓய்வு எடுத்துக் கொண்டு ஆனந்தமாய் இருந்தார்கள். மாப்பிள்ளை வீட்டார் வரும் நேரம் வந்துவிட்டது. கோலம் போட வேண்டும். மாமி இழைகோலம் போடும் மாவை எடுத்துக் கொண்டு வீடு முழுவதும் தெளித்துவிட்டு வந்தார். ஏன் இப்படி செய்தாய். என்றாலோ ''அவசரக் கோலம், அள்ளித் தெளிச்சேன்'' என்று பதில் வந்ததாம். சரி போகட்டும் என்று விட்டுவிட்டார்கள். பாட்டுப் பாட வேண்டிய நேரத்தில் பாடுங்கள்' என்றால் ''இலுப்ப பூ.. இலுப்ப பூ... இலுப்பப் பூக்கு இருபுறமும் பொத்தலாம்'' என்று பாடினாளாம். இது என்னடா கஷ்டகாலப் பாட்டு என்று மாமியை இடித்துக் கொண்டு, மாமியின் பெண்ணை, ''அடியே, உனக்குப் பாட்டுத் தெரியுமே, நீ பாடு'' என்றார்கள். அந்தப் பெண்ணுக்கும் பாவம், அதே பாட்டுதான் தெரியும். அது கூட அரைகுறை இலுப்பப்பூ என்று பூவின் பெயர்கூட மறந்து மறந்து விட்டது. ''அம்மா சொன்ன பூவுக்கு அடியும் துணியும் பொத்தலாம்'' என்று பாடினாளாம்!
ஒரு கல்யாணமோ, மற்ற விசேஷங்களோ சரியாகக் கொண்டாடப்படாமல், விருந்தினர் சரியாக கவனிக்கப்படாமல் இருந்தால் ''எப்படி நடந்தது' என்று சென்று வந்தவரை விசாரித்தால் ''என்ன கல்யாணம், சுண்ணாம்பு செவத்துலனு'' என்பார்கள். அதற்குப் பின்னால் ஒரு பாட்டு உண்டு.
'செல்லக் குட்டிக்கு கல்யாணமாம் அவா அவா ஆத்துல சாப்பாடாம் கொட்டு மேளம் கோயில்லியாம் வெத்தலை பாக்கு கடையிலியாம் சுண்ணாம்பு செவத்திலயாம்''
அளவுக்கு மீறி சிக்கனமாய் நடந்து கொள்வதைக் கிண்டலாய் சொல்வது இந்தப் பாட்டு.
அந்தக் காலத்தில் கல்யாணங்களில் 'சதிர் கச்சேரி' என்று சொல்லப்படும் நாட்டியக் கச்சேரி வைப்பார்கள். நாட்டியம் ஆட ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து அழைத்து வந்தார்கள். கச்சேரியும் துவங்கியது. ஆனால் ஆட்டமோ காண சகிக்கவில்லை. பார்ப்பவர்கள் மனம் நொந்து ''போதும் போதும் நிறுத்துங்கள் ஆட்டத்தை'' என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். நர்த்தகியோ ''நான் அரை காசு பணம் வாங்கி இருக்கிறேன். அதனால் ஆடியே தீருவேன்'' என்று சொல்லி நிறுத்த மறுக்கிறார். கல்யாண வீட்டுக்காரர் - ''அம்மா, ஒரு காசு பணம் தருகிறேன். தயவு செய்து நிறுத்து'' என்று மன்றாடி பணம் கொடுத்து ஆட்டத்தை நிறுத்தினாராம். பொதுவாகக் குழந்தைகள் தான் உதவி செய்கிறேன் என்று வந்து உபத்ரவம் செய்தால் ''ஆட அரை காசு குடுத்தா... நிறுத்த ஒரு காசு குடுக்கணும் உனக்கு'' என்று சொல்வார்கள்.
மருமகள் தன்னைச் சரியாகக் கவனிப்பதில்லை என்று மகனிடம் குறை சொன்னாளாம், ஒரு மாமியார். உடனே கணவன் தன் மனைவியைக் கோபித்துக் கொண்டு, ஏன் அம்மாவை உபசரிப்பதில்லை என்று கேட்டானாம். உடனே அவள் ''நான் என்ன செய்வது, உங்கள் அம்மா எது கேட்டாலும் வேண்டாம்... வேண்டாம் என்கிறார்கள். நீங்களே பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, மாமியார் காதுக்கு அருகில் சென்று இரகசியமாக ''மாமியாரே மை இட்டுக்கரேளா'' என்றாளாம்.
விதவையான அந்த அம்மாள் பாவம் ''வேண்டவே வேண்டாம். ஐய்யய்யே கஷ்டம்... எனக்கு வேண்டாம்பா'' என்றாளாம். உடனே மருமகள் ''நீங்களே பாருங்கள்... இப்படி மறுத்தால் நான் என்ன செய்வேன்.'' என்றாளாம் அந்த சாமார்த்தியசாலி. ஒருவருக்கு நிச்சயமாய் தேவைப்படாது என்று நன்றாய் தெரிந்தும் பகட்டுக்காக உபசார வார்த்தைகள் பேசினால் சொல்வார்கள்.
சோப்பு, கண் மை போன்றவை அதிகம் புழக்கத்தில் இல்லாத அந்தக் காலத்தில் சுத்தமாய் இருப்பது கஷ்டமாய் இருந்தது போலும். கண்ணில் சேரும் அழுக்கை துடைக்கக் கூட நேரமில்லாமல் இருந்தார்கள் என்பது ''அகமுடையான் அடிச்சாலும் அடிச்சான், கண் பூனை கரைஞ்சுது'' என்ற வசனத்தில் தெரிகிறது. கெட்டது நடந்து அதன் பக்கவிளைவாய் ஒரு நல்லது நடந்தால் இதைச் சொல்வார்கள்.
வெறும் கையை முழம் போடுவதை 'அடியேனு கூப்பிட அகமுடையானைக் காணுமாம். பிள்ளைக்குப் பேரு எம் ரமணியன்னாளாம்'' என்பார்கள். இதையே சிலர் சற்று மாற்றி ''அடியேனு கூப்பிட அகமுடையானைக் காணுமாம்... அம்மானு கூப்பிட பிள்ளை இல்லைனு அழுதாளாம்'' என்றும் சொல்வார்கள். முக்கிய பிரச்சினையை விட்டு வேறு எதையோ நினைத்துக் கவலைப்படுவதைக் கிண்டல் செய்வது இது.
என் பாட்டி அடிக்கடி சொல்லும் வசனம் 'முன்னே பின்ன செத்தா தான சுடுகாடு தெரியும்'' என்பது. அனுபவம் இல்லை. அதனால் தெரியவில்லை அல்லது சரியாகச் செய்ய வரவில்லை என்றாளோ இதைச் சொல்வார்கள். ஆனால் அதே நேரத்தில் பழக்கம் இல்லாதது ஒரு நொண்டிச் சாக்கு என்பதை இலை மறைகாயாக குத்திக் காண்பிக்கவும் செய்கிறார்கள். மிகவும் சிந்திக்க வைக்கும், ரசமான உவமானம் இது.
கிடக்கறது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மனையில வை'' 'இடம் இல்லாத எடத்துக்க மாமியாரைப் பெத்தவ வந்தாளாம்'' 'குழந்தை இல்லாத வீட்ல கிழவன் துள்ளி குதிச்சானாம்' 'மாய்மாலக்காரிக்கு மசக்கையாம்' என்று இன்னும் எத்தனையோ சுவையான, பேச்சுக்குப் பல வண்ணம் கொடுக்கும் தொடர்கள் உண்டு. சினிமாவிலும், நம் வாழ்விலும் அவசர, ஒரு சொல், ஒரு வரி பேச்சே நாகரீகமாய் இருக்கும்பொழுது இது போன்ற நீண்ட, சுற்றி வளைத்த பேச்சு நாளடைவில் மறைந்துவிடும். கறுப்பு வெளுப்பாய், இயந்திர மொழியாய் இல்லாமல் உணர்வுகளைப் பல அழகிய வண்ணங்களில் சித்தரிக்கும் கருவியாய் தமிழ் இருக்க உதவும் வசனங்கள் தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உண்டு. இவற்றை அறிந்து, ரசித்து, உபயோகித்து, பாதுகாப்பது ஒரு இனிய சேவையாகும்.
மீரா சிவக்குமார் |