கும்பகர்ணன் ஆறு மாதம் உறங்குவான், மற்ற ஆறு மாதம் விழித்திருப்பான் என்று இராமாயணத்தில் வருவதாக ஞாபகம். பனிவிழும் பகுதியில் வசிக்கும் எங்களுக்கும் கிட்டத்தட்ட அந்த வாழ்க்கைதான். "புது வெள்ளை மழை இங்கு பொழிகின்றது...," என்ற பாடலை நித்தமும் நினைவு படுத்தும் குளிர்காலம் விடை பெற்று, வசந்தம் வந்துள்ளது. என் போன்ற சிலருக்குக் கூடவே தும்மலும் வருகிறது!
இப்போதெல்லாம் "பச்சை நிறமே பச்சை நிறமே...," என்றுதான் பாடுகிறோம். ஆனால், இந்தப் பச்சை நிறம் வருவதற்குள், பல வண்ணங்களில் பூத்த பூக்களின் அழகை வர்ணிக்க எனக்குக் கவித்துவம் இல்லை.
எல்லோருக்கும் சொல்வது போல் எனக்கும் சொல்லியனுப்பினார்கள், அமெரிக்காவில் எல்லாமே தலைகீழ் என்று. மனிதன் படைத்தவைதான் அப்படி என்றால், மரங்களும் சளைத்தவை அல்ல என்று இப்போதுதான் தெரிந்தது. எனக்குத் தெரிந்தவரை, எங்களூரில், மரம் முழுவதும் பச்சையானபின்தான், பூக்கவா வேண்டாமா என்று யோசிக்கும். இங்கு அப்படியல்ல. முதலில் மரங்கள் முழுவதும் பூக்கள்; பக்கத்தில் போய் நின்றால், போனால் போகிறதென்று வாசனை தரும் பூக்கள். பூக்கள் பிஞ்சாகின, பின்பு சாவகாசமாக இலைகள் துளிர்விட்டன. இப்போது "எங்கெங்கு காணினும் பச்சையடா.." என்று பாடத் தோன்றுகிறது. ஆம்! வசந்தம் வந்துவிட்டது, கூடவே உற்சாகமும்.
செ. பரிமேலழகர், செயின்ட் லூயிஸ், மிசௌரி |