முன் சுருக்கம்:
2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.
நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலகம் மூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.
அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி என்ன என்று நாரதர் கேட்டார். லக்ஷ்மி தேவியும், விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துகளை அவ்வப்போது உரைத்திருக் கிறார்கள். தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.
அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணிபுரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப்பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படியிருந்தாலும் தலைக்கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாகப் பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலான வரை தயங்காமல் செய்வார்.
அருணிடம் பலர் கேட்கும் கேள்விகளுக்கு, அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
பால விஹார் அருகிலிருந்த ஒரு மைதானத்தில் கிரிக்கெட் ஆடி முடித்து விட்டு அருணும் அவர் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு புது நிறுவனம் ஆரம்பிக்க முயன்று கொண்டிருந்த சுந்தர் தன் பிரச்சனையை எழுப்பினார்.
"அருண், நீங்கதான் சில venture capital நிறுவனங்களோட தொடர்பு வச்சிருக்கீங்களே, உங்களால என் கேள்விக்கு விளக்கம் சொல்ல முடியும்னு நினைக்கிறேன்."
அருண் முறுவலுடன், "இந்தக் காலத்துல VC சம்பந்தப்பட்ட எந்தக் கேள்விக்கும் சுலபமான விளக்கம் இல்லைன்னுதான் நினைக்கிறேன்! இருந்தாலும் பரவாயில்லை, கேளுங்க, என்னால முடிஞ்ச அளவுக்குப் பாக்கலாம்!"என்றார்.
சுந்தரும் தலையாட்டினார். "எல்லாரும் அப்படித்தான் சொல்றாங்க! என் கேள்வி என்னன்னா, இப்ப VC நிறுவனங்கள் மூலதனம் போடறத்துக்கு விதிக்கற நிபந்தனைகளைப் பாத்தா ஆரம்பிச்சவங்களுக்குக் கடைசியில ஒண்ணுமே மிஞ்சாது போலிருக்கே. அதுக்குச் சரியான பலனே இல்லன்னா எதுக்காக ஒரு கம்பனி ஆரம்பிச்சு, உசிரைக் குடுத்து வளர்க்கணும்னு விரக்தியாத் தோணுது. என்ன சொல்றீங்க?"
அருண் கண்ணை மூடிக் கொண்டு சோகமாகத் தலையாட்டினார். "உங்க விரக்தி எனக்கு நல்லாப் புரியுது சுந்தர். இப்ப நிறுவனங்களைத் தொடங்கற பலரும் இப்படித்தான் நினைக்கிறாங்க. அப்படியேப் பார்த்தா யாரும் நிறுவனங்களே ஆரம்பிக்க மாட்டாங்க! ஆனா, இந்த விஷயத்தை VC பேராசைங்கற ஒரே கோணத்துல மட்டும் பாக்கக் கூடாது. அவங்க கண்ணோட்டத் துலயும் பாக்கணும். இன்னும் முக்கியமா, எதுக்காக ஒருத்தர் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி வளர்க்கணுங்கற கண்ணோட்டத்துலயும் ஆராய்ஞ்சு பாக்கணும்." என்றார்.
சுந்தர் ஆச்சரியம் கலந்த வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டார். " ஹூம்! ... இந்த நிலைமை VC பேராசையினால மட்டும் இல்லங்கறீங்களா? எப்படிச் சொல்றீங்க? நான் பேசிப் பார்த்ததுல எனக்கு நேர் எதிர் எண்ணம்தான் தோணுது!"
அருண் பெருமூச்சு விட்டார். "புரியுது, சுந்தர், புரியுது! ஆனா, நான் சொல்றதைக் கொஞ்சம் பொறுமையாக் கேட்டுட்டு அப்புறம் ஒரு முடிவுக்கு வாங்க."
சுந்தர் நம்பிக்கையில்லாமல் தயங்கி மெள்ள இழுத்துப் பேசினார். "... ஹூம் ... சரி ... உங்க மேல இருக்கற மதிப்பால கேட்டுக்கறேன். ஆனா ஒண்ணு மட்டும் சொல்லிடறேன்! நிச்சயமா VC-களைப் பத்தின இந்த என் எண்ணத்தை மாத்தறது எவரஸ்ட் ஏறரதுக்குச் சமானம்! வீண் முயற்சியாகவும் முடியலாம்!"
அருண் வாய் விட்டுச் சிரித்தார். "நான் புயல் காத்துக்கு எதிராக் குரல் குடுத்துப் பழக்கப் பட்டவன். அதைப் பத்திக் கவலைப்படாதீங்க. ஏதோ கேட்டுட்டீங்க, சொல்றத சொல் லிடறேன். அப்புறம் உங்க எண்ணம், உங்க விஷயம்!"
சுந்தரும் சிரித்தார். "சரி, சொல்லுங்க!"
அருண் மலையேறத் தொடங்கினார்! "இப்ப இருக்கற நிலைமை டாட்-காம்கள் நாட்-காம்களா மாறினதோட மிச்ச விளைவுன்னுதான் சொல்லணும். அந்தக் கொப்புளத்தின் உச்சியில ஏராளமான நிறுவனங்கள் எக்கச்சக்க விலை மதிப்புல மூலதனம் திரட்டினாங்க. ஆனா அதுல பெரும்பாலான நிறுவனங்கள் ஒண்ணு திவாலாப் போச்சு; இல்லன்னா, அவங்க அப்புறம் பணம் திரட்டறச்சே, முதல்ல போடப்பட்ட மூலதனத் தோட மதிப்பு அழிஞ்சுடுச்சு - புது நிறுவனத்துக்குப் பணம் போடறா மாதிரி ஆகிப் போச்சு. அதுனால VC நிறுவனங்கள் போட்ட பணம் நிறைய விரயமாயிடுச்சுன்னுதான் சொல்லணும்."
சுந்தர் மாறாமல், "அதுனால?" என்றார்.
அருண் அடுத்த படிக்கு ஏறினார்! "இப்ப யார் கிட்டயாவது நூறு டாலர் பணம் வாங்கி அதை நூத்தி ஐம்பதாத் திருப்பி குடுக்குற பிஸினஸ் நடத்தறீங்கன்னு வச்சிக்குங்க. அதுல முதல் ஐம்பது டாலர் விரயமாயிடுச்சுன்னா, இரண்டாவது ஐம்பதை நூத்தி ஐம்பதா பெருக்கணும்னா நீங்க என்ன செய்ய வேண்டியிருக்கும்? சரி, நூத்தி ஐம்பது வரலைன்னாலும், குடுத்த நூறையாவது திருப்பிக் குடுக்கணும்னா என்ன செய்ய முடியும்? பாதி லாபத்துக்குப் பதிலா, இரு மடங்கு லாபம் பெறணுங்கற இக்கட்டுல மாட்டிப்பீங்க இல்லையா?! அந்த நிலையிலதான் இப்ப VC பிஸினஸ் இருக்கு!"
சுந்தர் நினைத்துப் பார்க்க ஆரம்பித்தார். "இது கொஞ்சம் வித்தியாசமான கோணமாத்தான் இருக்கு. ஆனா அதுனால அவங்க ஏன் இந்த மாதிரி மிகவும் கடினமான மூலதனத் தேர்வு விதிமுறைகள் வச்சிருக்காங்க, ஏன் இப்படிப் பட்டக் கடுமையான லாப நிபந்தனைகளையும் விதிக்கறாங்கன்னு புரியலை. இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்?"
அருண் தொடர்ந்து விளக்கினார். "வாங்கின பணத்தைத் திருப்பிக் கொடுக்கவே இப்போ போடற ஒவ்வொரு டாலரும் ரெண்டு பங்கா பெருக்க வேண்டியிருக்கறதால, புதுசா பணம் போடறப்போ அது விரயமாகிற அபாயத்தை மிகவும் குறைக்க வேண்டி, பெரிய வெற்றியடைய மிகவும் வாய்ப்புள்ள நிறுவனங் களாத் தேடிப் போடறாங்க. மேலும், அந்த மாதிரி வாய்ப்புள்ள நிறுவனங்களில இன்னும் நிறைய லாபம் பெற்றால்தானே போன இழப்புகளுக்கு ஈடு கட்ட முடியும்? அதுனால, போட்ட பணத்தை ரெண்டு பங்கா முதல்ல லாபத்தோட மீட்டுட்டு மீதியை மொத்தமா பங்கு போட்டுக்கற மாதிரி நிபந்தனை விதிக்கறாங்க. அது கடுமைதான். ஆனாலும் அப்படிச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் இருக்கு. அதுனாலதான் அவங்க அந்த மாதிரி ரொம்ப ஜாக்கிரதையா தேர்ந்தெடுக்கறாங்க, நிறைய நிபந்தனைகளையும் விதிக்கறாங்க. சும்மா பேராசைன்னு மட்டும் சொல்லிட முடியாது."
சுந்தர் தளர ஆரம்பித்தார். "ஓ, அப்படிச் சொல்றீங்களா? இப்போ புரியுது. எல்லா VC-களுமா இந்த மாதிரி இக்கட்டுல இருக்காங்க? சில நிதிகள் இப்ப சமீபத்துல திரட்டப்பட்டிருக்கு இல்லையா?"
அருண் தொடர்ந்தார். "ஆனா இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கிட்டு நிறைய இழக்காத புது நிதிகளிலிருந்தும் போடற பணத்துக்குப் பெருத்த லாபம் பெற முயற்சிக்கறவங்களும் சிலர் இருக்காங்க. இல்லவே இல்லைன்னு சொல்லிட முடியாது தான். ஆனா பொதுவா அந்த மாதிரி நிதிகள் போடற விதிகள் கொஞ்சம் அனுகூலமாத்தான் இருக்கு. எப்படியிருந்தாலும் நீங்க ஒண்ணு யோசிச்சுப் பார்க்கணும். இப்ப நிறுவனம் ஆரம்பிக்கற நிறைய பேருக்கு 1999 / 2000-ல இருந்த நிலைமை மட்டுந்தான் தெரியும். அது நிறுவனம் ஆரம்பிக்கறவங்களுக்கு ரொம்ப சுலபமா இருந்துச்சு. நிதி திரட்டறதும், VC-கள் கிட்ட இருந்து மிக அனுகூலமான விதிகள் வாங்கறதும் எளிதாப் போச்சு. அந்தப் பழைய சூழ்நிலையையே மனசுல வச்சுகிட்டு எல்லாரும் இப்ப இருக்கற சூழ்நிலையைப் பார்த்துக் கடுப்படையறாங்க. ஆனா டாட்-காம் கொப்பளத்துக்கு முன்னால, அவ்வளவு எளிதாயில்லை, ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்துச்சு. நானே அதுல அல்லல் பட்டிருக்கேன். இப்ப இருக்கற சூழ்நிலை அதே பழைய நிலைக்குப் போறத்துக்கான ஒரு திருத்தம்னும் சொல்லலாம். என்ன, கொஞ்சம் மிதமிஞ்சிய திருத்தமாயிடுச்சு அவ்வளவுதான்."
அருண் கூறியதையெல்லாம் பொறுமையாகக் கேட்ட சுந்தர், "சரி அருண். நான் அதை யெல்லாம் இன்னும் ஆழமா யோசிச்சுப் பாக்கறேன். ஆனா, காரணம் என்னன்னாலும், இந்தச் சூழ்நிலையில எதுக்காக என்னை மாதிரி ஒருத்தர் ஒரு கம்பனி ஆரம்பிச்சு அவஸ்தைப் படணும்னு தோணுது. அதுக்கு என்ன சொல்றீங்க?" என்றார்.
சுந்தரின் விரக்தி மனப்பாங்கான மலையின் ஒரு சிகரத்தை அடைந்து கொடி நாட்டி விட்ட அருண், அடுத்த உச்சிக்கு ஏற அந்தக் கேள்விக்கு விடையளிக்க ஆரம்பித்தார்.
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |