விடுகதைகள்
1. நீண்ட உடலிருக்கும் தூண் இல்லை
உடலில் சட்டையிருக்கும் உயிரில்லை
துயிலுக்கோ சுகமிருக்கும் மெத்தையில்லை -
அது என்ன?

2. நீரிலே உயிர் பெற்று
நிலத்திலே நீர் இறைப்பான் -
அவன் யார்?

3. நிரப்பலாம் பிடிக்க முடியாது
உணரலாம் காண முடியாது -
அது என்ன?

4. தூரத்தில் நின்று பார்க்கக் கறுப்பாயிருந்தது
பக்கத்தில் போய்ப் பார்க்க பளபளப்பாயிருந்தது
கையில் எடுத்துப் பார்க்கச் சிவப்பாயிருந்தது
சுவைத்துப் பார்க்க இனிப்பாயிருந்தது -
அது என்ன?

5. தேடாமல் கிடைப்பது
தேடும் செல்வத்தைக் குறைப்பது -
அது என்ன?

6. தவழும்போது ஒரு பெயர்
விழும்போது ஒரு பெயர்
உருளும்போது ஒரு பெயர் -
அது என்ன?

7. டேரா கிழிந்து போனால் தைக்க முடியாது
ராஜாத்தி ஓடிப்போனால் பிடிக்க முடியாது
ரோஜாப்பூ உதிர்ந்து போனால் பொறுக்க முடியாது -
அவை என்ன?

8. தலையில்லா ராசா வெட்டிய
குளத்துக்குக் கரையில்லை
கரையில்லாத குளத்தில் முளைத்த
கோரைக்கு வேரில்லை
வேரில்லாத கோரையைத்
தின்ன வந்த மானுக்குக் காலில்லை
காலில்லாத மானை எய்ய வந்த
வேடனுக்கு அம்பில்லை -
அது என்ன?

9. சுத்தி சூரமுள்ளு
நடுப்புற நல்ல வெல்லம் -
அது என்ன?

10. தச்சன் செய்யாத பெட்டி
தானே திறந்து மூடும் பெட்டி -
அது என்ன?


விடைகள்

1. தலையணை 2. மின்சாரம் 3. காற்று 4. தேன்கூடு 5. சோம்பல் 6. மேகம் - மழை - நீர் 7. வான் - நிலா - விண்மீன் 8. சூரியன் - கடல்பாசி - மீன் - வலை 9. பலாப்பழம் 10. கண்

© TamilOnline.com