ஐந்து முட்டாள்கள்
ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் உரையாடிக் கொண்டே அரண்மனைப் பூங்காவில் உலாவிக் கொண்டிருந்தார்கள்.

''பீர்பால்! என் வாழ்நாளில் முட்டாளையே சந்தித்தது இல்லை. நம் நாட்டில் முட்டாள்களே இல்லை என்று நினைக்கிறேன். நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டார்.

''பேரரசே! எல்லா நாட்டிலும் முட்டாள்கள் நிறைய இருக்கிறார்கள். உங்கள் கண்களில் அவர்கள் படவில்லை'' என்றார் பீர்பால்.

எரிச்சல் அடைந்த அக்பர், ''நான் என்ன சொன்னாலும் எதிர்த்துப் பேசுவதே உமக்கு வேலையாகி விட்டது. ஒரு வாரம் தவணை தருகிறேன். ஐந்து முட்டாள்களை என் முன்னால் கொண்டுவந்து நீர் நிறுத்தவேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் இந்த நாட்டில் இருக்கக் கூடாது'' என்று கோபத்துடன் சொன்னார்.

ஐந்து நாட்களாக நகரம் எங்கும் அலைந்தும், ஒரு முட்டாள்கூட கண்ணில் படவில்லை. ஆறாம் நாள் வீதியில் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே குதிரையில் ஒருவன் வந்தான். அவன் தலையில் புல் கட்டு இருந்தது. அவனை நிறுத்தி, 'புல் கட்டைச் சுமந்தபடி ஏன் குதிரையில் அமர்ந்து வருகிறாய்? குதிரையின் முதுகிலேயே புல் கட்டை வைத்திருக்கலாமே.'' என்று கேட்டார்.

அதற்கு அவன், ''என்னைச் சுமந்து வரவே இந்தக் குதிரை துன்பப்படுகிறது. புல் கட்டையும் வைத்தால் இதன் துன்பம் அதிகம் ஆகாதா? அதனால்தான் நானே புல் கட்டைச் சுமந்து வருகிறேன்'' என்றான்.

இதைக் கேட்டதும், 'ஆஹா! ஒரு முட்டாள் கிடைத்தான்' என்று மகிழ்ந்தார் பீர்பால். 'நாளை காலை நீ அரண்மனைக்கு வா. அரசரிடம் உனக்குப் பரிசு வாங்கித் தருகிறேன்'' என்று அவனிடம் சொன்னார்.

சிறிது நேரம் சென்றது. வேகமாக ஓடி வந்த ஒருவன் பீர்பால் மீது மோதி நின்றான். ''எதிரே ஒருவர் வருவது கண்களுக்குத் தெரியவில்லையா?'' என்று கோபத்துடன் கேட்டார் பீர்பால்.

''ஐயா! என் குரல் எவ்வளவு தொலைவு கேட்கிறது என்று அறிய விரும்பினேன். அதற்காகக் குரலைத் துரத்திக் கொண்டு ஓடி வந்தேன். உங்கள் மீது மோதியதால் என் முயற்சியில் தோற்றுவிட்டேன்'' என்று அலறினான் அவன்.

வியப்படைந்த அவர், 'நாளை அரண்மனைக்கு வா. அரசரிடம் பரிசு வாங்கித் தருகிறேன்' என்றார்.

இரவு நேரம் வந்தது. தெருவிளக்கு வெளிச்சத்தில் ஒருவன் எதையோ தேடிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ''என்ன தேடுகிறாய்?'' என்றார். ''ஐயா! நான் பக்கத்து ஊரில் இருந்து இங்கு வந்தேன். என் பணப் பை வழியில் எங்கோ விழுந்து விட்டது. நான் வந்த வழி எங்கும் இப்பொழுது இருட்டாக இருக்கும். இருட்டில் தேடக்கூடாது என்பதால், வெளிச்சம் உள்ள இந்த இடத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன்'' என்றான் அவன்.

அவனையும் மறுநாள் காலை அரண்மனைக்கு வரும்படி சொன்னார் பீர்பால்.

பொழுது விடிந்தது. அரண்மனைக்குச் சென்றார். மூன்று முட்டாள்களும் அவருக்காக அரண்மனை வாயிலில் காத்திருந்தார்கள். மூவரையும் அழைத்துக் கொண்டு அரசரிடம் சென்றார்.

''பேரரசே! இவன் தன் தலையில் புல் கட்டைச் சுமந்து குதிரையில் சென்று கொண்டிருந்தான். தன் தலையில் புல் கட்டைச் சுமந்தாலும் அதையும் குதிரைதான் சுமக்கிறது என்பதை அறியாத முட்டாள் இவன். பேரரசே! இந்த இரண்டாவது முட்டாள், தன் குரல் எவ்வளவு தொலைவு கேட்கும் என்பதைக் கேட்க விரும்பி, உரத்துக் குரல் கொடுத்தபடி, அதைத் துரத்திக் கொண்டே ஓடினான். பேரரசே! இந்த உரத்துக் குரல் கொடுத்தபடி அதைத் துரத்திக் கொண்டே ஓடினான். ''பேரரசே! இந்த மூன்றாமவன் எங்கோ தொலைத்த பணத்தைத் தெரு விளக்கு வெளிச்சத்தில் தேடிக் கொண்டிருந்தான். 'வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட முடியும்' என்கிறான்'' என்றார் பீர்பால்.

''மூன்று பேரும் சரியான முட்டாள்கள் தான்'' என்று சிரித்த அக்பர், 'ஐந்து முட்டாள்களையல்லவா அழைத்துவரச் சொன்னேன். மீதி இரண்டு பேர் எங்கே?'' என்று பீர்பாலிடம் கேட்டார்.

''பேரரசே! நான்காவது முட்டாள் நான்தான்.'' என்றார் பீர்பால்.

''பீர்பால்! உம்மை அறிவு உடையவர் என்றல்லவா நினைத்தேன். எதனால் அப்படிச் சொல்கிறீர்?'' என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அக்பர்.

''பேரரசே! அமைச்சராகிய எனக்கு எத்தனையோ இன்றியமையாத வேலைகள் இருக்க, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி ஒரு வாரமாக அலைந்தேனே. என்னை விட முட்டாள் வேறு யார் இருக்க முடியும்?''

''சரி. நான்காவது முட்டாளாக உம்மை ஏற்றுக் கொள்கிறேன். ஐந்தாவது முட்டாள் யார்?''என்றார் அக்பர்.

''பேரரசே! கோபம் கொள்ளாதீர்கள். அந்த ஐந்தாவது முட்டாள் நீங்கள்தான்.''

''நான் முட்டாளா? பீர்பால் என்ன உளறுகிறீர்? இதை நீர் மெய்ப்பிக்காவிட்டால் உம் உடலில் உயிர் இருக்காது'' என்று கோபத்துடன் கத்தினார் அக்பர்.

''பேரரசராகிய உங்களுக்கு எவ்வளவோ வேலைகள் உள்ளன. சிற்றரசர்கள் பலரும் உங்களைச் சந்திப்பதற்குப் பல நாட்களாகக் காத்திருக்கிறார்கள். எல்லா வேலைகளையும் ஒதுக்கி விட்டு, முட்டாள்களைச் சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கியிருக்கிறீர்களே! அதனால் தான் உங்களையும் முட்டாள்களில் ஒருவராகச் சேர்க்க வேண்டி வந்தது.'' என்றார்.

அதில் உண்மை இருப்பதை உணர்ந்தார் அக்பர். ''ம்ம்ம்...என்னையும் முட்டாளாக்கி விட்டீர். அரசர் எதற்கு முதன்மை தரவேண்டும் என்பதை உம்மால் உணர்ந்து கொண்டேன். நன்றி'' என்றார்.

''பேரரசே! இவர்கள் மூவருக்கும் பரிசு கொடுத்து அனுப்பி வையுங்கள். பரிசு கிடைக்கும் என்று சொல்லித்தான் இவர்களை அழைத்து வந்தேன்'' என்றார் பீர்பால். அவர்கள் மூவருக்கும் பரிசு கொடுத்து அனுப்பி வைத்தார் அக்பர்.

© TamilOnline.com