தமிழ்ப்பதிப்பக முன்னோடி சக்தி வை. கோவிந்தன்
மேற்குலகின் தொடர்பால் தமிழுக்கு அச்சுஊடகம் வந்தது. இதையடுத்துத் தமிழில் மதவேறுபாடு இன்றி எல்லோருக்கும் அச்சு ஊடகத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு படிப்படியாகத் திறந்துவிடப்பட்டது. ஏடுகளாகக் கிடந்த பழந்தமிழ் இலக்கியங்கள் 1835க்குப் பிறகுதான் அச்சிடப்படத் தொடங்கின. தொடர்ந்து, தமிழ் இலக்கியப் பாரம்பரியம் பற்றிய பிரக்ஞைக்கான தேடல் முனைப்புற்று வளரத் தொடங்கியது. தமிழர்களிடையே புதிய விழிப்பு நிலை உருவாவதற்கான சமூகக் காரணிகளும் வளர்ந்தன. அச்சிடப்படும் நூல்களின் எண்ணிக்கையும் பெருகின. 1835ல் அச்சுப் பயன்பாட்டில் இருந்த கட்டுப்பாடுகள் நீங்கின. அச்சு இயந்திர சாலைகள் வைத்திருக்கும் உரிமை சுதேசிகளுக்கு வழங்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் பல பதிப்பகங்கள் தோன்றின. புத்தகங்கள் வெளியிடும் போக்கை, அவை துரிதப்படுத்தின. பல்வேறு துறைகளிலும் புத்தகங்களுக்கான தேவை இருப்பதைக் கல்வி வளர்ச்சி வலியுறுத்தியது. புத்தம் புதிய கருத்துகளைப் புதிய இலக்கிய வடிவங்களை, தமிழில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிடக் கூடிய ஆர்வம், விழிப்பு பரவலாகியது. இந்தக் காலகட்டத்தின் தவிர்க்க முடியாத பிரதிநிதியாக சக்தி வை. கோவிந்தன் வளர்ந்தார்.

தமிழ்ச்சூழலில் கால்நூற்றாண்டுக்கும் அதிகமாகவே தமிழ்ப் பத்திரிகைத்துறையிலும் புத்தக வெளியீட்டுத்துறையிலும் பல்வேறு புதுமைகளைச் சாதித்து பதிப்புலகில் ஓர் முன்னோடியாகவே வாழ்ந்து மறைந்தவர் சக்தி வை. கோவிந்தன்.

வை.கோவிந்தன் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராயவரத்தில் பிறந்தவர். எட்டாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் பர்மாவுக்குச் சென்று தம் தந்தையின் தேக்குமர ஆலையிலும், செட்டிநாடு பாங்க்கிலும் வேலை செய்தார். அப்போது அவருக்கு 14 அல்லது 15 வயது இருக்கும். பணம் கொடுத்து வாங்கும் தொழில் வை.கோவிந்தனுக்குப் பிடிக்கவில்லை. அதாவது மக்களைக் கசக்கிப் பிழிந்து பணம் வாங்குவது அவர் மனசுக்குப் பிடிக்கவில்லை.

பர்மாவில் வை.கோவிந்தன் இருந்தபோது சாமிநாத சர்மா, சுத்தானந்த பாரதியார் உள்ளிட்டோருடன் நெருங்கிப் பழகி வந்தார். வட்டித் தொழில் பிடிக்காததால் தாய்நாடு திரும்பினார். பின்னர் வை.கோவிந்தன் கடன் தொல்லை காரணமாகப் பங்காளி வீட்டுக்குத் தத்துக் கொடுக்கப்பட்டார். தத்து எடுத்த அப்பாவின் பெயர் வைரவன் செட்டியார். தாயார் பெயர் முத்தையாச்சி.

தனது 17, 18ஆவது வயதில் ஒரு லட்ச ரூபாயைக் கொண்டு சென்னையில் சுயதொழில் செய்ய ஆரம்பித்தார். சுத்தானந்த பாரதியாரை வைத்து 'சக்தி அச்சகம்' தொடங்கினார். பத்திரிகைத்துறையில் அச்சுத் தொழிலில் எந்தவித முன்அனுபவமும் இல்லாமல் தன் பாரம்பரிய வியாபார அறிவு ஒன்றையே முதலீடாகக் கொண்டு 1939 ஆகஸ்டில் 'சக்தி' என்ற பெயரில் பத்திரிகையை ஆரம்பித்தார்.

1939முதல் 1954 வரை கொஞ்சம் இடைவெளிவிட்டு மொத்தம் 141 சக்தி இதழ்கள் வெளிவந்துள்ளன. அந்த இடைவெளி 1951 டிசம்பர் முதல் 1953 அக்டோபர் முடியும் வரை. ஒரு இதழின் விலை 4 அணா மட்டுமே. சக்தி தோன்றுவதற்கு முன்னர் தோன்றிய வேறு பத்திரிகைகளின் விலை கூடுதலாகவும் இருந்துள்ளது. 'பஞ்சாமிர்தம்' இதழ் ஒன்றின் விலை 8 அணா 1926களில். ஆக வியாபார நோக்கத்தைக் குறியாகக் கொள்ளாமல் பத்திரிகை மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற நோக்கம்தான் வை.கோவிந்தனுக்கு முதன்மையாக இருந்தது.

காந்திய சிந்தனையின் தாக்கம், அரசியல் நோக்கு சக்தியில் வெளிப்பட்டது. பல்வேறு வகையான இலக்கியம் பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாகத் தமிழ் இலக்கியப் பரப்பு முழுவதும் கவனம் செலுத்தியது. மொழிக் கொள்கையிலும் ஓர் தெளிவான நிலைப் பாட்டைக் கொண்டிருந்தது. திராவிட இயக்கப் பத்திரிகையான 'விடுதலை' பின்பற்றிய எழுத்துச் சீர்திருத்தங்களைக் குறிப்பிட்டு சக்தியும் அதைப் பின்பற்றத் தொடங்கியது.

சக்தி, படிப்படியாக வளர்ச்சியடைந்து தமிழில் குறிப்பிடத்தக்க பத்திரிகையாக உயர்ந்தது. பத்திரிகை வடிவமைப்பிலும் அச்சமைப்பிலும் மிகுந்த கவனம் கொள்ளப்பட்டது. ஆசிரியர்களாக தி.ஜா. ரங்கநாதன், கு. அழகிரிசாமி ஆகியோர் பணியாற்றினர். தொடர்ந்து தொ.மு.சி. ரகுநாதன், விஜயபாஸ்கரன் உள்ளிட்டோரும் சக்தி காரியாலயத்தில் பணிபுரிந்துள்ளனர்.

கட்சி வேற்றுமையின்றி எல்லாக் கட்சித் தலைவர்களின் சிறந்த கட்டுரைகளும் சக்தியில் இடம்பிடித்திருந்தன. பத்திரிகையின் ஒவ்வொரு இதழிலும் ஆர்ட் காகிதத்தில் எட்டுப் பக்கங்கள் சேர்த்து, அவற்றில் புகைப்படங்களை வெளியிட்டார்கள். விளம்பரங்களை வெளியி டுவதில் கூட சக்திக்கு ஒரு கொள்கை இருந்தது. எடுத்துக்காட்டாக, மகாத்மாகாந்தி, குமரப்பா முதலியவர்கள் கண்டனம் செய்த ஓர் உணவுப் பொருளை விற்பனை செய்யும் ஒரு கம்பெனியார் குமரப்பாவின் ஒரு கட்டுரையைச் சக்தி வெளியிட்டதற்காக விளம்பரம் கொடுப்பதை நிறுத்திவிட்டார்கள். அந்தக்கட்டுரைக்கு மறுப்பு போட்டால் பல பக்கங்கள் விளம்பரம் தருவதாகச் சொன்னார்கள்.

'பத்திரிகையை நிறுத்தினாலும் நிறுத்துவேனே ஒழிய மகாத்மா கருத்துக்கு மறுப்புப் போடமாட்டேன்' என்று உறுதிபடக் கூறினார் கோவிந்தன். பிற்காலத்தில் பத்திரிகை தொடர்ந்து வரமுடியாமல் நின்று போனதற்கு விளம்பர வருமானமின்மையும் ஒரு காரணமாக அமைந்திருந்தது.

குழந்தைகளுக்கு 'அணில்' என்ற வாரப் பத்திரிகையையும், பெண்களுக்கு 'மங்கை' என்ற மாதப்பத்திரிகையையும் பிரத்தியேகமாகத் தொடங்கினார். மேலும் சிறுகதைகள் மட்டும் கொண்டு 'கதைக்கடல்' என்ற பெயரில் மாதம் ஒரு புத்தகத்தையும், 'காந்திஜி கட்டுரைகள்' கொண்டு மாதம் ஒரு புத்தகத்தையும் அவர் ஏககாலத்தில் வெளியிட்டார். வெளியீட்டுத் துறையில் இவை புதுமையாகவும் இருந்தன.

தொடர்ந்து சமுதாயத்துக்கு வேண்டிய மானுடப்பண்பை மேம்படுத்தும் அரிய நூல்களைத் தமிழில் வெளியிட ஆர்வம் கொண்டார். டால்ஸ்டாய் எழுதிய, 'இனி நாம் முதலில் செய்ய வேண்டியது யாது' என்ற நூலை முதலில் வெளியிட்டார். தொடர்ந்து பிறநாட்டு இலக்கியங்களையும், மற்றவகையான அறிவியல் நூல்களையும் தமிழ்நாட்டில் வெளியிட்டு வந்த நிறுவனங்களுள் சக்திக்கு முதலிடம் உண்டு. அச்சமைப்பு, பைண்டிங் போன்ற அம்சங்களில் ஆங்கிலப் புத்தகங்களுக்கு இணையான முறையில் தமிழ் நூல்களை வெளியிட்ட பெருமை வை. கோவிந்தனுக்குத்தான் உண்டு. தமிழ் பதிப்புச் செயற்பாட்டில் கோவிந்தன் முன்னோடியாக இருந்துள்ளார்.

தமிழில் மலிவுப் பதிப்புகளை வெளியிட்டுப் பலருக்கும் வழிகாட்டியுள்ளார். ஏழரை ரூபாய்க்கு விற்ற பாரதி கவிதைத் தொகுதியை ஒன்றரை ரூபாய் விலைக்கு வெளியிட்டுத் தமிழ்நாட்டின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பினார். அத்துடன் பாரதியின் வாழ்க்கை வரலாற்றைப் பாரதியாரின் மகள் தங்கம்மா பாரதியைக் கொண்டும், பாரதியோடு நெருங்கிப் பழகிய வ.ராவைக் கொண்டும் எழுதுவித்து இரண்டு நூல்களாக வெளியிட்டவரும் கோவிந்தன் தான். தமிழில் பாரதியைப் பரப்பியவர்களுள் கோவிந்தனுக்கும் ஓர் இடமுண்டு.

தமிழில் முதன்முதல் தரமான பதிப்புகளில் புத்தகங்களை வெளியிட்டது சக்தி காரியாலயம்தான். அச்சு வசதிகள் அவ்வளவு முன்னேற்றமில்லாத அந்தக் காலத்திலேயே கோவிந்தன் தனது விடா முயற்சியாலும் நுட்பத்தினாலும் அச்சமைப்பில் புதுமையும் நேர்த்தியும் புகுத்தினார். சுய அனுபவம் அவருக்குக் கற்றுக் கொடுத்தது அதிகம். அவற்றின்பால் இலட்சியப் பிடிப்பில் இருந்து விலகாமல் அவர் சாதித்தது அதிகம். தமிழுக்கு விட்டுச் சென்ற சுவடுகள் அதிகம்.

கோவிந்தன் 120க்கும் மேற்பட்ட புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். மனித சமுதாயத்தை பண்படுத்தும் மேம்பட்ட சிந்தனை வாயில்களைத் திறக்கும் அரிய நூல்களைத் தமிழுக்கு வழங்கியுள்ளார். ரஷ்ய மொழி பெயர்ப்புகளை அதிகம் வெளியிட்டிருக்கிறார். 'போரும் வாழ்வும்' நான்கு பாகங்கள் மொத்தம் 2500 பக்கங்களில் நல்ல அச்சாக வெளியிட்டிருக்கிறார். கோவிந்தன் வெளியிட்ட நூல்களுள் 90 சதவிகிதம் மொழிபெயர்ப்பு நூல்கள்தான். கம்யூனிச சிந்தனையைப் பரப்பும் நூல்களை வெளியிட் டமையால்தான் கோவிந்தனால் முன்னுக்கு வர முடியவில்லை என்ற அபிப்பிராயம்கூட சில மட்டங்களில் நிலவுகிறது.

இன்று புத்தகத் தொழிலிலே ஏற்பட்டுள்ள மகத்தான வளர்ச்சிக்களுக்கெல்லாம் முன்னோடியாக விளங்கியவர் வை.கோவிந்தன். பழந்தமிழ் இலக்கியங்களையும் இலக்கிய ஆராய்ச்சி, சமய நூல்களையும் தவிர மற்ற புதிய நூல்களை வெளியிடும் வாய்ப்பே இல்லாதிருந்த அக்காலத்தில் மேற்கே மெத்த வளர்ந்த புத்தம் புதிய கலைகளையெல்லாம் துணிவோடு தமிழில் வெளியிட்டவர் வை. கோவிந்தன். அச்சுத் தொழிலிலும் அவர் பல சோதனைகளை நடத்தித் தமிழ் உலகிற்கு வழிகாட்டியுள்ளார். அவர் வெளியிட்ட ‘சோவியத்ருஷ்யா’, ‘பிளேட்டோவின் அரசியல்’ போன்ற நூல்கள் அச்சு, பைண்டிங் இரண்டிலும் இன்றுவரை இணையற்று விளங்கு கின்றன என்று பதிப்பாளர் கண.முத்தையா குறிப்பிடுவது மிகையானதல்ல. தெள்ளத் தெளிவான கணிப்பு இது. தமிழ்நூல் பதிப்பக வரலாறு எழுதும் போது சக்தி வை. கோவிந்தனுக்கான இடம் பெரிது.

கோவிந்தன் தொடர்ந்து நல்ல புத்தகங்களைத் தேடிப்படிக்கும், சேகரிக்கும் தன்மை கொண்டவர். இதனால் என்ன புத்தகம் வெளியிட வேண்டும் என்பது போன்ற திட்டமிடல் அவருக்கு இயல்பாகவே உண்டு. இந்தப் பண்பால் தமிழ்ச் சிந்தனைக்குப் புதுவளம் சேர்க்க முடிந்தது. தமிழ்ப் பதிப்புலகில் ஓர் முன்னோடியாக செயற்பட முடிந்தது.

ஆனாலும் வாழ்க்கையில் அவர் கோடிகளைக் குவித்தவர் அல்லர். அறிவுத் தேடலுக்கும் சிந்தனைப் பிரவாகத்துக்கும் உரிய வளங்களைக் கொடுத்த அவரால் சுகபோக வாழ்க்கையை வாழ முடியவில்லை. கடைசிக் காலத்தில் ரொம்பவும் சிரமப்பட்டு மருந்துச் செலவுக்குக் கூட காசு இல்லாமல் தனியார் விடுதி ஒன்றில் 16.10.1966அன்று இறந்தார். அப்போது அவருக்கு வயது 53.

தமிழ்ப் பத்திரிகைத்துறையிலும் பதிப்பு முயற்சியிலும் குறிக்கோள் சார்ந்து செயற்பட்ட பெருந்தகை. தமிழ் சிந்தனை மரபுக்கு அவர் வழங்கிய கொடை பெரிது. முன்னோடிச் சிந்தனையாளனாகவும் செயற்பாட்டாளராகவும் வாழ்ந்துவிட்டுச் சென்ற சுவடுகள் நீளமானது ஆழமானது. ஆனால் அவருக்கு வாழ்க்கை கொடுத்த பரிசு ஏழ்மைதான்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com