அன்புள்ள விஸ்வத்திற்கு,
அப்பா எழுதிக்கொள்வது. நீ எப்படி இருக்கிறாய்? ஜமுனா மற்றும் குழந்தைகளின் சௌக்கியத்திற்கு எழுதவும். இங்கு நானும், ராம்ஜி, மைதிலி மற்றும் பேரன் விக்னேஷ¤ம் சௌக்கியம். டில்லி குளிர் எப்படி இருக்கிறது? நீ புதிய பைக் வாங்கியிருப்பது குறித்து மிகவும் சந்தோஷம். பைக்கை ஓட்டும்போது மிகவும் கவனமாக இரு. ஆபீசில் அடுத்த இன்கிரிமெண்ட் கொடுத்தார்களா?
பரசுவிடமிருந்து போன வாரம் லெட்டர் வந்தது. அங்கு யாவரும் சௌக்கியமாம். ருக்மிணியின் தம்பி ஒருவன் இருந்தானே.. அவன் இஞ்சினியரிங் படித்து முடித்துவிட்டு இப்பொழுது அமெரிக்காவிற்குப் போகிறானாம். பாஸ்டனில் ஏதோ யூனிவர்சிட்டியாம். அவர்களே ஸ்காலர்ஷிப் கொடுத்து அழைத்துக் கொள்கிறார்கள். காலம் ரொம்பவே மாறிவிட்டதுடா.
இந்த ·ப்ளாட்டிற்குக் குடிவந்து இன்றுடன் மூன்று மாதமாகிவிட்டது. விக்னேஷ் படிகளில் இறங்கிஇறங்கி ஓடுகிறான். அவனைப் பிடிப்பதற்கும் தூக்கி வைத்து அலைவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. அவனுக்காகவே வாசல் கதவுக்கு முன் கிரில் கதவு வைக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் எதிர்·ப்ளாட்டிற்கு ஓடிவிடுகிறான். எதிர்·ப்ளாட் தம்பதியின் பிள்ளைகள் எல்லாரும் கூட அமெரிக்காதானாம்.
எல்லாரும் புது ·ப்ளாட்டிற்குப் பழகிக்கொண்டுவிட்டார்கள். இங்கு எல்லாம் மிகவும் வசதியாகத்தான் இருக்கிறது. எனக்குத்தான்... நம் பழைய வீட்டு ஞாபகம் போகவேயில்லை. என் ராஜம் வளைய வந்த அந்த சமையற்கட்டு.. நீ இரவில் வானத்தைப் பார்த்து நெடுநேரம் அமரும் மொட்டைமாடி.. பரசுவின் சைக்கிள் நிற்கும் வராந்தா.. ருக்மிணி போட்ட திரைச்சீலை.. அந்த ஜன்னல்.. இதெல்லாம் கண்ணுக்குள்ளேயே நிற்கிறதுடா விஸ்வம்.
அப்புறம் முக்கியமான ஒன்றைச் சொல்லவேண்டும். உன் பழைய டைரி இந்த வீடு மாற்றத்தில் கிடைத்தது. நீ வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் எழுதியது. நான் முதலில் படிக்கவேண்டாம் என்றுதான் எடுத்து வைத்திருந்தேன். பிறகு ஏனோ தெரியவில்லை.. நீ ஒன்றும் நினைத்துக் கொள்ளமாட்டாய் என்று தோன்றியது. எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.
படிக்கப்படிக்க அந்த நாட்களெல்லாம் திரும்ப வந்துவிட்டது போல் இருந்தது. பாவம் பரசு. எப்படிக் கஷ்டப்பட்டிருக்கிறான்! தனியாளாய் அவனொருவனே அனைத்தையும் தாங்கியதை நினைத்தால்.. உன் பாஷையில் சொல்லப்போனால் - எப்படி ஒரு 'கைதி'யாய்..! என் கண்கள் கலங்குகிறது விஸ்வம். அவன் உங்கள் எல்லாருக்கும் பொறுப்பான அண்ணனாய்.. எனக்கு மிகவும் நல்ல பிள்ளையாக இருந்திருக்கிறான். நான்தான் அவனுக்கு நல்ல அப்பாவாக இல்லை.. என்னென்ன கனவுகள் கண்டிருந்தானோ.. இதை நினைத்து நினைத்துத் தவிக்காத இரவுகளே இல்லை. சில இயலாமைகள் எல்லாம் ஆறாத புண்களாய்த் தங்கிவிடுகின்றன.
ருக்மிணியை, நீ எத்தனை கூர்ந்து கவனித்திருக்கிறாய், என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நானும் கூடவே இருந்திருக்கிறேன். என் கண்ணில் இதெல்லாம் படவேயில்லையே.. எனக்குத் தெரிந்து நன்றாக சமைப்பாள், கோலம் போடுவாள், வீணை வாசிப்பாள். அவ்வளவுதான். பாதம் அதிராமல் நடப்பதையும், புன்சிரிப்பிலேயே எல்லாக் கவலைகளையும் கரைப்பதையும், உடை கலையாமல் எழுந்து வருவதையும் உன் எழுத்தில் படித்தபோது அடடா என்றிருந்தது. உன்னுடன் சேர்ந்து இலக்கியம் பேசியதையும், எல்லார் மீதும் அன்பு காட்டும் வழியை மிக எளிமையாய் விளக்கியதையும் படிக்கையில் அவள் பரசுவிற்குக் கிடைத்தது மிகுந்த அதிர்ஷ்டம் என்றுதான் தோன்றுகிறது.
நீ இப்பொழுதெல்லாம் ஹக்ஸ்லி, சாத்ரே போன்றவர்களைப் படிக்கிறாயா? முன்போல் அசோகமித்திரனையும், ஜானகிராமனையும் படிக்க அவகாசம் கிடைக்கிறதா? இங்கே வீடு மாற்றத்தில் உன்னுடைய சிறு பத்திரிகை.... ஞாபகமிருக்கிறதா..? அதன் பிரதி ஒன்று கிடைத்தது. உங்கள் எல்லாரிடமும் (உன் அப்போதைய நண்பர்களையும் சேர்த்துத்தான்..) எவ்வளவு எழுத்துத்திறமை இருந்திருக்கிறது! உனது அன்றைய எழுத்துலகக் கனவுகள், கவிதைகள், சமூகக் கதைகள்.. இதெல்லாம் இப்பொழுது உன்னிடமிருந்து எங்கே போனது விஸ்வம்? உன்னுடைய இயற்கை ரசனையும், கலையார்வமும் இன்னும் மிச்சமிருக்கிறதா? இருக்கத்தான் வேண்டும்.
ஒருகாலத்தில் உன்னால் ருக்மிணி வைத்த சூரியகாந்தி செடி பூப்பூத்ததற்கு ஆச்சர்யப்பட முடிந்திருக்கிறது. மரத்திலிருந்து குதித்து விளையாடும் அணில்களை நின்று நிதானமாக ரசிக்க முடிந்திருக்கிறது. நர்ஸரி ஸ்கூலின் வாசலில் நின்று அந்த இளம்பிஞ்சுகளை வாஞ்சையுடனும் கவலையுடனும் பார்க்க முடிந்திருக்கிறது. மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு இரவு வேளையில் வரிசையாகச் செல்லும், நகரத்திற்குச் சற்றும் பொருந்தாத மாட்டுவண்டிகளின் சலங்கைச்சத்தம் கேட்டு கிராமிய சூழ்நிலைக்கு உன்னால் நொடியில் பயணிக்க முடிந்திருக்கிறது. உன் கற்பனைகளில் கூட அலைகளில் கால் நனைப்பதும், நீர்வீழ்ச்சியில் கை நீட்டி நீர் பிடித்து விளையாடுவதும், கிராமத்துப் பாழ் மண்டபத்து எதிரே பாசிபிடித்த குளத்தில் கல்லெறிவதும், நட்சத்திரங்களைப் பார்த்தபடி இரவில் தனிமையில் நிற்பதும் தான் வருகின்றன. நம்மைச் சுற்றி இப்படி எத்தனையோ விஷயங்கள் நடக்கின்றன. மனிதன்தான் தன்னுடைய அன்றாடப் பெருங்கவலைக்கு மட்டுமே தினமும் மதிப்பளித்து இவற்றை கவனிக்கக் கூட மாட்டேன் என்கிறான். அடுத்தமுறை வரும்பொழுது இங்கில்லாத உன் கதை, கவிதைகளைக் கொண்டுவா விஸ்வம். எனக்கு உன் எழுத்தைப் படிக்க வேண்டும்.
இந்த டைரியில் இருக்கும் உன் எழுத்து - எத்தனை நேர்த்தியாய்.. இயல்பாய்.. எதையும் மிகைப் படுத்தாமல்... நாங்கள், நீ எல்லாரும் அதில் இன்னும் வாழ்ந்துகொண்டு இருப்பது போல். உன் எழுத்தில் ஏதோ எல்லாருமே மென்மையான மனிதர்களாகி விடுகிறோம். எனக்கு ஒரு நல்ல நாவலைப் படிப்பது போல் இருந்தது. மிக எளிமையாய் எழுதப்பட்ட நாவல். நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட இடம் அந்த மொட்டைமாடி பேச்சுதான். எதைச் சொல் கிறேன் என்று உனக்குப் புரிந்திருக்கும். உன் டைரியில் படித்துத்தான் என்றில்லை. அடிக்கடி அந்த நினைவு எனக்கு வந்தபடி தான் இருக்கிறது. சிலபொழுது கனவுகளில் கூட வந்து பயமுறுத்தும். நீயும் பரசுவும் சிறு தூண்களாய் நிற்க, உங்கள் மேல் போட்ட குறுக்குக் கல்லில் உங்கள் கதறலைக்கூட கேட்காமல் இளைப்பாறுவதாய்.. ரொம்பவே கொடுமையடா. எத்தனை தரம் நான் உள்ளுக்குள்ளேயே மருகியிருப்பேன் தெரியுமா?
அன்றைய என் நிலையில் இப்பொழுது நீ இல்லை. மத்தியதர குடும்பங்கள், அதிலும் குறிப்பாக கீழ் மத்தியதர குடும்பங்கள் படிப்பையும் அதன் பலனாய்க் கிடைக்கும் வேலையையும் எத்தனை நம்பியிருக்கின்றன. உனக்குத் தெரியாததா? மாதச் சம்பளத்தை எதிர்பார்த்து நடத்தும் வாழ்க்கையில் பொறுப்புகளிலிருந்தும் சுமைகளிலிருந்தும் யாரும் தப்பித்து விடுவதில்லை. தற்காலிகமாக அவற்றைக் கண்டுகொள்ளாவிட்டாலும், அதுகூட வேறு ஒருவன் தன் தோள் மீது சுமந்து கொண்டு கொடுக்கும் சலுகை என்பதுதான் உண்மை. இதையெல்லாம் நாம் கஷ்டப்பட்டுத்தான் உணர வேண்டி இருக்கிறது. தமிழில் அனுபவத்தை அதனால்தான் பட்டறிவு என்று சொல்கிறார்கள். அன்றைய சூழ்நிலையில் நமக்கு வசதிகள் இல்லை. பெரும் பொறுப்புகள் தயாராக இருந்தன. அதனால் இலக்கியம், கலை, தத்துவம் இவற்றை அலசி, விவாதித்து, ரசித்து, சாதிக்க வழியும் இல்லாமல் போய்விட்டது. ஏதோ ஒரு பக்கத்தில் நீ கிறுக்கியிருந்தாயே - அந்த மூன்று வார்த்தைகள்... "தரையில் இறங்கும் விமானங்கள்" - பொருத்தமாகத்தான் எழுதியிருக்கிறாய். நாமெல்லாரும் ஒருகாலத்தில் கட்டாயம் இறங்கத்தான் வேண்டியிருக்கிறது.
பழைய நினைவுகளைக் கிளறி எங்கெங்கோ கொண்டு போய்விட்டாய். உன் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். அதிகம் ஓவர் டைம் செய்யாதே. ஜமுனாவை மிகவும் விசாரித்த தாகச் சொல். குழந்தைகளூக்கு என் ஆசிகள்.
அன்புடன் அப்பா.
பின்குறிப்பு:- இது ஒரு கற்பனைக் கடிதம். இங்கே கற்பனையாகச் சொல்லப்பட்டிருக்கும் விஸ்வம் என்பவரின் டைரிக் குறிப்பு, எழுத்தாளர் திருமதி. இந்துமதி அவர்கள் எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்" என்ற நாவல்தான். தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களுள் இதுவும் ஒன்று. ஆவலை அடக்கமுடியாதவர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய நிறுவனம் - பூஞ்சோலை பதிப்பகம். tamilputhakalayam@yahoo.com
மனுபாரதி |