நான் எழுதுவது 23 வருடக்கதை. என் கணவர் திருச்சியில் வேலையில் இருந்தார். எங்கள் பக்கத்து வீட்டில் ஒரு பெண், அகிலா என்று வைத்துக் கொள்வோமே. (பெயரை மாற்றியிருக் கிறேன்) துறுதுறுவென்று இருப்பாள். காலேஜ் படிப்பை முடித்துவிட்டு, கல்யாணத்துக்குப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். 'ஆன்ட்டி... ஆன்ட்டி' என்று என் வீட்டிற்கு வந்து, என் குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டு இருப்பாள். அவள் ஆசைப்பட்டது போலவே அமெரிக்காவிலிருந்து மாப்பிள்ளை கிடைத்து, கல்யாணம் நிச்சயம் செய்தார்கள்.
திருமணத்திற்கு 2 மாதம் முன்பு அவள் அம்மா திடீரென்று இறந்துவிட்டாள். பரிதவித்துப் போனது அந்தக் குடும்பம். நானும், என் கணவரும்தான் அவர்கள் சோகத்தை மறக்கச் செய்து, கல்யாணத்திற்கு வேண்டிய உதவி செய்து, முடித்து வைத்து, அவளை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தோம்.
பிறகு 3 வருடம் கழித்து இந்தியா வந்த போது எங்களை வந்து பார்த்தாள். தலைமுடியை யெல்லாம் 'கட்' பண்ணிக்கொண்டு சிறிது மாறிப் போயிருந்தாள். அமெரிக்க நாகரிகம் அவளிடம் நன்றாகவே தெரிந்தது. ஆனாலும் அன்பாகத்தான் பேசினாள். அப்புறம் எப்படியோ தொடர்பு விட்டுப் போய்விட்டது. நான் அனுப்பிய 'பர்த்டே', 'அனிவர்சரி' கார்ட்ஸ் போய் சேர்ந்ததா என்றுகூடத் தெரியவில்லை.
போன வருடம் சென்னையில் தற்செயலாக அவளுடைய உறவினரைப் பார்த்தேன். அவர், அகிலாவைத் தொடர்பு கொள்ள நம்பரும், விலாசமும் கொடுத்தார். இதற்கிடையில் என் பெண் வளர்ந்து, கல்யாணம் செய்து கொடுத்து அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தாள். நான் அவளுடைய பிரசவத்துக்காக 6 மாதம் அவளோடு தங்கியிருக்க அமெரிக்காவிற்கு வந்திருக்கிறேன். வந்தவுடன் உடனடியாக அகிலாவுக்கு போன் செய்தேன். answering machine தான் பதில் சொல்லியது. அவள் என்னைத் திரும்பக் கூப்பிடவில்லை.
மறுபடியும், விடாப்பிடியாக, என் பெண்ணிற்குத் தெரியாமல் அகிலாவிற்கு போன் செய்து பார்த்தேன். அவள்தான் 'போனை' எடுத்தாள். அந்தக் குரலைக் கேட்டவுடன் அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. கடகடவென்று பேச ஆரம்பித்தேன். பேசி முடித்தவுடன் தான் புரிந்தது. அவள் குரலில் நான் எதிர்பார்த்த ஆர்வமோ, மகிழ்ச்சியோ இல்லை. ஏதோ பேச வேண்டுமே என்று பேசியது போலத் தோன்றியது. எது கேட்டாலும் 'everything is ok' என்று ஒரு பதிலைத்தான் சொன்னாள். நாங்கள் இருக்கும் இடத்திற்கு 500 மைல் தள்ளி இருக்கிறாள் என்று மட்டும் சொன்னாள். அந்த போன்காலுக்குப் பிறகு என் மனதில் ஒரு வெறுமையும் ஏமாற்றமும்தான் தேங்கியது.
நான் அவளிடம் அன்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவில்லையே! ஒரு தாயின் இடத்தில் இருந்து அவள் கல்யாணத்தை முடித்தேனே! இதையெல்லாம் எப்படி மறந்தாள்? இந்த விஷயம் என் பெண்ணிற்குத் தெரிய வந்து ''ஏம்மா... நன்றி இல்லாதவர்களிடம் நீயே போய், போய்ப் பேசி உன் கெளரவத்தைக் கெடுத்துக் கொண்டாய்'' என்று என்னைக் கடிந்து கொண்டாள். அமெரிக்கா வந்தால் மனிதர்கள் இப்படித்தான் மாறிவிடுகிறார்களா?
அன்புள்ள,
உங்கள் ஆதங்கம் இயற்கையே. ஒரு சுற்றுலாவிற்கோ, அல்லது அலுவலக விஷயமாகவோ 10 மைல் தள்ளி நாம் ஒரு இடத்திற்குப் போக நேர்ந்தாலே, பக்கத்தில் நம் உறவினர், நண்பர் யார் இருக்கிறார்கள் என்று நாம் நினைப்போம். அப்படியிருக்கும் போது 10,000 மைல் கடந்து வந்திருக்கிறீர்கள். தாயின் ஸ்தானத்தில் இருந்து கல்யாணம் செய்து கொடுத்த ஒரு பெண்ணைப் பார்க்க வேண்டும் என்று இருக்கும் ஆவலும் எதிர்பார்ப்பும் நியாயமே. ஆனால் இது போன்ற சம்பவத்தால் இடிந்து போய்விடாதீர்கள். அதற்கு மாறாக ஏன் இப்படி நடந்து கொண்டாள் என்று சிறிது ஆராய்ந்து பார்க்க முயலுங்கள்.
இது பரபரப்பு மிகுந்த வாழ்க்கை. (இந்தியாவிலும் அப்படித்தான் மாறிக் கொண்டிருக்கிறது) இங்கே பெரும்பாலோர் நின்று கொண்டே சாப்பிட்டுக்கொண்டு, டிரைவ் பண்ணிக்கொண்டே போனில் பேசிக்கொண்டு, நேரத்தின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதனால், சில மெல்லிய உணர்வுகள், பாச உறவுகள், அறுபட வாய்ப்பு இருக்கிறது.
ஆடம்பரம் என்று நினைக்கும்படி வாழ்க்கை இருந்தாலும், குடும்பச் சுமைகளும், மனச்சுமைகளும் அழுத்தி விடுகின்றன. கணவன் மனைவிக்குள் ஏற்படும் முறிவோ, குழந்தைகளால் ஏற்படும் வேதனையோ, வேலை பறிபோய் விடுவதோ, திடீரென்று தாக்கும் வியாதியோ - இப்படி எதையுமே மற்றவர்களிடம் வெளியிட முடியாமல் தங்களுக்குள்ளேயே வைத்து அவதிப்படுபவர்கள் பல பேர் உண்டு. அது போன்ற சுமையால் உங்கள் அகிலா பாதிக்கப்பட்டு, (பல வருடங்கள் தொடர்பு விட்டுப் போனதால்) உங்களிடம் தெரிவிக்க இயலாமல் இருக்கலாம்.
இந்த 23 வருட அமெரிக்க வாழ்க்கையில், உங்களைவிட நெருங்கிய தோழிகள் கிடைத்து உங்களுடைய சிநேகிதத்தில் ஈடுபாடு, ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.
இதுபோல பலக்காரணங்கள்/சாத்தியங்கள் உண்டு. எது எப்படியிருந்தாலும், ஒரு தாயின் நிலைமையில் இருந்து அந்த அகிலாவைப் பார்க்கிறீர்கள் நீங்கள். ஆகவே, மனதில் வருத்தம் இருந்தாலும் வெறுப்பை வளர்க்காதீர்கள். பெரும்பாலும் மனிதர்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல.
அகிலா ஒருநாள் உங்களைத் திடீரென்று கூப்பிட்டு மனம் திறந்து பேசுவாள் என்ற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. அவள் கூப்பிடவில்லையென்றாலும், உங்கள் குணத்தைப் பற்றி நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள். நீங்கள் மாறவில்லை. நீங்கள் மறக்கவில்லை. உங்கள் பெண் நல்ல முறையில் திருமணம் புரிந்து இங்கே வந்தபோதும், இன்னும் அகிலாவின் தாயாக நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள். இழப்பு உங்களுக்கு அல்ல.
அமெரிக்காவில் மட்டும் இல்லை. எங்குமே மனிதர்கள் ஒன்றுதான். சூழ்நிலை ஒருவர் எண்ணங்களை, உருவத்தை மாற்றக்கூடும். ஆனால் அவருடைய அடிப்படை குணங்களும், தனித்தன்மையும் மாறுவது எளிதல்ல. ஆகவே, காத்திருங்கள் நம்பிக்கையுடன்.
வாழ்த்துகள். அன்புடன், சித்ரா வைத்தீஸ்வரன் |