உனக்கு பாபி... எனக்கு...
என்னுடை மகன் டெல்லியில் படித்த போது அவனுடன் கிஷோர் என்ற கான்பூர் பையனும் படித்தான். இரண்டு பேரும் படிப்பு முடிந்து கிஷோருக்கு டெல்லியில் வேலை கிடைத்திருந்தது. என் பையன் சென்னையில் வேலையாகி வந்து விட்டான். வேலை விஷயமாய் ஒரு முறை டெல்லிக்குப் போக வேண்டியி ருந்தது.

இனி என் பையன் சொல்வதை கேளுங்கள்

நான் கிஷோர் அலுவலகத்திற்கு அவனைப் பார்க்கச் சென்றேன். அவனுக்கு ஒரே சந்தோஷம். நிறைய விஷயங்கள் பேசினோம்.

''ஏய் சீனு நீ கட்டாயம் வீட்டுக்கு வரணும்.. நம்ப பாபியைப் பார்க்க வேண்டும்.. பாபி ரொம்ப நல்ல மாதிரி.. சமையல் பிரமாதமா இருக்கும்...'' என்றெல்லாம் வாய் ஓயாமல் புகழ்ந்து என்னை அழைத்துப் போனான்.

வீட்டிற்குப் போனதும், ''இதுதான் நம்ப பாபி சீமா.. ரொம்ப நல்ல குணம்..'' என்று கூறி என்னையும் பாபிக்கு அறிமுகம் செய்து வைத்தான். கிஷோரின் பக்கத்திலேயே சீமாவும் உட்கார்ந்து சாப்பிட்டாள். கிஷோர் வெகு சகஜமாக பாபியைத் தொட்டுப் பேசுவதும், கேலி செய்வதுமாக இருந்தான். நான் புழு மாதிரி நெளிந்தேன். சங்கடமாக இருந்தது.

பாபி கிச்சனில் ஏதோ வேலையாகச் சென்றவுடன் என்னால் பொறுக்க முடியாமல், '' ஏய் கிஷோர் பாபிகிட்டே இப்படியெல்லம் நடந்துக்கறே.. சே... சே... திஸ் இஸ் நாட் குட் என்று கோபமும் எரிச்சலுமாய்க் கூறி விட்டேன்.

''அட பாவி சீமா உனக்கு பாபி.. எனக்கு பீபிடா... சீமா என்னுடைய வொய்ஃப்... எனக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசம்தான் ஆறது.. அவசரக் கல்யாணம்.. உன் அட்ரஸ் தெரி யல்லை.. அதிகம் யாரையும் கூப்பிடல்லை.. நல்லா சொன்ன போ.. அவ எனக்கு பீபி..'' என்று முதுகில் ஒரு குத்துவிட்டான்.

'அடக்கஷ்டமே' என்று நான் சிரித்து விட்டேன். இப்பொழுதும் அந்த நிகழ்ச்சியை நினைத்து சிரிப்பேன்.

தங்கம் ராமசாமி

© TamilOnline.com