குரங்கு முகம் வேண்டும்!
கண்ணகி தன் கணவன் கோவலன் கள்வன் அல்லன் என்பதை நிரூபிக்கப் பாண்டியன் அவைக்கு வந்தாள். அங்கே "என் காற்சிலம்பு பகர்தல் (விற்றல்) வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி; கண்ணகி என்பது என் பெயரே" என்கிறாள். அவள் தன் கணவன் தவறு செய்யவில்லை என்று சொல்லுமுன்னே, பாண்டியன் "கள்வனைக் கோறல் (கொல்லுதல்) கடுங்கோல் அன்று" என்கிறான். கண்ணகி "என் காற் பொற்சிலம்பு மாணிக்கப்பரல்" கொண்டது என்கிறாள். பாண்டியன் "நல்லது, என் தேவியின் சிலம்பு முத்துப் பரல் கொண்டது" என்றான். உடனே அந்தச் சிலம்பைக் கொண்டு வரச்சொல்லிக் கண்ணகி முன் வைத்தான். கண்ணகியும் தன்னிடம் மீதம் இருந்த ஒரு காற்சிலம்பைத் தரையில் எறிந்து உடைத்தாள். அச் சிலம்பிலிருந்து தெறித்த மாணிக்கப் பரல் பாண்டியன் வாயில் தெறித்தது. தெறித்தது முத்தல்லாமல் மணியாய் இருக்கக் கண்டு தன் ஆட்சியில் பொற்கொல்லன் சொல்லைக் கேட்டு நேர்ந்த தவறை உணர்ந்தான். "பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன்? யானே கள்வன்!" என்று தன் அரசாளும் தகுதியையே சந்தேகிக்கிறான். "மக்களைக் காக்கும் ஆட்சிமுறை என்னால் பிழைபட்டது" என்று கதறி "கெடுக என் ஆயுள்" என்று தன் உயிரைப் போகும்படிச் சபித்து விழுந்து உயிரை விடுகிறான். அது கண்டு பாண்டியன் மனைவி கோப்பெருந்தேவி நடுங்கிக் "கணவனை இழந்தோர்க்குக் காட்டுவது இல்" என்று சொல்லி பாண்டியன் அடிகளைத் தொழுது விழுந்து இறக்கிறாள். இது வழக்குரைக் காதை.

கீழே வீழ்ந்த கோப்பெருந்தேவி இறந்ததை அறியாத கண்ணகி அவளை நோக்கிச் சொல்லுகிறாள். அது தான் வஞ்சின மாலை:

"தேவி! எனக்கு வேறு எதுவும் தெரியாமல் இருந்தாலும் ஒன்று மட்டும் தெரியும். முற்பகல் வினை செய்தவர்க்குப் பிற்பகல் அதன் பலன் விளையும் என்பதே அது." என்று சொல்லித் தான் பிறந்த பூம்புகார் என்னும் காவிரிப் பூம்பட்டினத்துப் பெண்களின் சிறப்பைக் கூறத் தொடங்குகிறாள். அப்போது அங்கே பிறந்து வாழ்ந்த ஏழு பத்தினிப் பெண்டிரின் வரலாற்றைக் கூறுகிறாள். அவர்களில் ஐந்தாவதாகிய பத்தினியைப் பற்றி இங்கே காண்போம். கண்ணகி அவளைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறாள்:

"வேற்றொருவன்
நீள்நோக்கம் கண்டு நிறைமதி வாள்முகத்தைத்
தான்ஓர் குரங்குமுகம் ஆகுகஎன்று, போன
கொழுநன் வரவே குரங்குமுகம் நீத்த
பழுமணி அல்குல் பூம்பாவை"
(சிலப்பதிகாரம்: வஞ்சினமாலை:19-23)

(நீள் = நெடுநேரம்; நிறைமதி = முழுநிலா; வாள் = ஒளி, அழகு; நீத்த = அகற்றிய; பழுமணி =பழுத்த அதாவது சிவந்த மணி; அல்குல் = இடை; பூ = பொலிவு, ஒளி; பாவை = பெண்)

அந்தப் பூம்புகார்ப் பத்தினியின் கணவன் அருகில் இல்லாதபோது வேறு ஒருவன் தன்னை நெடுநேரம் தொடர்ந்து பார்த்ததைக் கண்ட அவள் தன் தோற்றமே அதற்குக் காரணமோ என்று நினைத்தாள். தன் உள்ளத்தில் பொருந்திய ஒரே ஒருவன் அல்லாத பிறன் தன் அழகை நோக்குவதைப் பொறுக்காமல் அருவருத்தாள்; அந்தப் பெண் உடனே பதினைந்துநாள் கலையும் நிரம்பிய நிலாவைப் போல் ஒளிபொருந்திய முகத்தைக் "குரங்கு முகம் ஆகுக!" என்று சபித்தாள். உடனே அம்முகமும் கோரமான குரங்கு முகமானது! பிறகு தன் கணவன் மீண்டும் தன்னிடம் வந்தவுடன் பழைய முகத்தைத் திரும்பப் பெற்றாள், சிவந்த மாணிக்கங்கள் பதித்த மேகலையை அணிந்த அந்த அழகிய பூம்புகார்ப் பெண்!

அவள் உணர்வின் நுணுக்கம் எவ்வளவு ஆழமானது!

இதைக் கேட்போர் இதென்ன மாயாசாலம் என்று எண்ணலாம். அடிப்படையில் தன்னை, அவள் அழகைக் குலைத்துக் கொண்டாள் என்பதே அதன் உட்பொருளாகும்.

அவள் அழகை அழித்தேனும் பெண்மையைக் காத்தது நினைக்கத் தக்கதாகும். அந்தக் குரங்குமுகப் பத்தினி பிறர் தன்னை அடைய முயன்று, தன் பின்வருவதைக்கூட இழுக்காகக் கருதினாள்.

இதையே நாலடியார் என்னும் அறநூலும் உரைக்கின்றது. அந்நூல் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் 18 நூல்கள் அடங்கிய தொகுதியில் ஒன்று. அதில் இன்பவியலில் கற்புடை மகளிர் என்ற அதிகாரத்தில்

"அரும்பெறல் கற்பின் அயிராணி அன்ன
பெரும்பெயர்ப் பெண்டிர் எனினும்-விரும்பிப்
பெறும்நசையால் பின்நிற்பார் இன்மையே பேணும்
நறுநுதலாள் நன்மைத் துணை" (நாலடியார்:இன்பவியல்:கற்புடைமகளிர்:381)

[நசை = ஆசை; நுதல் = நெற்றி]

"இந்திரன் மனைவியாகிய அரிய கற்பினை உடைய அயிராணி போன்று பெரும்பெயர் உடைய பெண்ணே ஆனாலும், தன்னைக் காதலியாக அடைய விரும்பித் தன்னைப் பெறும் ஆசையால் தன் பின் நிற்பவர்கள் இல்லாத நிலையைக் கவனிக்கும் நல்ல நெற்றியை உடைய பெண்ணே நல்ல வாழ்க்கைத்துணை" என்பதே அதன் பொருள்.

இங்கே நறுநுதல் (நல்ல நெற்றி) என்பது தன்னைக் காப்பதற்கு வேண்டியதை அணிந்த நெற்றி என்று கொள்ளவேண்டியது போலத் தெரிகிறது. "பொட்டு வைத்த இனிமை மணக்கும் நல்ல நெற்றி""திலகம் தைஇய தேம் கழழ் திருநுதல்" என்று நக்கீரர் பாடுவார்.

அந்தக் குரங்குமுகப் பத்தினியை நோக்கியவன் அவள் மனதைப் புண்படுத்திய நாகரிக மில்லாதவன் மட்டுமில்லை. அவன் ஆண்மை அற்றவன் என்றே வள்ளுவன் சொல்வான்.

"பிறன்மனை நோக்காப் பேராண்மை, சான்றோர்க்கு
அறன் ஒன்றோ ஆன்ற ஒழுக்கு" (திருக்குறள்:பிறனில் விழையாமை:148)

என்கிறான்.

"பிறனுடைய துணையைத் தவறான நோக்கோடு கருதாமை ஆண்மையிலேயே தலைசிறந்தது ஆகும். அது ஒருவனுக்குத் தருமமும் மட்டுமா? தலைசிறந்த ஒழுக்கமும் ஆகும்" என்பதே அதன் பொருள்.

பெரியண்ணன் சந்திரசேகரன்

© TamilOnline.com