மாதுளம்பழம்
ஒருவரது தினசரி உணவில் ஒரு பகுதி பழங்களாக அமைந்தால் அவைகள் மூலம் இயற்கையில் கிடைக்கும் சத்துகளை எளிதில் பெற்றிடலாம். அதனால் தேவையான சக்திகளையும் பெறமுடியும். ''காலையில் பழ உணவு பொன் போன்றது; மதியானம் அது வெள்ளி போன்றது; இரவில் அது ஈயம் போன்றது; என்று ஒரு ஸ்பெயின் நாட்டுப் பழமொழி உண்டு. பழ உணவு வரிசையில் இந்த முறை மாதுளம்பழம்.

மாதுளைச் செடி பாரசீகம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் முதன்முதலில் தோன்றியது. இது பெரும்பாலும், வீட்டுத் தோட்டங்களில் (உஷ்ணப் பிரதேசங்களில்) வளர்க்கப்படுகிறது. இந்தச் செடியில் இரத்தச் சிவப்பு நிறத்தில் பூக்கள் இருக்கும். இதில் பல வகைகள் உள்ளன. இப்பழத்தின் மேல்புறம் தோல் போன்றிருக்கும். உள்பாகத்தில் விதைகள், இலேசான சிவப்பு நிறச் சதையால் மூடப்பட்டிருக்கும். இதன் சாறு இனிப்பாக இருக்கும்.

இப்பழத்தில் ஒருவித அமிலச் சத்து உள்ளது. நல்ல ரகப் பழங்கள் பெரியதாகவும், அதிக ருசியுடையதாகவும் இருக்கும். இப்பழம் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். குளிர்பதன சாதனத்தில் ஆறு மாத காலம் வரைக்கும் கெடாமல் வைத்திருக்கலாம்.

புரதம் - 1.6 சதவீதம்
கொழுப்பு - 0.1 சதவீதம்
தாதுப்பொருள் - 0.7 சதவீதம்
நார் - 5.1 சதவீதம்
மாவுச்சத்து - 14.6 சதவீதம்
கண்ணம் - 0.01 சதவீதம்
எரியம் - 0.07 சதவீதம்
இரும்பு - 0.3 மை.கி.
ரிபோ·ப்ளேவின் - 10 மை.கி.
வைட்டமின் 'சி - 16 மை.கி.

இப்பழத்தின் மதிப்பீடு அதனுடைய சர்க்கரைச் சத்து அமிலச்சத்து முதலியவற்றைப் பொறுத்துள்ளது.

சர்க்கரைச் சத்து - 12 முதல் 16 சதவீதம் வரை
அமிலச் சத்து - 1.5 முதல் 2.5 சதவீதம் வரை

இப்பழச்சாறு புத்துணர்வு ஊட்டுவதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கும். இருதய நோய்க்கு உரமருந்தாகவும் (TONIC), இலேசான உணவாகவும் உண்ணப்பட்டு வருகிறது. இரைப்பை வீக்கத்திற்கு இது ஒரு சிறந்த உரமருந்தாகும். ஜீரண சக்தி குறைந்துள்ள காய்ச்சல் நோயாளிகளுக்கு இப்பழச்சாறு மெல்லிய உணவாகிறது. தாகத்தைத் தணிக்கப் பயன்படுகிறது. இப்பழத்தின் தோலில் 'டேனின்' (Tannin) என்ற பொருள் இருக்கிறது. எனவே சாறுகட்டிய விதைப் பாகத்தைத் தோலில் படாமல் பிரித்து எடுக்க வேண்டும். இப்பழத்தினின்றும் பழப்பாகு, பழச்சாறு, தேங்கூழ், குளிர்பாலோடு கிச்சடி முதலியன செய்து சாப்பிடலாம். ஒரு நோயாளி எவ்வுணவையும் உட்கொள்ள முடியாத நிலையில் இருந்தால் இப்பழச்சாற்றை உணவாகக் கொடுக்கலாம்.

தேக உஷ்ணத்தைக் குறைக்கும். இருமலைப் போக்கும். சீதபேதிக்கு இது நல்ல மருந்தாகும். இப்பழத்தின் தோலையும் கிராம்பையும் கசாயம் செய்து கொடுக்க சீதபேதி குணமடையும். தொண்டைப்புண் ஏற்பட்டால், இப்பழச் சாற்றுடன் சிறிது படிகாரம் கலந்து மருந்தாகக் கொள்ளலாம். மேலும் வாந்தி, விக்கல், மாந்தம், குலைஎரிவு, நுரையீரல் வறட்சி, ரத்தக் கசிவு (Haemorrhagea), சீழ்வடிதல் (Leucorrhoea), கருப்பை சார்ந்த புண்கள், காதடைப்பு, மயக்கம் அதிசுரம், கபம் முதலியவற்றிற்கும் இப் பழச்சாற்றை மருந்தாக உபயோகிக்கலாம்.

மாதுளம் ஜூஸ்

தேவையான பொருள்கள்

மாதுளம்பழச் சாறு - 1 கிண்ணம்
ஆரஞ்சுச் சாறு - 1 கிண்ணம்
எலுமிச்சைச் சாறு - 1/4 கிண்ணம்
தண்ணீர் - 2 கிண்ணம்
சர்க்கரை - 1 கிண்ணம்
இஞ்சிச் சாறு - 1 1/4 கிண்ணம்

செய்முறை

சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையுடன் மாதுளம் பழச் சாறு, ஆரஞ்சுச் சாறு, மற்றும் எலுமிச்சைச் சாறை கலந்து கொள்ளுங்கள். கடைசியாக கால் கிண்ணம் இஞ்சிச் சாறைக் கலந்து பரிமாறலாம். தேவைக்கேற்ப சர்க்கரையை அதிகமாகச் சேர்த்துக் கொள்ளலாம். இதனுடன் ஒரு கிண்ணம் அன்னாசிப் பழச் சாறும் கலந்து கொண்டால் சுவை அமோகமாக இருக்கும். சத்தும் அதிகமாகக் கிடைக்கும்.

செல்வி

© TamilOnline.com