அன்புள்ள சிநேகிதியே...
நான் 40 வயதான, பன்னிரண்டு வருடங் களாக, திருமணமான கணவன். என் மனைவிக்கு 35 வயது. பெற்றோர்களால் முன்பின் பழகாமல், ஜாதகப் பொருத்தத்துடன், எல்லார் ஒத்துழைப்பாலும் நடைபெற்ற திருமணம். நான் அமெரிக்காவில் இருபது வருடம் முன்பு படிப்பிற்காக வந்து தங்கி நல்ல மருத்துவக் கம்பெனியில் பெரிய இயக்குநராக இருக்கிறேன். எங்களுக்கு பத்து வயதில் ஒரு பெண்ணும் இருக்கிறாள்.
எனக்கும் என் மனைவிக்கும் கருத்து வேறுபாடுகள் ஏராளம். நான் அதை அதிகமாக பொருட்படுத்தாமல் இத்தனை நாள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறேன். முக்கியமாக குழந்தை வளர்ப்பில் கடந்த இரண்டு மூன்று வருடங்களாக ரொம்பவுமே முரண்பாடுகள் தெரிய வருகின்றன. உதாரணமாக, குழந்தையின் படிப்பில், விளையாட்டு ஈடுபாடுகளில், அதுவும் பெண்ணாக இருப்பதனால், நான் என் பெண்ணுக்கு எல்லாம் செய்கிறேன், soft ball, basket ball, swimming என்று மூன்றுக்கும் கர்நாடக சங்கீதத்திற்கும் அழைத்து போவேன். என் மனைவிக்கு விளையாட்டில் ஆர்வம் காமிப்பது துளிக்கூட பிடிக்கவில்லை. நான் அதற்கும் ஒரு சீசன் முயன்று பார்த்தேன். குழந்தை வீட்டில் வந்து டிவி முன்னால் உட்கார்ந்து தமிழ் சினிமா, கார்ட்டூன் என்று தினமும் மூன்று மணி நேரம் விரயம் செய்கிறது. அதை விளையாட்டுக்கோ, கோச்சிங்கிற்கோ அழைத்துப் போனால்தான் ஆகிறது. அக்கம்பக்கத்தில் யாரும் விளையாடவோ, படிக்கவோ அவள் வயதில் யாரும் இல்லை. சும்மா ரூம்ல போய் உட்காந்துக்கோ என்றால் நான் வருகிற வரை அது தன் ரூமில் உக்காந்து தூங்குகிறது. என் மனைவி டிவி பார்த்துக் கொண்டிருப்பாள்.
நான் குழந்தைக்கு responsibility teach பண்ணுவேன். ''நீ படிக்காமல் போனால், ஹோம்ஓர்க் செய்யாமல் போனால், நீதான் பொறுப்பு.. நான் கையெழுத்து போடமாட்டேன் என்பேன். என் மனைவி என் எதிராகவே ரிப்போர்ட்டில் கையெழுத்து போட்டு அனுப்புகிறாள். எங்கள் சண்டை இப்ப என் பெண்ணுக் ரொம்ப நன்றாக புரிகிறது. என் கருத்தைப் புரிந்து கொள்கிறாள்.
நான் என் மனைவியிடம் பேசுவதைவிட என் பெண்ணிடம்தான் அதிகமாக பேசுகிறேன், பகிர்ந்து கொள்கிறேன். அவளுக்கு உள்ள மெச்சுரிட்டியும், பாசமும் என் மனைவியிடம் இல்லை.
என் மனைவி ஒரு வங்கியில் கேஷியராக பணி புரிகிறாள். கடந்த ஐந்து வருடமாக. அதற்கு முன்னால் என் பெண்ணுடன்தான் வீட்டில் இருந்தாள். என் சம்பளம் நிறையவே. அவளுக்கு வேலைக்கு போக தேவையில்லை. இருந்தாலும் இந்த ஊரில் social security, medicare தேவைக்காக போய்க் கொண்டிருக்கிறாள். எனக்கு அதனால் ஒரு சிரமமும், பயமும் இல்லை. ஆனால் வீட்டில் வந்து ஒரு காரியமும் செய்ய மாட்டேன் என்று வீம்பு பண்ணுகிறாள். நான் என் வேலையில் இருந்து திரும்பும் போதே மணி 7 ஆகிவிடுகிறது. அதற்கு அப்புறம், சமையல், வாஷிங், குழந்தை படிப்பு என்று எல்லா வற்றையும் பார்க்க ரொம்ப சிரமமாகிறது. எப்போதும் 'முதுகு வலிக்கிறது' என்று சோபாவில் heating pad, tv remote சகிதம் உட்கார்ந்துவிடுகிறாள். ஏதாவது கேட்டால் 'வேண்டுமானால் விவகாரத்து பண்ணிக் கொள்ளுங்கள். என் பாதியைப் பிரித்து கொடுத்துவிடுங்கள். நான் இந்தியா திரும்பி தனியாக சந்தோஷமாக இருப்பேன்'' என்று என் எரிச்சலையும், ஆத்திரத்தையும் ஏகமாக கிளம்பிவிட்டு, வேடிக்கை பார்க்கிறாள். நான் இந்த மாதிரி எதுவும் செய்ய மாட்டேன் என்ற ஏகமான நம்பிக்கையுடன். இதுவும் தவிர, அவ்வப்போது நடக்கும் குடும்ப சண்டைகளில் உபயோகப்படுத்தும் வார்த்தைகள் என்னை அவமானத்தில் அருவருப்பு அடையச் செய்கின்றன.
''நான் என்ன தப்பு செய்தேன். எனக்கு ஏன் இந்த அவமரியாதையும்.. தலைகுனிவும்? என்று கேட்டால் 'நான் இப்படித்தான்.'' என்று வீம்பாகவும் விட்டேத்தியாகவும் பதில். நான் mental health clinicல் consultation செய்தேன். அவர்கள் என் மேல் எதுவும் தப்பில்லை. வேண்டுமானால் என் மனைவியை அழைத்து வரவும். சிகிச்சை பெறவும் வலியுறுத்து கிறார்கள். இவள் வர மறுத்தால், அதன் பேரில் விவகாரத்து பதிவு செய்யலாம் என்கிறார்கள். எனக்கு விவகாரத்தில் விருப்பம் இல்லை. குழந்தையின் நிலைமையை நினைத்து, இந்த மூளையில்லாத பெண்ணுடன் சகித்துக் கொண்டு வருகிறேன்.
நானும் முயற்சியை கைவிடாமல் மனதை சமாதானப்படுத்தி இவளுடன் சமாதானமாக பேசி அறிவுரை கூறி வருகிறேன். சில சமயங்களில் இவளையும் ஒரு பத்து வயது பெண்ணாகத்தான் டிரிட் பண்ண வேண்டி உள்ளது. என்னுடைய நண்பர்களில் மனநல ஆலோசகராகவோ, அறிவரை கூறுபவராகவோ யாரும் இல்லை. யாரிடமும் வரவும் இவள் மறுக்கிறாள். மற்ற நண்பர்கள், உறவினர் களிடமோ இதை பகிர்ந்து கொள்கிற நிலையில் யாரும் இல்லை. யாரும் வருவதாக இருந்தால் 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா?'' என்கிற மாதிரி என்னையே வியக்கும் வகையில் நடந்து கொள்கிறாள். அவர்கள் தலைமறைந்த உடனே, மறுபடியும் 'வேதாளமாக' நடந்து கொள்கிறாள்.
என்னுடைய கேள்வி இதுதான். இவள் ஏன் என்னையும் எங்கள் குழந்தையும் தரக்குறை வாக நடத்தி வருகிறாள்? இதனால் அவளுக்கு என்ன பிரயோசனம்? எப்படி இவளை நல்லபடியாக திருத்துவது? எந்த டாக்டரிடம் எப்படி பக்குவமாக அழைத்துப் போவது?
அன்புள்ள நண்பரே,
நீங்கள் ஒரு பொறுப்பான அதிகாரி. பொறுமையான கணவர். பாசமுள்ள தந்தை. எதிர்பார்ப்புகளில் ஏமாற்றம் தெரியும் போது நிம்மதியும், மகிழ்ச்சியும் அடிப்பட்டு போய், மனம் சுருண்டு தான் போய்விடுகிறது.
எத்தனையோ தொழில் வகைகளைக் கற்று தருவதற்கு அதற்கேற்ப நிறுவனங்கள் இருப்பது போல கணவன்-மனைவி, பெற்றோர்-குழந்தைகள் உறவு முறைகளை பற்றி சொல்லி தருவதற்கு ஏதேனும் கோர்ஸ் ஏற்பாடு செய்யக்கூடாதா என்று ஒருவர் சில மாதங்களுக்கு முன் என்னிடம் கேட்டார். அப்படி இருந்தாலும், கருத்து முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும். ஜாதகத் திருமணமாக இருந்தாலும் சரி, காதலித்து ஒருவர் ஒருவர் பதம் பார்த்து பதிவுத் திருமணம் செய்தாலும் சரி, வளைந்து கொடுக்கும் தன்மையும், இணைந்து செயல்படும் ஆர்வமும், புரிந்து அணுகும் திறமையும் குறையும் போது உறவில் இடைவெளி பெரிதாகிவிடுகிறது.
உங்கள் மனைவி தன் பொறுப்பை உணராமல், தன் குழந்தையின் வளர்ப்பில் பங்கு கொள்ளாமல் இருப்பது சிறிது மாறுபட்டுத்தான் இருக்கிறது. என்னுடைய அனுபவத்தில், நீங்கள் உங்கள் மனைவியிடம் எதிர்பார்க்கும் பொறுப்புணர்ச்சி அத்தனை யும், பெண்கள் தங்கள் கணவர்களிடம் காணும் குறைகள். உங்கள் விஷயத்தில் அது நேர்மாறாக இருக்கிறது. 'Role stereotype' காரணமாக பெண்கள் தான் குடும்பம், குழந்தைகள் பொறுப்புணர்ச்சியை அதிகம் வளர்த்துக் கொண்டிருப்பார்கள். பொதுவாக ஆசை, பாசம், மரியாதை, பயம் - பொறுப்பு ஏற்று செயல்படுவதற்கு இந்த நான்கில் ஏதாவது ஒன்றாவது கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்போது உடல் நிலையையும் மீறி மனிதர்கள் செயல்பட ஆரம்பிப்பார்கள். இது எதுவும் உங்கள் மனைவியிடம் இல்லாத நிலையில் கீழே குறிப்படுபவை காரணங்களாக இருக்கலாம்.
1. உடல் ரீதியாக உண்மையிலேயே ஏதேனும் கோளாறு இருக்கலாம். எப்போதும் உடல் வலியும், அசதியும்தான் சிலருக்கு இருக்கும். அது சோம்பேறித் தனமாக பார்ப்பவருக்குத் தெரியும்.
அல்லது
2. நீங்கள் ஆரம்பத்தில் நிறைய விட்டுக் கொடுத்து எல்லா பொறுப்புக்களையும் ஏற்றுக் கொள்ளும் போது, உங்கள் மனைவி தன் கடமையை உணராது போயிருக்கலாம்.
அல்லது
3. உங்கள் எதிர்பார்ப்புக்களை நீங்கள் புகார்களாக அடிக்கடி எடுத்துச் சொல்லும் போது மனம் மரத்து போயிருக்கலாம்.
நான் எழுதுவதை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கீழே கூறியபடி உங்களால் முடியுமா என்று பாருங்கள்.
உங்கள் வெறுப்பையோ, கசப்பையோ காட்டாமல் அவர்கள் உடல் வலிக்கு உதவ முயற்சி செய்யுங்கள். அப்போது therapyக்கு அவசியமில்லாமல் போகும். அவருடைய உடல் வலியை நீங்கள் உணரும் போது அங்கே அந்த ஆதரவையும், அரவணைப்பையும் ஆதங்கத்தையும், அன்பையும் அந்த மனைவி புரிந்து கொள்கிறாள். உடல்வலியால் ஏற்படும் மனவலி இருக்காது. பாசத்தினால் ஏற்படும் பொறுப்புணர்ச்சி உண்டாக வாய்ப்பு இருக்கிறது.
இதையெல்லாம் செய்து முடித்து விட்டேன். ஒன்றும் பிரயோசனமில்லை என்றால், உங்கள் கடமையை தொடர்ந்து செய்து கொண்டு வாருங்கள். எல்லோருக்கும் அருமையான தாம்பத்ய உறவு அமைந்து விடுவதில்லை. உங்கள் மனைவியையும் இன்னொரு குழந்தையாக எண்ணிப் பாருங்கள். தவறில்லை. நமக்கு நிம்மதி வேண்டுமானால் நாம் தான் நம் விதிமுறைகளையும், எதிர்பார்ப்புக் களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அங்கே விருப்பும் இல்லை. வெறுப்பும் இல்லை. விவாகரத்தும் இல்லை. ஆனால் உங்கள் வாழ்க்கையில் இன்னும் அர்த்தம் இருக்கிறது. குறிக்கோள் இருக்கிறது. ஆனந்தம் காத்திருக்கிறது - உங்கள் பெண்ணின் வடிவில். உடல் வலி குறையும் போது உங்கள் மனைவியும் மாறக்கூடும். நம்பிக்கை ஆணிவேர்.
வாழ்த்துக்கள் சித்ரா வைத்தீஸ்வரன் |