வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவையின் தமிழர் விழா 2003
ஜூலை மாதம் 4, 5 மற்றும் 6 தேதிகளில் நியூஜெர்சியின் தலைநகரான டிரென்டனின் போர் நினைவு (war memorial) அரங்கில் வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America) தனது 16வது ஆண்டுவிழாவை 'தமிழர் விழா 2003'ஆக விமரிசையாகக் கொண்டாடியது.

ஆறுமாதகால இடையறாத உழைப்பின் தொடர்ச்சியாக அமெரிக்காவாழ் தமிழ்க் குடும்பத்தின் இனிய நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஆர்வத்தோடு குழந்தைகள், பெரியவர்களோடு முதல்நாளே வந்திறங்கினர். ஜூலை 4ஆம் தேதி வெள்ளிக்கிழமை குறித்தபடி காலை 9.30 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. வாசலில் தமிழகத்தின் பாரம்பரிய இசையான நாதஸ்வரம் மங்கள இசையாய் வந்தோரை வரவேற்றது. கோலங்கள், மலர்கள், பட்டுச்சேலைகள், வேட்டி சட்டைகள், "வாங்க, வாங்க" என்ற வரவேற்பும், அறிமுகங்களும்.

அமெரிக்கத் தமிழ்க்குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்தையும், அமெரிக்க தேசியகீதத்தையும் இனிமையாகப் பாடினர். தமிழ்மரபுக்கேற்பக் குத்துவிளக்கேற்றி வரவேற்புரையை நிகழ்த்தினார் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் க. சிவராமன்.

'இன்று ஒரு திருக்குறள்' சாலமன் பாப்பையா அவர்கள் கணீர் எனும் குரலில் தொடங்கித் தனக்கே உரிய நடையில் குறள் விளக்கம் தந்தார்.

முன்னாள் துணைவேந்தர் வா.செ. குழந்தைசாமி அவர்களின் சிறப்புரையை தொடர்ந்து Robert Arnet of India Unveiled அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தினார். கவிஞர் சூசை இன்னாசி அவர்களின் தலைமையில் 'மனிதநேயம்' எனும் தலைப்பில் நடந்த கவியரங்கத்தில் இளைஞர்கள் நல்ல கருத்துக்களை மழையாய்ப் பொழிந்தனர். அடுத்து குழந்தைகள் மழலைத்தமிழில் வில்லுப்பாட்டுப் பாடியபோது அரங்கமே கைதட்டலால் அதிர்ந்தது. வெவ்வேறு தமிழ்ச் சங்கத்தைச் சார்ந்தவர்களும் பரதநாட்டியம், திரையிசைப் பாடல்களுக்கான நடனம், நாடகங்கள் என அளித்துப் பாராட்டுக்களை அள்ளிச்சென்றனர்.

'இலக்கியமும் நகைச்சுவையும்' எனும் தலைப்பில் தமிழறிஞர் கு. ஞானசம்பந்தனின் நகைச்சுவைப் பேச்சு அரங்கத்தில் சிரிப்பொலியையும், கைத்தட்டலையும் தொடர்ந்து பெற்றவண்ணம் இருந்தது. கவிதா இராமசாமியின் கண்ணகி தனிநடிப்பு முத்திரை பதித்தது. நாட்டிய நாடகம், நாட்டுப்புறக் கலைகளான காவடியாட்டம், வில்லுப்பாட்டு ஆகியவையும் கண்டோர் நெஞ்சைக் கொள்ளைகொண்டன.

மதிய நிகழ்ச்சி அனைவரும் எதிர்பார்த்த இந்தியத் துணைக்கண்டத்தின் மேதகு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் சொற்பொழிவும் தொடர்ந்து உரையாடலும். விடியோ கான்·பரன்ஸிங் என்னும் அறிவியல் அதிசயத்தால் இது சாத்தியமானது. (ஜனாதிபதி அவர்களின் சொற்பொழிவு இந்த இதழில் தனியே கொடுக்கப்பட்டுள்ளது). இராம்மோகன் அவர்கள் அரங்கில் இருந்து கேள்வி கேட்க, ஜனாதிபதி சிரித்த முகத்துடன் பதிலளித்தபடி ஓர் இனிய பாடலையும் தன் நண்பரோடு பாடிக்காட்டினார். பார்வையாளர்களின் சார்பாக சவரிமுத்து அவர்கள் கேள்வி கேட்க, அதற்கும் பதிலளித்துச் சிறப்பித்தார். நிகழ்ச்சியின் முடிவில் அரங்கமே எழுந்து கரகோஷம் செய்தது. இதை ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சி என்றால் மிகையில்லை.

தொடர்ந்தது நகைச்சுவைப் பேச்சாளர் ஞானசம்பந்தம் அவர்களின் சிரிப்பு மழை. பின் திரைப்பட நடிகர் மயில்சாமி தனது பலகுரல் வித்தையால் மக்களை மகிழவைத்தார். அதன்பின் விழாமலர் காமராசர் நூற்றாண்டு விழாச் சிறப்புமலராக வெளியிடப்பட்டது.

ஐந்தாம் தேதி நிகழ்ச்சிகள் தொடங்கிய போது முந்தைய நாள் விடுபட்ட சில நிகழ்ச்சிகளுக்காக மூன்றுமணி நேரத்தை ஈடுசெய்யவேண்டிய கட்டாயம். அமைப்பாளர்கள் அதை மிக நேர்த்தியாகச் செய்தனர். அதனால் உணவு இடைவேளையும் தியாகம் செய்யப்பட்டது.

தமிழ்த்தாய் வாழ்த்தைத் தொடர்ந்து புல்லாங்குழல் இசையோடு விழா தொடங்கியது. Tamizh Virtual Universityயை அறிமுகம் செய்துவைத்து வா.செ. குழந்தைசாமி அவர்கள் பேசினார். சிங்கப்பூர் வானொலியின் மீனாட்சி சபாபதி தமிழ்ப் பண்பாடுகள் குறித்து ஆழமாய் அலசினார். 'சிரிக்கலாம் வாங்க' என அழைத்து இன்றும் கலகலப்பூட்டினார் ஞானசம்பந்தம்.

நாடகங்கள், நாட்டியங்களைத் தொடர்ந்து அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள் தலைமையில் அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தார் பங்கேற்ற பட்டிமன்றம் தொடங்கியது. 'மனிதனின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் தேவை பொருளா? பொறுப்பா?' - இதுவே தலைப்பு.

அனைவரும் பேசி முடித்தபின் நேரப் பற்றாக்குறையால் தலைவர் தீர்ப்பளிக்க முடியாமல் போனது.

பார்வையாளர்களுக்கு இது ஏமாற்றம் அளித்த போதிலும் மறுநாள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் 'பொறுப்பே' எனத் தீர்ப்புவழங்கினார் சாலமன் பாப்பையா.

அமெரிக்கக் காங்கிரசைச் சார்ந்த Rush Holt அவர்களை நாகப்பன் அவர்கள் அறிமுகப்படுத்திய பின், அவர் வாழ்த்துரை வழங்கினார். பின்னர் ஆவலாய் எதிர்பார்த்த இராமசாமி அவர்கள் இயக்கிய இந்திரா பார்த்தசாரதியின் 'நந்தன்கதை' நாடகம் மேடையேறியது. இயல்பான நடிப்பு, இனிய இசை, நாட்டுப்புறப் பாடல்கள், நடனம், கவிதையாய் உரையாடல், ஒலி, ஒளி அமைப்பு எனப் பலவகையாலும் இரண்டு மணிநேரம் பார்வையாளர்களை சித்திரப் பதுமைகளாக அமரவைத்து, முடிவில் அனைவரும் எழுந்துநின்று கைதட்டிப் பாரட்ட வைத்த பெருமை அந்நாடகக் குழுவைச் சாரும். இந்த மாநாட்டின் வெற்றியில் இந்நிகழ்ச்சிக்குப் பெரும்பங்கு உண்டு.

தொடர்ந்து நடந்த தமிழ்த்திரையுலகின் மணிவண்ணன், மயில்சாமி, ரகுமணிவண்ணன், சினேகா ஆகியோர் பங்கேற்ற நகைச்சுவை நாடகம் நல்ல வரவேற்பை பெற்றது. அதையடுத்து கஸ்பாராஜ் அவர்கள் மனதைத்தொடும் உரை நிகழ்த்தினார்.

'வாழ்நாள் சாதனையாளர் விருது' பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவரது ஏற்புரையும் ஏற்றமானதாக இருந்தது. மேலும், பெருமைக்குரிய சிலர் தமிழ்ச்சங்கத் தலைவர் கே. சிவராம் மற்றும் அவரது துணைவியார் ஜீவா சிவராம் ஆகியோரால் சங்கத்தின் சார்பில் கெளரவிக்கப்பட்டனர்.

பின்னர் சங்கர் மகாதேவனின் இசைமழை தொடங்கியது. அவர் வழங்கிய உற்சாகப் பேச்சும் பாட்டும் பார்த்து, நடிகர் மணிவண்ணன் மேடையில் தோன்றி ஆடினார். பழம்பெரும் பாடகர், நடிகர் ஏ.எல். இராகவன் அவர்கள் பழைய பாடல்களைப் பாடியபோது அரங்கம் நெகிழ்ந்தது. சினேகாவும் தன் பங்குக்கு ஒரு பாடல் பாடி அரங்கை மகிழ்வித்தார்.

அமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தைச் சார்ந்த 'அக்னி' குழுவினர் பின்னணி இசை வழங்க பல்கலைக்கழக மாணவர், மாணவியர் இந்நிகழ்ச்சியில் பாடி, ஆடியது எல்லோரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி முடிந்தபோது இரவு மணி 1.30. மறுநாள் கலந்துரையாடல் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. மூன்று நாள் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த போது ஒரு திருமணம் நிகழ்ந்து முடிந்த உணர்வு ஏற்பட்டது.

அமெரிக்காவாழ் தமிழர்கள் ஒன்றுகூட வேண்டும்; அறிஞர்கள், கலைஞர்கள் கெளரவிக்கப்பட வேண்டும்; திறமையாளர்கள் போற்றப்பட வேண்டும்; கண்டுமகிழவும், உண்டு மகிழவும் ஒரு வாய்ப்பு வேண்டும் - என்ற எல்லா எண்ணங்களும் ஒருசேர நிறைவேறியதுதான் இம்மாநாட்டின் வெற்றி!

தொகுத்தவர்: V.J. பாபு

© TamilOnline.com