மானுவல் ஆரோன் அவர்கள் அமெரிக்கா வருகை விரிகுடாப் பகுதி மக்களுக்குப் பயன்படும் வகையில் தமிழ் மன்றம் ஒரு சதுரங்க நிகழ்ச்சி நடத்தியது. ஜூன் மாதம் 28ம் தேதி மதியம் 2 மணிக்கு ·பாரஸ்ட் பார்க் பள்ளியில் இந்கழ்ச்சி நடை பெற்றது. நிகழ்ச்சிக்குத் தமிழர் மட்டுமின்றி, ஆர்வமுடைய பிறரும் வந்திருந்தனர்.
மானுவல் ஆரோன் அவர்கள் இந்தியாவின் முதல் இண்டர் நேஷனல் மாஸ்டர் ஆவார். ஒன்பது முறை நேஷனல் சாம்பியன் விருதைத் தட்டிச் சென்றவர். பல முறை இந்திய ஒலிம்பிக் குழுவில் இடம் பெற்று இருக்கிறார்.
இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கான பெருமைக்குறிய 'அர்ஜுனா' விருது பெற்றிருக்கிறார். இவ்வளவு சிறப்புக்களுக்கு உரியவராக இருந்தும், மிகுந்த தன்னடக்கமும், பேச்சில் பணிவும் இனிமையும் உடையவராக இருப்பது மிகுந்த மதிப்பை உருவாக்குகிறது. மானுவல் ஆரோன் சென்னையில் மிகவும் பிரசித்தி பெற்ற “தால் செஸ் கிளப்”பைத் துவக்கி வைத்தவர். இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் ஆன விஸ்வநாதன் ஆனந்த் முதல் பல பெரிய ஆட்டக்காரர்களும் இந்த கிளப்பில் விளையாடி இருக்கிறார்கள் என்பது பெருமைக்குறியது.
விரிகுடாப் பகுதி செஸ் நிகழ்ச்சியில் அவர் ஒரே சமயத்தில் 32 பேருடன் விளையாடினார். உண்மையில் சிலர், தனியாக ஆடாமல் நண்பர் குழுவுடன் சேர்ந்தும், குடும்பம் முழுவதும் சேர்ந்தும் ஆடினார்கள். அப்படியும் அவரை ஒரே ஒருவர்தான் வெற்றி காண முடிந்தது. நன்றாக ஆடியவர்களை ஆரோன் புகழ்ந்து பேசினார். நன்றாக விளையாடிய மூன்று பேருக்கு தமிழ் மன்றத்தின் சார்பில் பதக்கங்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் சில விளையாட்டு நுணுக்கங்களைப் பற்றி அவர் உரை நிகழ்த்தினார். குழந்தைகளுக்கு செஸ் விளையாட எளிதாக எப்படிச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று உதாரணங்களுடன் விளக்கினார்.
ஆரோன் அவர்களுக்குத் தமிழ் மன்றம் கேடயம் கொடுத்து கௌரவித்தது. நிகழ்ச்சியின் முடிவில் "அவர் எப்போது மீண்டும் வருவார்?" என்று மக்கள் வந்து விசாரித்ததே நிகழ்ச்சியின் வெற்றிக்குச் சான்றாகும்.
பாகீரதி சேஷப்பன் |