தில்லானா இசையால் முடியும்
தன்னார்வம் கொண்ட தமிழ் இளைஞர்கள் குழு ஒன்று, கலைப் பிரியர்களாகவும், இசைக் கலைஞர்களாகவும், தமிழ் ஆர்வலர்களாகவும் இருப்பதுமட்டுமல்லாமல், தங்கள் திறமைகளை வைத்து ஏதாவது உபயோகமாய்ச் செய்துவிடவேண்டும் என முனைந்து செயல்பட்டதின் விளைவுதான் தில்லானா என்றறியப்படும் துடிப்புள்ள கலை இயக்கம். அமெரிக்காவின் சான் ஹொசே சிலிக்கான் பள்ளத்தாக்கில் பரபரப்பான வாழ்க்கைச் சூழலுக்கு மத்தியிலும் தில்லானா கடந்த நான்கு மூன்று வருடங்களாக, பெரிய அளவில் தரமான இசை நிகழ்ச்சிகளை வழங்கி, நிதி சேர்த்து, சேவை நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறார்கள்.

சரிவடைந்து நிற்கும் இப்போதைய பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்புச் சூழ்நிலையிலும் கூடத் தாங்கள் துவங்கிய பணியைத் தொடர்ந்து தரம் குறையாது நடத்தி, பாராட்டுக்களை அள்ளிச் சேர்த்திருக்கும் தில்லானா மூன்றாண்டே நிரம்பிய குழந்தை என்றால் நம்ப முடியவில்லை. தரமான தமிழ்க் கலை நிகழ்ச்சிகள். இங்கு நமது இளைஞர்கள், தாய்நாட்டில் சிறந்த தொழில்முறைக் கலைஞர்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகளையும் மிஞ்சும்வண்ணம் தரம்வாய்ந்த நிகழ்ச்சிகளை வழங்குவதைப் பாராட்டியே ஆகவேண்டும்.

இவர்கள் அனைவரும் கலிபோர்னியாவின் கணிப்பொறி நிறுவனங்களில் முழுநேரப் பணியாற்றுபவர்கள். தில்லானா குழுவினர், கடந்த மூன்றாண்டுகளில் மெல்லிசை நிகழ்ச்சிகளைத் தரமான, பல்சுவை ததும்பும், புதுமைகள் நிறைந்த கலைப்படைப்புகள் என்ற நிலைக்கு உயர்த்தியிருக்கிறார்கள். சான் பிரான்சிஸ்கோ பகுதியில் ஏறத்தாழ 1600 மக்களை ஒன்று திரட்டும் நிகழ்ச்சிகளாக இவை அமைந்திருப்பதைப் பாராட்டியே ஆகவேண்டும்.

ஒவ்வொரு முறையும், முன்பு செய்ததைவிடப் புதுமையாக அமைக்க வேண்டும் என்பதில் அசையாது நின்று உழைத்திருக்கிறார்கள் இவர்கள். எல்லாவற்றையும் விட முக்கியமாக, சேவை நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் நோக்கத்துடன் ஒவ்வொரு முறையும் ஒரு கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்ச்சிகளை அமைக்கிறார்கள்.

******


சுதந்திர தினவிழா நிகழ்ச்சி - 2000

சிறிய அளவில் இருந்த ஒரு இசைக்குழு, தரமான மெல்லிசை நிகழ்ச்சியை பெரிய அரங்கத்தில் வழங்க வேண்டும் என்ற இயல்பான ஆர்வம்தான் இந்த முதல் முயற்சிக்கு வழி வகுத்தது. இந்தக் குழுவைச்சேர்ந்த அலெக்ஸ் “அப்போது எங்களில் நிறையப் பேர் ‘Asha for Education’ மற்றும் ‘AID’ போன்ற தொண்டு நிறுவனங்களில் ஈடுபாடு கொண்டிருந்தோம். ‘music for fun’ என்பதிலிருந்து ‘music and high quality entertainment for charity’ என்று உந்துதலைக் கொடுத்து வழி காட்டியது இந்த மாதிரி சேவை அமைப்புகளில் முழு ஈடுபாட்டோடு உழைத்துக்கொண்டிருந்த நண்பர்கள்தான்” என்கிறார். சொந்தமாக இசை அமைப்பதிலும் ஈடுபட்டிருக்கும் முகுந்தன் முதலான படைப்பாற்றல் மிக்க கலைஞர்களின் முயற்சியால் முதல் நிகழ்ச்சியிலேயே திரை இசையோடு சொந்த இசையையும் சேர்த்து வழங்கியிருக்கிறார்கள். இவர்கள் கலிபோர்னியாவின் மாநில அளவிலான மேற்கத்திய பாரம்பரிய இசையமைப்பாளர்கள் போட்டியில் பரிசுகளை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“ஊர் கூடித் தேர் இழுப்பது என்பார்கள் அல்லவா? அதுபோல, எங்கள் நண்பர்களோடு சேர்ந்து வேலை செய்யவும், நேரம் செலவிடவும் தில்லானா ஒரு நல்ல களமாய் அமைந்திருக்கிறது. நிறையப்பேர் ஈடுபாட்டோடு உழைப்பதால், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் சுவாரஸ்யமாக ஏதாவது செய்யலாமா என்று யோசித்துச் செயலாக்க முடிகிறது” என்கிறார் தில்லானாவின் ரேவதி. அதோடு, நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி சேவை நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் நண்பர்களும், பொதுமக்களும் நிகழ்ச்சிகளை அமைக்கப் பெரிதும் உதவுகிறார்கள்.

“இந்தியாவின் நலனுக்காக நிதி திரட்டினாலும், அமெரிக்கநாட்டில் வளரும் இரண்டாவது தலைமுறையிடத்தும் நம் கலையைக் கொண்டுசெல்லும் பொறுப்பு தில்லானாவிற்கு இருப்பதாய் உணர்ந்தோம். ஒவ்வொரு நிகழ்ச்சியின் பொழுதும் தமிழ்ப்பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் ஓவியங்கள் மற்றும் தமிழ்ப் படைப்புகளைக் கண்காட்சியாக அமைக்கிறோம்” என்கிறார் தில்லானாவின் நிறுவன மற்றும் நிகழ்ச்சி அமைப்பாளராய் செயல்படும் சியாமளா.

“அதுமட்டுமின்றிக் குழந்தைகளை நடனம், பாடல் முதலானவற்றிலும் இயன்றவரையில் ஈடுபடுத்துகிறோம்” என்கிறார் அவர்.

******


பொங்கல் விழா - 2001

இந்த பொங்கல் சிறப்பு நிகழ்ச்சியிலுருந்து வழங்கப்பட்ட தொகையில் சென்னையின் உதவும் கரங்கள் அமைப்பு தில்லானாவின் பெயர்தாங்கிய ஒரு பெரிய பள்ளிக்கட்டிடத்தை நிறுவியுள்ளது. “இது போன்ற நல்ல காரியங்கள் நம் முயற்சியால் கைகூடுகிறது என்பதே மனதுக்கு திருப்தியும், இன்னும் சிறப்பாக, அதிகமாகச் செய்யவேண்டும் என்ற உற்சாகத்தையும் தருகிறது” என்கிறார் இக்குழுவைச் சேர்ந்த அனிதா.

******


வாராயோ வசந்தமே - 2002

தில்லானாவின் அடுத்த கலை நிகழ்ச்சி, வாராயோ வசந்தமே என்ற தலைப்பில் அரங்கேறியது.

அமெரிக்காவில் செப்டம்பர் சோகம் நடந்து முடிந்திருந்த அந்த சமயத்தில், மத நல்லிணக்கமும், அமைதியும் நிலவி, வாழ்வில் வசந்தம் மலர வேண்டிப் புதுமையான மதநல்லிணக்கப் பாடல் ஒன்றையும் பாடி நிகழ்ச்சியைத் துவக்கினர். திரைச்சீலை விலகியதுமே அரங்கத்தில் கரவொலி முழங்கும் அளவிற்கு மேடையமைப்பு இருந்தது.

மெல்லிசை நிகழ்ச்சியிலிருந்து புத்துணர்வு கொண்ட முழுமையான கலைப்படைப்பாக தில்லானா நிகழ்ச்சி உருப்பெற்றது ‘வாராயோ வசந்தமே’ நிகழ்ச்சியில்தான் என்று சொல்லலாம். நகைச்சுவை கலந்த நாடக உத்தியிலான தொகுப்புரை, தொழில்முறைக் கலைஞர்களுக்கு சவால்விடும் நடனக்காட்சிகள், வசந்தத்தை வரவேற்கப் புதிதாய் அமைத்த கருத்துப்பாடல், நடிகர் திலகம் சிவாஜிக்கு அஞ்சலிப் பாடல், சிறப்பான ஒலி/ஒளி என்று பல அம்சங்களையும் கொண்டு பாராட்டுக்களைக் குவித்தது இந்த நிகழ்ச்சி.

“ஏன் வருடத்திற்கு ஒரு தடவைதான் நிகழ்ச்சியை வழங்க வேண்டும்?” என்ற கேள்விக்கு, தில்லானாவின் இராகவன் மணியன் விடையளிக்கிறார். "பல அம்சங்களையும் கொண்ட ஒரு நிகழ்ச்சியைப் படைக்க வேண்டுமென்றால் இசையில் தொடங்கி எல்லாத் திசைகளிலும் கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட குழு சுமார் ஐந்து மாதங்கள் உழைக்கவேண்டியிருக்கிறது. ஒரு பெரிய திருவிழா நடத்துவது என்று சொல்லலாம். ஆனால், தில்லானா நிகழ்ச்சி தவிர வருடம் முழுவதும் எங்கள் கலைஞர்களில் பலர் நாடகங்கள், வானொலி நிகழ்ச்சிகள், கர்னாடக, ஹிந்துஸ்தானி மற்றும் Fusion இசை நிகழ்ச்சிகள், சிறிய அளவில் மெல்லிசை நிகழ்ச்சிகள் எல்லாம் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.” இவரே கர்னாடக இசைக்கலைஞர்தான்.

எடுத்துக்காட்டாக, குஜராத் பூகம்ப நிதிக்காக சான் ஹோசே பகுதியின் வெவ்வேறு குழுக்களோடு இணைந்து நிகழ்ச்சி வழங்கியதைச் சுட்டுகிறார்.

******


கண்மணியே (2003)

சங்கரா கண் நல மையத்தால் அமைக்கப் பட்டது இந்நிகழ்ச்சி. இன்னும் ஒருபடி மேலே போய் Multi Media அடிப்படையிலான தொழில் நுட்பங்களை வைத்துப் பாடல் பின்னணிகளை வியக்கும் வண்ணம் அமைத்திருந்தார்கள்.

நிகழ்ச்சி முழுவதும், ஒலி ஒளி பின்னணிகள் நிகழ்ச்சிக்கு புது வடிவம் கொடுத்தன. வழக்கம் போல சொந்தப்பாடல்கள், நடனங்கள், நகைச்சுவைப் பகுதிகள், மெருகேறிய இசை ஆகியவை இந்நிகழ்ச்சிக்குப் பெருவெற்றி தந்தது.

தில்லானாவின் கலைப்பயணத்திற்கு இலக்கு என்ன? என்று வினவினோம். “சான் ஓசேயில் இருக்கும் தில்லானாவின் குரலை உலகெங்கும் ஒலிக்கச்செய்யலாமே? வானம்தான் எல்லை” என்கிறார் இராகவன்.

“பெரும்பாலும் திரை இசைப்பாடல்களை வழங்குகிறோம். நாங்களே இசையமைத்து வழங்கும் முழு நீள நிகழ்ச்சிகள் சாத்தியம்” என்கிறார் முகுந்தன். இசை மட்டுமின்றி நாடகம், நகைச்சுவை, நடனம் என்று பலதரப்பட்ட அம்சங்களுக்கு மேடைதரும் ஒரு மையமாகத் தில்லானா உருவெடுக்கும்.

“கலைத்துறையில் ஈடுபாடும் ஆக்கத்திறனும் கொண்டவர்களுக்குத் தில்லானாவின் மின்னஞ்சல் பெட்டி (தொடர்பு கொள்ள: thillana@thillana.net) காத்திருக்கிறது” என்கிறார் கவிதா. திறமையிருந்தால் நீங்களும் மேடையேறலாம்.

ஒரு வழிகாட்டும் தன்னார்வக் குழுவாக செயல்படும், தில்லானாவின் தமிழோசை உலகெங்கும் ஒலிக்கத் தென்றல் வாழ்த்துகிறது.

மேலும் தகவல்களுக்கு இணையத்தள முகவரி: www.thillana.net

******


இதுவரை திரட்டப்பட்ட நிதி மற்றும் கொடுக்கப்பட்ட விவரம்

கலை நிகழ்ச்சி நிதி பெற்ற நிறுவனம் திரட்டிய நிதி

சுதந்திரதின விழா (2000) Asha for Education $15,000

பொங்கல் விழா (2001)
(அமைப்பு:விரிகுடாப்பகுதித் தமிழ் மன்றம்) உதவும் கரங்கள், சென்னை $10,000

வாராயோ வசந்தமே (2002) Association for India’s Development $26,000

கண்மணியே (2003) சங்கரா கண் நல மையம் $20,000

மொத்தம் $71,000


பாபா ஆனந்தன்

© TamilOnline.com