அன்பால் அரவணைக்கும் மாதா அமிர்தானந்தமயி!
ஜூன், ஜூலை மாத இறுதிவரை அமெரிக்கா வந்திருந்தார் 'அம்மச்சி' (மலையாளத்தில் 'பெரியம்மா' எனப் பொருள்படும்) என்று அழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமயி. அன்பின் அடையாளமாக விளங்குபவர் அம்மச்சி. இவர் சியாட்டில், விரிகுடாப் பகுதியில் உள்ள சான் ரமோன், லாஸ் ஏஞ்சலஸ், சான்டா ·பே, டாலஸ், ·பேர்·பீல்ட், சிகாகோ, வாஷிங்டன், நியூயார்க், பாஸ்டன், ரோட் ஐலன்ட் ஆகிய ஊர்களுக்குச் பயணம் சென்று, தன்னைக் காணவந்த மக்களை அன்பினால் அரவணைத்தார்.

அம்மச்சி பங்கு பெற்ற நிகழ்ச்சிகளில் ஆன்மீக சொற்பொழிவுகள் மற்றும் பஜனைகள் நடைபெற்றன.

மாதா அமிர்தானந்தமயியின் சொற் பொழிவுகளில் இருந்து சில முத்துக்கள்:

"மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடிப்படை - அன்பு. குடும்பத்தை இணைப்பது அன்புதான். அன்பைப் பகிர்ந்து கொள்வதில்தான் உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. கணவன்-மனைவி, பெற்றோர் - குழந்தைகள் ஆகியோரி டையே பரஸ்பரம் அன்பு இருக்கவேண்டும்.

உடல் வளர உணவு எப்படி அவசியமோ, அதுபோல் ஆன்மா வளர அன்பு மிகவும் அவசியம். அன்பு ஆன்மாவிற்குத் தாய்ப்பாலையும்விட இன்றியமையாதது.

அன்பே கடவுளின் முகம். அன்புடையவர்களால் கடவுளை உணர முடியும். அன்பினால் எல்லா மனக் காயங்களையும் ஆற்ற முடியும். அன்பு பொங்கும் முகத்திலிருந்து வெளிப்படும் புன்னகைதான் உலகிலேயே மிகவும் அழகானது."

"தியானம் தங்கத்தைப் போல் உயர்வானது. தியானம் பொருள் நலம், மன அமைதி ஆகியவற்றுடன் ஆன்மீக உயர்வையும் தரவல்லது.

வாழ்க்கையின் உயரிய குறிக்கோளான பற்றற்ற நிலையை அடையச்செய்வது தியானம். பக்தியும், தன்னலமற்ற சேவையும் வேறல்ல - இவை இரண்டும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களே."

"நமது மனம் ஒரு தோட்டத்தைப் போன்றது - அதில் மணம்வீசும் பூக்கள், சுவையான பழங்கள் எல்லாம் உண்டு. நாம் அதிலுள்ள களைகளை அடிக்கடி அப்புறப்படுத்த வேண்டும்.

நமது சோகங்களுக்குக் காரணம், நமது கடந்த காலக் காயங்கள். பெரும்பாலான மக்களின் பிரச்சினைகளுக்குக் காரணம், அவர்களது கவலைகளே.

வியாதிகளுக்கும் கவலைகளே காரணம். நமது பகுத்தறிவைப் பயன்படுத்தி கடந்த கால நல்ல அனுபவங்களை ஏற்றுக்கொள்ளவும், கெட்ட அனுபவங்களை ஒதுக்கவும் கற்றுக்கொண்டால் வாழ்க்கை என்றும் வசந்தமாகும்!"

ஒவ்வொரு நாளும் பகலும் இரவுமாய் மக்களைச் சந்தித்து அன்பைப் பகிரும் மாதா அமிர்தானந்தமயியை 'அன்பே அம்மச்சி' என்று சொல்லத் தோன்றுகிறது.

(அம்மச்சியைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள 'Amritavani The E-Voice of Amma' என்ற இலவச மின்னிதழைப் பெற மின்னஞ்சல் செய்தி Subscribe என்று Amritavani@amritapuri.org முகவரிக்கு அனுப்புங்கள். www.amritapuri.org என்ற வலைத்தளத்திலும் சென்று தகவலறியலாம். அமெரிக்காவில் தொடர்பு கொள்ள: macenter@ammachi.org; வலைத்தளம் www.ammachi.org)

சூப்பர் சுதாகர்

© TamilOnline.com