ராம பக்தி சாம்ராஜ்ய...
விரிகுடாப்பகுதியின் சான் ஹோசேவில் ஜூன், 7ம் தேதியன்று சத்குரு வித்யாலயாவின் ஆண்டுவிழா மிக விமரிசையாக நடந்தது. தியாகராஜர், புரந்தரதாசர், முத்துசுவாமி திட்சீதர், மதுரை என். கிருஷ்ணன், தஞ்சாவூர் சங்கர ஐயர், வீணை குப்பையர், அருணாச்சலக் கவிராயர் மற்றும் பல இசைமேதைகள் ஸ்ரீராமர் மேல் இயற்றிய பாடல்களின் தொகுப்பை 'பாஹி ராமா' என்ற தலைப்பில் இப்பள்ளியின் ஆசிரியரான ரமா தியாகராஜன் அரங்கேற்றினார்.

இந்நிகழ்ச்சியில் ரமாவின் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இப் பாடல்களைத் தனியாகவும், சேர்த்தும் மிக அழகாகப் பாடினார்கள்.

அடுத்து, ரமா தியாகராஜனும் 'கிரி ராஜ சுதா', 'ராமனுக்கு மன்னன்', 'பாஹி ராமா' மற்றும் பல பாடல்களை செளம்யா விஸ்வநாதனுடன் சேர்ந்து பாடினார்.

ரமா தியாகராஜன் ஆறு வயது முதல் கரூர் டி. கிருஷ்ணமூர்த்தி மற்றும் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களிடம் இருந்து முறைப்படி கர்நாடக இசை பயின்றார். கர்நாடக இசையில் தமிழ்நாடு அரசின் டிப்ளமோ வாங்கியபின் சங்கீதத் திறனை திருவையாறு கோபால கிருஷ்ணனிடம் மெருகேற்றிக் கொண்டார். இதைத் தவிர கந்ததேவி விஜயராகவன், அக்கரை முருகன் அவர்களிட மிருந்து முறையாக வயலினும் கற்றுக் கொண்டார். விரிகுடாப்பகுதி 'பாரதி கலாலயா'வில் சிறிதுகாலம் ஆசிரியராக இருந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு மாணவர்களுடன் சந்தோஷ் கண்ணன் வயலினும், சந்தீப் சேஷாத்திரி மிருதங்கமும் வாசித்தனர். ரமாவுடன் கார்த்திக் லக்ஷ்மி நாராயணன் வயலினும் கொளத்தூர் விஜயன், சாய் கிருஷ்ணன் மிருதங்கமும் வாசித்தனர். மொத்தத்தில் 'பாஹிராமா' ஒரு இனிய பக்தி இசை விருந்து என்பது முற்றிலும் உண்மை.

ஹேமா ரங்கராஜூ

© TamilOnline.com