தமிழ் நாடு அறக்கட்டளை: தமிழர் விழா
கடந்த ஜூலை 4, 5, 6 தேதிகளில் இந்த அமெரிக்க மண்ணின் தென்பாண்டிச் சீமையெனத்திகழும் ·ப்ளோரிடா மாநிலத்தில் ஓர்லாண்டோ நகரில் எண்ணற்ற அறப் பணிகளைச் செய்துவரும் தமிழ்நாடு அறக் கட்டளையின் மாநாடு நடந்தது.

முதல் நாள் நிகழ்ச்சிகள் 'வந்தேமாதரம்' வாழ்த்தொலியோடு துவங்கியபோதே பாசமிகு பாரதமண்ணின் வாசனை அரங்கத்தில் உலாவரத் தொடங்கியது. உமையாள் முத்து, சரசுவதி இராமநாதன், நிர்மலா மோகன், மற்றும் முருகரத்தினம் போலும் அறிஞர் பெருமக்கள் தமிழ் விருந்து படைத்த வண்ணம் இருந்தனர். இம்மண்ணிலேயே பிறந்து வளர்ந்த ஏழு முதல் பத்து வயதிற்குட்பட்ட இளவல்களைக் கொண்டு சோமலெ. சோமசுந்தரம் அவர்கள் வழங்கிய பட்டிமன்றம் நம்மையெல்லாம் ஒரு புதிய கோணத்தில் இந்த இயந்திர வாழ்க்கையைப் பார்த்திட வழிகாட்டியது. 'வருங்கால அமெரிக்க சமுதாயத்தில் தமிழ்மொழி இருக்குமா, இருக்காதா?' என வாதிட்ட இளவல்களின் இப்பட்டிமன்றம் நடைமுறைக்குத் தேவையான ஒரு கருத்தரங்காகும்.

வெள்ளி, சனி இரண்டு நாட்களும் நடந்த ராகமாலா நாட்டியக் குழுவின் நடன நிகழ்ச்சி கண் கொள்ளாக்காட்சி. நடனக்குழுவினரில் பெரும்பாலோர் வேற்று இனத்தவர் என்பது அவர்களின் தோற்றத்தில் மட்டும்தான். ஆனால் குறவஞ்சி நடனத்தின் போது அவரெல்லாம் நம்மைக் குற்றால அருவியில் குளித்தெழச் செய்தனர். ருத்ர தாண்டவத்தின் போது எதிரங்கு ஒருவரின்றி நடமாடும் இறையனாரின் தில்லையம்பதிக்கே அழைத்துச் சென்றதுபோல் ஓர் அற்புத நிலை. பாரத மண்ணின் பல மாநில அழகுகளைப் பாதச் சலங்கைகளில் பதித்து இவர்கள் பதம் பிடித்தபோது விரல்கள் பேசின; விழிகள் பாடின.

"வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்" என்ற வடலூராரின் அன்புள்ளத் தோடு தமிழகத்துக்கு முடிந்த போதெல்லாம் நேரே சென்று எத்தனையோ தொழு நோயினர் மற்றும் அனாதைக் குழந்தைகளுக்கு ஆதரவளித்து வரும் பெக்கி டக்ளஸ் அம்மையாரும் விழாவுக்கு வந்திருந்தார். மதுராந்தகத்திலும் மற்றும் சென்னையிலும் அவர் ஆற்றிவரும் பணிகளை எடுத்துரைத்த போது மெய்சிலிர்த்தோம். தமிழகப் பள்ளிகளில் மாணவியருக்குக் கழிப்பறைத் திட்டத்தைத் துவக்கி வைத்து அங்கேயே ஐநூறு டாலர்கள் அவர் வழங்கியதை இங்கே குறிப்பிடவேண்டும்.

சீர்திருத்தச் சிந்தனையாளரும் எழுத்தாள ருமான சு. சமுத்திரம் அவர்கள் இந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக வர இசைந்திருந்தார்கள். திடீரென இயற்கை எய்திய அவரை அவை நினைவு கூர்ந்தது. நலிவுற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் நம் அறக்கட்டளையின் பணிகள் வளர அவரது ஆன்மா வாழ்த்தும் என்பதில் ஐயமில்லை.

மாநாட்டுவிழா மலரில் அறக்கட்டளையின் பணிகளை வண்ணப்படங்களின் பின்னணியில் வார்த்தைச் செறிவோடு டாக்டர் பரிமளா நாதன் சொல்லியிருந்த பாங்கு வியக்கத்தக்கது. அறுசுவை உண்டி, நடனங்கள், கருத்து மிகுந்த பேருரைகள் என மூன்று நாட்கள் போனதே தெரியவில்லை. விழாவின் நிறைவாக உன்னிகிருஷ்ணன் குழுவினர் வழங்கிய இசை நிகழ்ச்சி அரங்கில் இன்னமும் ஒலிப்பதாகக் கேள்வி. ஆனால் பொற்குடத்துக்குப் பொட்டிட்டது போல் விழாவின் இறுதியில் டாக்டர் சொக்கலிங்கம் இந்த விழா மூலம் திரட்டிய நிதியாக ஐம்பதாயிரம் டாலர்களை அறக்கட்டளையின் தமிழ்நாட்டுத் திட்டங்களுக்கென வழங்கிய போது மகிழ்ச்சியில் பூரித்துப் போனோம்.

© TamilOnline.com