சுவாரசியமான காலத்தில் வாழ்க!
அப்பாடி, எப்படிப் பறந்துவிட்டதோ தெரியவில்லை; இதோ இந்த ஆகஸ்டு 15 வந்தால், அமெரிக்கத் திருநாட்டிற்கு நான் குடியேறி 25 ஆண்டுகள் நிறைவு பெறுகின்றன. அதைக் கொண்டாடும் வேளையில், கடந்த ஆண்டுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டி ருக்கிறேன். இந்தக் கால் நூற்றாண்டில் எவ்வளவு மாற்றங்கள்! சிந்துபாத் கதைகளில் வரும் விந்தை நாடுகளைப் போன்ற ஓர் அமெரிக்காவை எதிர்பார்த்து வந்து இறங்கிய என்னை அமெரிக்கா இவ்வளவு கட்டிப் போட்டு விடும் என்று நான் கனவிலும் கருதவில்லை. "வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்று தமிழ்நாட்டைப் பற்றிப் பெருமையாகப் பேசிக் கொள்வோம். உலகில் எந்த மூலையிலிருந்து வந்தவரையும் வாழவைக்கும் அமெரிக்கா ஓர் அற்புதமான நாடுதான்.

"சீன மொழியில் 'சுவாரசியமான காலத்தில் வாழ்க!' என்று ஒரு சாபம் இருக்கிறது; விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நாம் சுவாரசியமான காலத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்றார் ராபர்ட் கென்னடி. அது போல் வரலாற்றின் திருப்பு முனைகள் நிறைந்த சுவையான காலத்தில் உலகம் இதுவரை கண்டிராத மாபெரும் நாட்டில் வாழும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. நான் வந்த புதிதில் ஒரு கேலன் கேசொலின் 62 சென்ட் தான். ஆனால், அரை லிட்டர் மினரல் வாட்டர் பாட்டில் விலை அதை விட அதிகம்! அதனால்தான், அப்போது அமெரிக்கர்களால் கப்பல் போன்ற சொகுசு கார்களில் பவனி செல்ல முடிந்தது. ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு எது நல்லதோ அதுதான் அமெரிக்காவுக்கும் நல்லது என்றும் நம்பினார்கள். அந்த சமயம், அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் அதிகார அத்து மீறலால் நிலைகுலைந்து போயிருந்த அமெரிக்கா, நல்ல மனிதரான ஜிம்மி கார்ட்டரின் தலைமையில் மீண்டும் எழ எத்தனித்துக் கொண்டிருந்தது.

ஆனால் கார்ட்டருக்குத் துரதிர்ஷ்டம். அரபு நாடுகளின் கச்சா எண்ணை ஆதிக்கம், ஈரான் புரட்சி இரண்டும் அமெரிக்காவை ஆட்டிப் படைத்தன. அமெரிக்காவுக்கு எண்ணை ஏற்றுமதி செய்ய மறுத்தால், அரபு நாடுகளின் மேல் அணுக்குண்டு போடுவேன் என்று மிரட்டுவதில் தவறில்லை என்ற கருத்துக்குப் பெருவாரியான ஆதரவு இருந்தது. அதனால், ஈரான் புரட்சிக் காரர்கள் அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி, அமெரிக்கர்களைப் பிணைக் கைதிகளாகச் சிறையெடுத்து அவமானப் படுத்தியபோது கார்ட்டர் காட்டிய பொறுமை கையாலாகாத்தனமாய்த் தெரிந்தது. இது போதாதென்று பொருளாதார நிலையும் மந்தமாகி, அடமான வட்டியும் 23 சத விகிதத்தை எட்டியது. இந்தப் பின்னணியில் தான் மாபெரும் மாற்றங்கள் தொடங்கின.

கேசொலின் விலையேற்றத்துக்குத் தாக்குப்பிடிக்க அமெரிக்கர்கள் ஜப்பானிய இறக்குமதி வண்டிகளை நாடினார்கள். அமெரிக்கக் கார் உற்பத்தித் தலைநகராம் டெட்ராய்ட்டின் வீழ்ச்சி அப்போது தொடங்கியது. சோவியத் யூனியனை ஒழிக்கும் தீவிர முயற்சியில் இறங்கிய அமெரிக்க அரசு, அமெரிக்கத் தொழில் நுட்ப வல்லுநர்களை ஆயுத உற்பத்தியில் முடக்கி விட்டது. இதனால், மேஜைக் கணினிப் புரட்சியை உருவாக்கிக் கொண்டிருந்த அமெரிக்க நிறுவனங்களுக்கு ஆள் பற்றாக்குறை. வேறு வழியில்லாமல் பட்ட மேற்படிப்புக்கு வந்திருந்த வெளிநாட்டு மாணவர்களைப் பெருவாரியாக வேலைக்கு எடுக்கத் தொடங்கியது அப்போதுதான். "கணினியே தெரியாத இந்தியாவிலிருந்து வந்தவர்களை வேலைக்கு எடுக்கலாமா" என்ற கவலை கொண்ட முதலாளிகள் அமெரிக்கப் பட்டப்படிப்பை நம்பி வேலை கொடுத்தார்கள்.

"கணினியே தெரியாத இந்தியா" இப்போது கணினி உலகையே கலக்கிக் கொண்டிருக்கிறது. அன்று டெட்ராய்ட் கார் தொழிற்சாலை வேலைகள் ஜப்பானுக்குப் பெயர்ந்தன. இப்போதோ, பொருளாதார மந்த நிலையில் கணினி, இணையம் வழியாகச் செய்யக்கூடிய எல்லா வேலைகளும் அமெரிக்காவை விட்டு மலிவான ஆனால் திறமையுள்ள இடங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. படிப்பும், அனுபவமும், திறமையும் மிக்க பலர் மாதக் கணக்கில் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். சிலிக்கன் வேல்லியைப் பொறுத்தவரை, இது பொருளாதார மந்தநிலையல்ல (recession), பொருளாதாரச் சரிவுநிலை (depression). அமெரிக்காவை விட்டுப் போய்க் கொண்டிருக்கும் இந்த வேலைகள் "போனது போனதுதான்" என்ற அச்சமும் நியாயமானதே!

இந்தப் பின்னணியில்தான் H1-B விசா திட்டத்தை நிறுத்தும் முயற்சியைப் பார்க்க வேண்டும். கொலராடோ காங்கிரஸ்மன் டாம் டேன்க்ரெடோ H1-B விசாவை உடனடியாக நிறுத்த வேண்டும் என்கிறார். கூடவே கூடாது என்று சுலேகா வலைத்தளத்தில் இந்தியர்கள் மனு கொடுக் கிறார்கள். டேவிஸ், கலி·போர்னியா பல்கலைக்கழகப் பேராசிரியர் நார்மன் மேட்லா·ப் இவ்வளவு வேலையில்லாத் திண்டாட்டத்தில் H1-B விசா தேவையில்லை என்று சான்றுகளுடன் மறுக்கிறார் (http://heather.cs.ucdavis.edu/itaa.html). கவலைப்படாதீர்கள், "இந்தியா அழைக்கிறது வாருங்கள்!" என வரவேற்கிறது "சிலிகன் இந்தியா" வேலைச் சந்தை. மாதக்கணக்காக வேலையின்றித் தவித்துக் கொண்டிருந்த இந்தியர்கள் பலர் இந்தச் சந்தையை மொய்க்கிறார்கள். நாங்களோ சிலிக்கன் வேல்லி 3.0 பதிப்பின் மறுதொடக்கத்துக்குக் காத்துக் கொண்டிருக்கிறோம்!

நியூ ஜெர்சியில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாடு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னர் இலங்கையின் சிங்கள ஆதரவுப் பத்திரிக்கை ஒன்று பேரவை மாநாடு விடுதலைப் புலி நிதிதிரட்டு நிகழ்ச்சி என்று பரபரப்பான வதந்திச் செய்தி வெளியிட்டது. பத்திரிக்கை தர்மத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய பெரும் இந்தியப் பத்திரிக்கைகள் அந்தச் செய்தியைச் சரிபார்க்காமல் அப்படியே வெளியிட்டார்கள். இந்தப் பொறுப்பின்மை வருந்தத் தக்கது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவை என்ற மதிப்பை வெகுவாக உயர்த்தி விட்டது இந்த மாநாடு. இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொலையாடல் வழியாக ஒரு மணி நேரம், தமிழில் பேசிப் பாடி ஆடி மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டார். மாநாட்டின் இன்னொரு சாதனை "நந்தன் கதை" என்ற முத்தமிழ் நாடகம். நாட்டுப்புறக் கலைகளில் ஊறிய கலைஞர்கள் படைத்த இந்த அற்புதமான நாடகத்தைப் பார்த்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

வாசகர்களுக்கு இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.

மணி மு. மணிவண்ணன்

© TamilOnline.com