எஸ்மா / டெஸ்மா
ஜூலை மாதம் 2ம் தேதி 12 லட்சம் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுள் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் பேர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக இறங்கினார்கள். ஆனால் முதல்வர் ஜெயலலிதா இந்தப் போராட்டத்தை ஒரே வாரத்தில் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிவிட்டார்.

அந்த இரும்புக்கரம் எஸ்மா/டெஸ்மா. போராட்டம் நடத்துபவர்களை விசாரணை இல்லாமல் பணியில் இருந்து நிறுத்துவது. கிட்டத்தட்ட 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பணிக்கு புதியவர்களை நியமிக்கும் முயற்சியும் தீவிரமாக நடைபெற்றது.

அரசின் கடுமையான நடவடிக்கைகளை அடுத்து போராட்டம் பிசுபிசுத்துப் போனது. கடைசியில் தங்கள் வேலையை காப்பாற்றிக் கொண்டால் போதும் என்ற பரிதாபமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள்.

இந்திய வரலாற்றிலேயே அரசு ஊழியர்கள் போராட்டத்தை தமிழக அரசு தற்போது கையாண்டது போன்ற முன்னுதாரணம் எதுவும் இல்லை. அடிப்படை உரிமைகளுக்காக போராடும் உரிமையைக்கூட பறிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டது. எஸ்மா போனற் சட்டங்கள் உரிமையைப் பறிக்கும் ஆயுதமாக உள்ளது.

அரசு ஊழியர்கள் வேறுவழியில்லாமல் தமிழக அரசிடம் சரணடைந்துவிட்டாலும் அரசியல் கட்சிகளும் சில தொழிற்சங்கங்களும் தமிழக அரசின் எதேச்சதிகாரப் போக்கை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் ஒரு கட்டமாகவே அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கண்டனக் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவும் தயாராகிவிட்டன.

அதிமுக அரசின் நடவடிக்கைகள் எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி வருகிறது. ஆனால் இந்தப் பலம் அதிமுகவுக்கு பலத்த எதிர்ப்பாக மாற்றாக வரமுடியுமா?

துரை.மடன்

© TamilOnline.com