அன்னியச் செலாவணி வணிகம்
'அப்பா! வலிக்குதே' அலறினான் டேவிட். வீட்டுக்கு வந்திருந்த மருத்துவச் செவிலியான புவனா, முடிந்த மட்டும் மெதுவாகக் கட்டுப் போட்டாள். சிறிது ஆசுவாசம் அடைந்த டேவிட் கேட்டான், ' உன்னைப் போலவே ராப்பகல் விடாமல் உழைப்பது எது தெரியுமா?'

பதிலுக்குக் காத்திராமல் டேவிட் தானே விடை கூறினான், 'அன்னியச் செலாவணி வணிகம். உலகத்தின் மிகப் பெரிய வர்த்தகச் சந்தையான இது உறங்குவதில்லை. அன்றாடம் சராசரியாக 2 டிரில்லியன் டாலர் இதில் வாங்கி விற்கப்படுகிறது. 24 மணி நேரமும் இயங்குகிறது. செலாவணிச் சந்தை ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு (EST) தொடங்குகிறது. வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு (EST) மூடுகிறது. வாரம் முழுவதும் செலாவணி வர்த்தகர்கள் வணிகம் செய்கின்றனர்.

நாள் முழுக்க உழைத்துக் களைத்துப் போயிருந்த புவனா, 'பங்குச் சந்தையைப் பற்றிக் கேள்விப்பட்டதுண்டு' என்று சொன்னாள்.

இதைக் கேட்டதும் டேவிட்டுக்கு உற்சாகமாகிவிட்டது. 'ஆமாம். செலாவணிச் சந்தையில் இரண்டுவகை நாணயங்களை வர்த்தகம் செய்வதுண்டு; அடிப்படை நாணயம் (base currency), மாற்று நாணயம் (counter currency). உதாரணமாக, USD/JPY 116 என்று ஒரு மாற்றுவிகிதம் இருக்கிறது என்றால் அதன் பொருள், 1 யு.எஸ். டாலருக்கு, 116 ஜப்பானிய யென்களை வாங்கலாம் என்பதுதான். இதில் டாலர் அடிப்படை நாணயம்; ஜப்பானிய யென் மாற்று நாணயம்.

'நாணயப் பரிமாற்றத்தில் இரண்டு நாணயங்கள் உண்டு; ஒன்றை விற்று மற்றொன்றை வாங்குவோம். அதையே, ஒரு நாணயத்தைக் குறைத்துக் கொண்டு (short) மற்றொன்றை அதிகரிப்பதாக (long) சொல்லலாம்.

புவனா வீட்டுக்கு வந்தபோது அவளுடைய மகள் ராணி கோபத்தில் சீறிக் கொண்டிருந் தாள். 'அம்மா, நீ ராத்திரி முழுவதும் வேலை செய்வதே எனக்குப் பிடிக்கவில்லை. அதிலும், சொந்தப் பெண்ணை அலட்சியப் படுத்தி விட்டு யாரோ ஒருவருக்குச் சேவை செய்து கொண்டு இருக்கிறாய்' என்றாள் ராணி. அவளுடைய கோபமெல்லாம் வீட்டைவிட்டுப் போய்விட்ட அப்பாவின் மீதுதான் என்பது புவனாவுக்குத் தெரியும். இருந்தாலும் புவனா எதனால் தான் வரத் தாமதமானது என்பதை விளக்கினாள்.

சாப்பிடும்போது ராணி பேசத் தொடங் கினாள் 'அம்மா, உனது நோயாளி விட்ட இடத்திலிருந்து பேசலாம். அதே USD/JPY உதாரணத்தையே எடுத்துக் கொள்ளலாம்' என்றதும் புவனா ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தாள்.

'காலையில் USD/JPY 116 ஆக இருக்கலாம். டாலர் வலுவாகி, யென் வலுவிழந்தால் அன்று மாலையில் 117 ஆகிவிடலாம். அதன் பொருள் என்ன தெரியுமா? காலையில் ஒரு டாலருக்கு 116 யென் வாங்கமுடிந்தது. இப்போது 117 கிடைக்கிறது. அதாவது அதே டாலருக்கு அதிக யென் கிடைக்கிறது என்பதுதான்.'

'இதெல்லாம் உனக்கு எப்படித் தெரியும்?' என்றாள் புவனா.

தோளைக் குலுக்கிவிட்டு ராணி தொடர்ந் தாள் 'யென்னுக்கு எதிராக டாலர் மதிப்புக் குறையும் என்று நீ எதிர்பார்த்தால், நீ டாலரை விற்று யென்னை வாங்கவேண்டும். அதாவது, டாலரைக் குறைத்து, யென்னை அதிகரிக்க வேண்டும்.'

'ம், இரண்டு தனிமையில் தவிக்கும் உயிர்களை நாணயச் சந்தை பற்றிய அறிவு ஒன்று சேர்க்கிறதோ!' என்று தனக்குள் சொல்லிக்கொண்டாள் புவனா.

மறுநாள் காலையில் டேவிடைப் பார்த்தபோது 'அட! எனக்கு ஒரு கூட்டாளி இருக்கிறார் என்று சொல்லுங்கள்' என்றான் உற்சாகமாக. முதல் நாள் இரவெல்லாம் பட்ட வலிகூட அவனுக்கு மறந்து போய்விட்டது.

'உங்களுக்கு நாணய வர்த்தகம் பற்றிப் பேசினால் உலகமே மறந்துவிடும் என்று என் அம்மா சொல்கிறார்களே' என்று ராணி டேவிடைக் கேட்டாள்; 'எனக்குச் சில கேள்விகள் கேட்கவேண்டும்' என்றாள்.

'பதில் சொல்கிறேன். கொஞ்சம் பொறு' என்றான் டேவிட்.

புவனா அவனது கட்டுகளை மாற்றி முடித்ததும் ராணி 'நாணய வர்த்தகத்துக்கும் பங்கு வர்த்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?' என்று கேட்டாள்.

'நாணயச் சந்தையில் ஏற்ற இறக்கம் ரொம்ப வேகமாக நடக்கும். ஒரு கம்பெனிப் பங்குகளை அடிப்படை ஆய்வு செய்யலாம், அல்லது தொழில்நுணுக்க ரீதியாக ஆயலாம். 40 சதவீதத்துக்கும் மேலான கரன்சி வாங்கிய இரண்டு நாட்களுக்குள் விற்கப்படுகிறது. 80 சதவீதம் கரன்சி வாங்கிய இரண்டு வாரத்துக்குள் விற்கப்படுகிறது. செலாவணி வணிகம் பெரும்பாலும் வணிகர்களால் (traders) செய்யப்படுகிறதே அல்லாது முதலீட்டாளர்களால் (investors) அல்ல.'

'அப்படியா! பங்குவணிக முதலீட்டாளர்கள், அதாவது பரஸ்பர நிதி மற்றும் நிதி நிறுவனங்கள் எல்லாம் பங்குகளை வருடக் கணக்கில் வைத்திருப்பார்கள் அல்லவா?' என்றாள் ராணி.

'நீ சொல்வது சரி. வர்த்தகர்கள் நெடு நாளைக்குப் பங்குகளை வைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். வங்கிகளும், ஹெட்ஜ் ஃபண்ட்ஸ் எனப்படும் தற்காப்பு நிதிகளும் அன்றாடம் செலாவணியை வாங்கி விற்பதுண்டு.

'ஒரு பங்கை வாங்குவதற்கு முன்னால் அந்தக் கம்பெனியின் வருவாய் ஈட்டும் திறன், பணவரத்து, கடன்மூலதன விகிதம் போன்ற பலவற்றையும் ஆராய்ந்துதான் வாங்குவார்கள்.

'செலாவணிச் சந்தையில் இவையெல்லாம் கிடையாது. ஆனால் இந்த வர்த்தகம் செய்பவர்கள் உலக அரசியல் நிலவரம் மற்றும் நாணய மதிப்பை பாதிக்கும் பிற காரணிகளைக் கூர்ந்து கவனித்து வருவார்கள். கேட்ரினா, இராக் போர் போன்றவை டாலரைப் பெரிதும் பாதிக்கும். ஆனால், இவை பங்குச் சந்தையை உடனடியாகவோ பெரிய அளவிலோ பாதிப்பதில்லை' என்று டேவிட் சொல்லி முடித்தான்.

'இன்னொரு கேள்வி' என்று ஆர்வத்துடன் சொல்லத் தொடங்கிய ராணி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள், 'உங்கள் உடல்நிலை அனுமதிக்குமானால்' என்று சொல்லி முடித்தாள்.

'உங்கம்மா என்னுடைய உடல்நலத்தை கவனித்துக் கொள்கிறார்கள். அப்படியிருக்க, நான் உன் பொருளாதார நலத்தை ஏன் கவனிக்க உதவக்கூடாது!' என்றான் டேவிட்.

புவனா புன்னகைத்தாள். ராணி கேட்டாள் 'பங்குச் சந்தையில் விலை மாற்றங்கள் ஒரு மெய்யான நாணயத்தில் குறிப்பிடப் படுகின்றன. நாணயச் சந்தையில் எப்படி?'

'பங்கு விலை ஏற்ற இறக்கங்கள் நாணயத்தில் தான் குறிப்பிடப்படுகின்றன. நேற்றைக்கு ஜெனரல் எலக்ட்ரிக்கின் விலை $34.25, இன்றை $34.50 என்றால், ஜி.ஈ. 0.25 டாலர் அதிகமானதாகச் சொல்வோம். நாணய வர்த்தகத்தில் மாற்றங்களை PIP மூலம் மதிப்பிடுவோம். PIP என்றால் விலை வட்டிப் புள்ளி (price interest point) அல்லது சதவிகிதப் புள்ளி (percentage in point). குறிப்பிட்ட நாணயமாற்று வீதம் அதன் விலையில் ஏற்படுத்தும் மிகச்சிறிய மாற்றத்தை இது குறிக்கும். உதாரணமாக, டாலர்/யென் வர்த்தகத்தில் ஏற்படும் மாற்றங்களின் குறைந்த பட்ச அளவு 0.01; இதை 1 pip என்று சொல்வது வழக்கம். ஒரு டாலருக்கு 106 யென் நேற்றைக்குக் கிடைத்தது, ஆனால் இன்றைக்கு 106.05 யென் கிடைக்கிற தென்றால் நாம் யென் 5 pip அதிகரித்துள்ள தாகக் கூறுவோம். ஆனால், மீதி எல்லா நாணயங்களுக்கும் அடிப்படை அளவு 0.0001 தான். யூரோ 1.0030வில் இருந்து 1.0040வுக்கு ஏறினால், அது 10 பிப் ஏறியதாகச் சொல்வோம்.

புவனாவுக்கு வேலை முடிந்துவிட்டது. அவள் கேட்டாள் 'நாணய விலை மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகள் என்ன?' என்று அவள் கேட்டாள்.

'அரசியல் ரீதியாக ஸ்திரமான ஒரு நாட்டின் நாணயம் வலுவானதாக இருக்கும். அந்த நாட்டில் நிலவும் வட்டி வீதமும் நாணய மதிப்பின் மீது பெரும் தாக்கம் ஏற்படுத்தும். வட்டிவீதம் பணவீக்கத்தின் மீது மட்டும் அல்லாமல், நாணய மாற்று வீதத்திலும் தாக்கம் செலுத்துகிறது. ஒரு நாட்டில் வட்டிவீதம் அதிகரித்தாலும் வெளிநாட்டுப் பணம் அங்கே அதிகம் வருகிறது; உடனே நாணய மாற்று வீதம் ஏறுகிறது.

'நாணயச் சந்தையில் தரகர்கள் கிடையாது, அப்படித்தானே?' என்று கேட்டாள் ராணி.

'ஆமாம். இந்த வணிகத்தில் தரகும் கிடையாது. டீலர்கள் எனப்படும் அன்னியச் செலாவணி வணிகர்கள் மூலம் நாணய வணிகம் நடத்தப்படுகிறது. கடைசியாக ஒரு கம்பெனியின் பங்கு என்ன விலைக்கு விற்றதோ அதுதான் அந்தப் பங்கின் அப்போதைய விலை. ஆனால் ஒரு குறிப்பிட்ட நாணயத்தின் விலையோ, வெவ்வேறு நாட்டு நாணயங்களுக்கு எதிராக வெவ்வேறு விலைகள் குறிப்பிடப்படும்.'

'டேவிட், உங்கள் உடல்நிலை விரைவில் தேறிவிடுமா?' என்று அக்கறையோடு கேட்டாள் ராணி.

'உறங்குமுன்னே பல மைல் தூரம் போகவேண்டும் என்று ராபர்ட் ஃப்ராஸ்ட் பாடினார். ஆனால் நானோ, உறங்குமுன்னே பல மில்லியன் சம்பாதிக்க வேண்டும் என்று பாடுகிறேன்' என்பதே டேவிடின் பதிலாக இருந்தது.


ஆங்கில மூலம்: சிவா மற்றும் ப்ரியா
தமிழ் வடிவம்: மதுரபாரதி

© TamilOnline.com