தமிழ் நாட்டில் நாட்டார் தெய்வங்கள் அறியப்படும் பலவும் - ஆண் தெய்வமாயினும் பெண் தெய்வமாயினும் - கொலை செய்யப்பட்டவர்களாகவோ, தற்கொலை செய்து கொண்டவர்களாகவோ தான் அவற்றின் கதைகள் கூறுகின்றன. பின்னணியில் சாதி ஏற்றத்தாழ்வு சார்ந்த முரண்கள் - குறிப்பாக பாலியல் விருப்பம் சார்ந்த முரண்களே உள்ளன. இத்தகைய கதைகளும் தெய்வங்களும் மறுஉருவாக்கம் அடைகின்ற பொழுது கலவரங்களும் மோதல்களும் மறுஉருவாக்கம் அடையுமா காணாமல் போய்விடுமா என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டியது அல்லவா...?
முனைவர் அ. ராமசாமி,பேராசிரியர், 'சமூகவிஞ்ஞானம்' என்ற இதழில்....
******
ஆரம்ப காலத்தில் என்னை ஈர்த்தது திமுக. அதன் தமிழுணர்வு, சமுதாய சீர்திருத்தக் கொள்கை, இனத்துவ சமுதாய அடையாளங்கள் எல்லாமே தேர்தல் அரசியலுக்குள் நுழைந்ததும் மாறிப் போனது. தேர்தல் பாதை திருடர் பாதையானது. ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் மேல்தட்டு வர்க்கத்தினரின், ஆதிக்க சாதியினரின் கைக்குள் சுருண்டது. கீழ்நிலையில் உள்ளவர்களைக் கைகழுவியது.
இது திமுகவுக்கு மட்டுமல்ல, எல்லா இயக்கங்களுக்கும் பொருந்தும். ஏற்கெனவே தயாராக இருக்கிற அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு உழைக்கும் வர்க்கம் தனக்காக எதுவும் சாதிக்க முடியாது.
எந்த அரசியல் இயக்கத்தையும் சார்ந்து இயங்குவது இன்றைய நிலையில் சாத்தியமில்லை. எந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதாகச் சொல்கிறார்களோ, அந்த மக்களுக்கு அவர்கள் உண்மையாக இருப்பதில்லை. நுண்ணுறவுக் கொண்ட இலக்கியவாதிகள் இந்த அமைப்புகளுக்குள் அடைந்து கிடக்க முடியாது.
பா. செயப்பிரகாசம், எழுத்தாளர் 'தீராநதி' பேட்டியில்...
******
'ஓவியம் வரைவது என்பது என் இரத்தத்தில் ஊறிய ஒன்று என்றே கூறலாம். ஏனென்றால் என் ஓவியத்திற்கு அடித்தளம் இட்டவர் என் தாயார் கனகவல்லி அம்மாள் தான். என் அம்மா எந்த வேலை செய்தாலும் அதில் ஒரு கலைநயத்தை நான் பார்த்திருக்கிறேன்.. உதாரணமா சொல்ல வேண்டும் என்றால் தோசை செய்வதில்கூட ஒரு அழகு இருக்கும். தோசையை எல்லோரும் வட்டமாகத்தான் செய்வார்கள். ஆனால் என் அம்மா தோசையை விதவிதமான வடிவத்தில் செய்வார்.. கிளி மாதிரி, யானை மாதிரி, பறவை மாதிரி என்று விதவிதமாக தோசை செய்து சாப்பிடகொடுப்பார்கள்... பார்க்க அழகாய் இருக்கும்.. இப்படி என் அம்மா செய்வதை அருகில் இருந்து எத்தனையோ முறை பார்த்திருக்கிறேன். தோசையில் மட்டும் அல்ல... வாசலில் போடும் கோலத்திலும் பல வகை ஓவியங்கள் வரைவார்... தேர், மயில், அன்னம் என்றும் பொங்கல் சமயத்தில் பெண் ஒருத்தி பொங்கபானை இடுவது போலவும், விவசாயி கரும்பைத் தலையில் வைத்துக் கொண்டு வருவது போலவும் என்று அந்தந்த சூழ்நிலைக்கேற்றவாறு கோலங்கள் மாறுபடும்... இப்படி என் தாயாரின் ஒவ்வொரு செயலையும் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த எனக்கு என் அறியாமலேயே ஓவியத்தில் ஈடுபாடு ஏற்பட்டது.'
சுதர்சன், பிரபல கார்ட்டூனிஸ்ட், ஆறாம்திணை பேட்டியில்...
******
ஊழலின் பலன்களை உண்மையில் அனுபவிக்கின்ற மேல்நிலை அரசு ஊழியர், ஆளும் கட்சியினர் மற்றும் அவர்களைச் சார்ந்திருக்கும் அரசியல்வாதிகள், இவர்களுக்குப் பணம் கொடுத்து காரியம் சாதிக்கும் வலுவான நிலையிலிருக்கும் பெரும் தொழிலதிபர்கள், வியாபாரிகள், வர்த்தகச் சூதாடிகள் மற்றும் இவ்விரு பகுதியினருக்கும் உறவுப்பாலம் அமைக்கும் இடைத்தரகர்கள் போன்றோரின் பிடியில் இருக்கும் அரசு ஏழ்மையை அகற்றும் பணியில் உண்மையிலேயே ஈடுபாடு கொண்டிருக்கும் என்று எப்படி நம்ப முடியும்?
பெரும்பாலான மக்களின் வறுமையும் இயலாமையும் தானே ஊழல்களின் பலனை மட்டுமன்றி, நாட்டின் செல்வாதாரங்களையும் பல்வேறு பகுதியினரின் உழைப்பையும் பயன்படுத்திப் பெறும் பல்துறை வளர்ச்சியின் பலன்களையும் மேல்தட்டு மக்கள் தட்டிப் பறிக்கும் சாத்தியத்தை ஏற்படுத்தியுள்ளன. பெரும்பான்மையினரின் வறுமையில் தங்கள் வளமையைப் பெருக்கிக் கொள்ளும் உயர்வர்க்கத்தினரின் நலன் பேணும் - அவர்களைச் சார்ந்திருக்கும் அரசு ஏழ்மையை நீக்க எடுத்த ஓரிரு முயற்சிகளையும் சிறிது சிறிதாகக் கைவிட்டு வறியோரைக் கைகழுவும் நிலைக்கு வந்துவிட்டதில் வியப்பொன்றுமில்லை.
எஸ். விஸ்வநாதன், ஃபிரன்ட்லைன் சிறப்புச் செய்தியாளர், தி.சிகாமணி எழுதிய 'ஊழலோ ஊழல்' எனும் புத்தக அணிந்துரையில்...
கேடிஸ்ரீ |