முன் சுருக்கம்:
2000க்கும், 2001க்கும் இடையிலான ஒருவருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.
நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலகமூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன் பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.
அப்படிப்பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார். நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மிதேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட் டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போதுகூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.
அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாகப் பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப்பல தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படியிருந்தாலும் தலைக்கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாகப் பதிலளிப்பார். அதேபோல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலானவரை தயங்காமல் செய்வார்.
அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.
சென்ற இரண்டு இதழ்களில், சுந்தர் என்பவர் தான் ஆரம்பிக்கும் நிறுவனத்துக்கு மூலதனம் தேடுகையில் VCக்கள் போடும் நிபந்தனைகள் மிகக் கடுமையாக இருப்பதால் இறுதியில் நிறுவனம் ஆரம்பிப்பவர்களுக்குப் பலன் மிகச் சிறிதாகிவிடும் போலிருக்கிறது; அதனால் எதற்காக ஆரம்பித்து அல்லல்பட வேண்டும் என விரக்தியுடன் கேட்டதற்கு அருண் அளித்த பதிலின் முதற்பகுதியைப் பார்த்தோம். அதில் அவர் VCக்கள் திரட்டிய பணம் நிறைய டாட்-காம் உச்சத்தில் முதலீடு செய்யப்பட்டு விரயமாகிவிட்டதால் திரட்டிய பணத்தைத் திருப்பித்தரவே மீதியிருக்கும் பணத்தை மிகவும் பெருக்கும் நிர்ப்பந்தத்தால் அவர்கள் கடுமையான நிபந்தனை விதிக்கிறார்கள்; மேலும், டாட்-காம் உச்சிக்குச் சில வருடங்களுக்கு முன்னால் நிதி திரட்டுவது கடினமாகத்தான் இருந்தது என்று விளக்கினார். அதையும் யோசித்துப் பார்ப்பதாக ஒப்புக் கொண்ட சுந்தர், இப்படிப்பட்ட நிலவரத்தில் நிறுவனம் எதற்காக ஆரம்பிக்க வேண்டும் என்று கேட்டார்.
அருண் உண்மையான தொழில்முனைவோர் (entreprenuer) ஒருவர் பணப் பலனுக்காக மட்டும் நிறுவனத்தை ஆரம்பிப்பதில்லை; தன் யோசனைய மையமாக வைத்து ஒரு நிறுவனத்தை வளர்த்து, தன் கையாலேயே ஒரு அழகிய சிலையை வடித்த சிற்பி பெறுவதைப் போன்ற திருப்தியை அடைவதற்காகச் செய்கிறார் என்று விளக்கினார். அதைத்தான் தானும் செய்வதாக ஒப்புக்கொண்ட சுந்தர், ஆனால் அப்படி வளர்ப்பதற்காக நிறுவனத்தை VCக்களிடம் ஒப்படைத்து விடக்கூடிய நிபந்தனைகளுடன் நிதி திரட்டவேண்டுமா என்று வினவினார். அதற்கு அருண் மேற்கொண்டு அளித்த விளக்கத்தை இப்போது பார்ப்போம்.
தான் துவங்கிய நிறுவனத்துக்குப் பணத்தை வார்த்து வளர்க்க வேண்டிய கட்டம் வந்து விட்டது என்று உணர்ந்தாலும், VCக்கள் விதிக்கும் கடுமையான நிபந்தனைகளைக் கண்டு, அவற்றால் நிறுவனத்தையே இழக்கக் கூடிய அபாயகரமான நிலைக்கு ஏன் போக வேண்டும் என விரக்தியுடன் வழிகேட்டு வந்த சுந்தருக்கு என்ன சொல்வது என்று அருண் சற்று நேரம் தடுமாறியே போனார். சிறிது நேரம் யோசித்த அவர், தனக்குத் தோன்றிய விளக்கத்தைக் கூறத் துவங்கினார்.
"சுந்தர், உங்க தயக்கம் எனக்கும் நல்லாவே புரியுது. ஆனா, உங்க நிறுவனம் மேல வளரணும்னா பணங்கற உரம் போட்டுத்தானே ஆகணும். அதுக்கு ரெண்டு வழியில ஒண்ணு நீங்க தேர்ந்தெடுத்துத்தான் தீரணும்."
சுந்தருக்கு ஆவல் பொங்கியது! "ரெண்டு வழியா! ஒரு வழிதான் இருக்கறதா நெனச்சு நான் தவிச்சுக்கிட்டிருக்கேன். என்ன சொல்லுங்க."
அருண் சிரித்தார். "நான் சொல்றதக் கேட்டப்புறம், அந்த ஒரு வழியே தேவலாம்னு நீங்க நினைக்கலாம். ஒருவழி நீங்க ஏற்கனவே கேட்டதுதான். இந்தக் காலத்துல பணம் போடறேன்னு VCக்கள் ஒத்துக்கிட்டு வரதே ரொம்ப அபூர்வம். அதுக்கு உங்க நிறுவனம் லாயக்குன்னா அது ஒரு சாதனைதான். அவங்க நிபந்தனகளை ஒத்துகிட்டு மேல நடக்கறது ஒரு வழி ..."
சுந்தர் 'உச்' கொட்டி அவசரமாகத் தூண்டினார். "அதுதான் தெரியுமே அருண். அந்த இன்னொரு வழி என்ன, சீக்கிரம் சொல்லுங்க. அது தெரிஞ்சுக்காம எனக்குத் தலையே வெடிச்சுடும் போலிருக்கு."
சுந்தரை இன்னும் காக்கவைத்து அவஸ்தைப்பட வைக்க விரும்பாமல், அருண் உடனே அதை விளக்கினார். "இன்னொரு வழி, இவ்வளவு நாள் செஞ்சுக்கிட்டிருந்தா மாதிரியே இன்னும் தொடர்ந்து நீங்களே பணத்தை எப்படியாவது சம்பாதிச்சு, குருவி மாதிரி கொஞ்சம் கொஞ் சமா சேத்துப் போட்டு நிதானமா நிறுவனத்தை வளர்க்கறது. உதாரணமா நிறைய நிறுவனங்கள் சேவைத்தொழில் செஞ்சு சம்பாதிச்ச பணத்துல வளர்ந்திருக்கு. நிறுவனம் ஒரு நல்லநிலைக்கு வந்து, பெரிய வர்த்தக வாய்ப்புடன், பெயருள்ள பல வாடிக்கையாளர்களோடு, இன்னும் முக்கி யமா சிறிய அளவில பண தேவையில்லாம தானே ஓடக் கூடிய மாதிரி வந்துடுச்சுன்னா, அதை இன்னும் பெரிசா வளர்க்க VCக்கள் நான், நீன்னு போட்டி போட்டுகிட்டு ஓடி வருவாங்க. அந்த மாதிரி வாய்ப்புக்களுக்காக அவங்க தீவிரமாத் தேடிக்கிட்டிருக்காங்க. அவங்களுடைய பண அபாயம் குறைஞ்சுட்டா நிபந்தனைகளைத் தளர்த்த நிறுவன அதிபருக்கு நிறைய பலம் இருக்கும். அந்த மாதிரி பொறுத்திருந்து நிதானமா வளர்க்கறதுல இன்னொரு பலன் என்னன்னா, இப்ப இருக்கற விஷமான சூழ்நிலை மாறி ஒரு அனுகூலமான சூழ்நிலையா மாறறத்துக்கும் வாய்ப்பிருக்கும். அதுவும் நிபந்தனைகளைத் தளரவைக்கலாம்."
சுந்தர் மனம் தளர்ந்தார். "அதைத்தானே இப்ப செஞ்சுகிட்டிருக்கேன்! அப்படி மெதுவா வளர முடியும், ஆனா அப்படி செஞ்சா வாய்ப்புத் தவறிப்போயிடக் கூடுமேன்னுதான் தவிச்சுக்கிட்டிருக்கேன். இப்போதைக்கு எங்க பொருளுக்குத் தேவையும் இருக்கு, எங்க தொழில் நுட்பத்துக்கும் பலமிருக்கு. கொஞ்சநாள் போச்சுன்னா இன்னும் நிறைய பேர் அதேமாதிரிப் பொருளோட வந்துடுவாங்க. அவங்க பொருள் எங்களுடையது அளவு நல்லதில்லைன்னாலும் வாடிக்கையாளர் குழப்பத்தாலேயே நாங்க வாடிடுவோமே?"
அருண் தலையாட்டி ஆமோதித்தார். "அது என்னவோ சரிதான். ஆரம்பநிலை நிறுவனங் களுக்குப் பொருளை விற்பனைக்குக் கொண்டு வரக்கூடிய நேரம்தான் மிகவும் முக்கியம். சாதாரணமா தொழில்நுட்ப அனுகூலம் கொஞ்சநாளில கரைஞ்சிடும், ஒத்துக்கறேன். நீங்க அதை உணர்ந்திருக்கறதுனால, இப்ப நிதி திரட்டறதுதான் ஒரேவழின்னு எனக்குப் படுது ..."
சுந்தரின் முகம் மீண்டும் வாடிவிட்டதைப் பார்த்து ஒரு கணம் நிறுத்திய அருண் மேலும் தொடர்ந்தார். "ஆனா சுந்தர், நீங்க அப்படி முடிவு செஞ்சு திரட்டினீங்கன்னா அதனோட விளைவுகள் உங்களுக்குச் சாதகமா இருக்காதுன்னு நினைக்கக்கூடாது. நாம ஏற்கனவே பேசினபடி, உங்க யோசனை உயிர் பெற்று நடமாடிய திருப்தியே உங்களுக்குப் பெரிய பலனா இருக்கும். ஆனா இன்னும் ஒரு முக்கியமான விஷயம் இருக்கு."
சுந்தர் சுதாரித்துக் கொண்டார். "இன்னும் முக்கியமா? அது என்ன?"
அருண் சிரித்தார். "ஆங், அப்படி வாங்க வழிக்கு. ரொம்பப் பேர் பணப் பலனைப்பத்தித் சரியாப் புரிஞ்சுக்கறதில்லை. ஒரு ஆரம்பநிலை நிறுவனம் அடையற வெற்றியில தங்களுக்கு எவ்வளவு பெரிய பங்கு வச்சுக்க முடியுமோ அதுதான் முக்கியம்னு நினைச்சுடறாங்க. அதைவிடத் தவறு இருக்கமுடியாது. அப்படி நினைச்சுச் செயல்பட்டா பெரும்பாலும் நிறுவனம் வெற்றிபெற்றாலும் சிறு அளவா முடியும். அவங்க பங்கும் சிறு தொகையா முடியும். நிறைய பேர் சொல்வாங்க பூஜ்யத்துல 100% ஆனாலும் அது பூஜ்யந்தான்னு. அந்த அளவுக்கு மோச மாகாட்டாலும் பிரமாதமா வளர்ற வாய்ப்பு குறைஞ்சுடும். சரித்திர ரீதியில பார்த்தா, பெரும் பணப் பலனை அடைஞ்சவங்க, தங்கள் பங்கு குறைஞ்சாலும் பரவாயில்லை, நிறுவனம் பெருத்த வெற்றியடையணும்னு பலரையும் நிறுவன மூலதனத்துக்கு இழுத்து அவங்களையும் அந்த வெற்றிக்காகப் பாடுபட வச்சவங்கதான். பெரும்பாலான மில்லியனர்கள் அந்த வழியில தான் உருவாக்கப்பட்டிருக்காங்க. அது மட்டுமில்லை, நிறுவனத்தில உங்களோட பாடுபடற மத்தவங்களுக்கும் பெரிய பலன் கிடைக்க அது தான் நல்லவழியா இருக்கும். அது மட்டுமில்லை ..."
சுந்தர் வாயைப் பிளந்தார். "அதுலயே இன்னும் விஷயம் இருக்கா? உம்! சொல்லுங்க."
அருண் முறுவலித்துக் கொண்டு, "ஆமாம், இது ஆரம்ப நிலை நிறுவன மூலதனத்தைப் பத்தி முக்கியமா புரிஞ்சுக்க வேண்டிய கொஞ்சம் சிக்கலான கோணம். அதுனால அதுல பல விஷயங்கள் அடங்கியிருக்கு. இன்னொரு விஷயம் என்னன்னா, பணம் போடற மூலதனதாரர்களும் அதே 'சிறிய பங்கு - பெரிய பங்கு' விதியை மதிச்சாகணுங்கறதுதான்! அவங்க அளவுக்கு மீறி பேராசையோட பங்கு பறிச்சுகிட்டா, நிறுவனம் ஆரம்பிச்சவங்களும் வேலை செய்யற மத்தவங்களுக்கும் ஊக்கம் இழந்து விலகிடு வாங்க. நிறுவனமும் அழிஞ்சுடும். அதுனால மூலதனக்காரங்களும் நிறுவனத்தை ஆரம்பிச்சவங்களுக்கும், தொடர்ந்து நடத்தறவங் களும், கொஞ்சம் விட்டுக் கொடுத்தே ஆகணும்."
சுந்தரின் முகம் மீண்டும் மலர ஆரம்பித்தது.
அருண் தொடர்ந்தார். "மேலும், இந்த நிறுவனத்தை நீங்க வெற்றிகரமா நடத்திக் காட்டிட்டீங்கன்னா உங்க மதிப்பு வானளவுக்கு உயர்ந்துடும். அதுக்கப்புறம், மூலதனக் காரங்களும் உங்களை நம்புவாங்க, அவங்க நிபந்தனைகளும் ரொம்பவே தளர ஆரம்பிச்சுடும்."
அதைக் கேட்ட சுந்தரின் முகத்தில் ஒரு பெரிய புன்னகை விரிந்தது. புரிந்தது என்று தலையாட்டினார்.
அருண் ஒரு இறுதிக் குறிப்பாக, "சுந்தர், எல்லாத்துக்கும் மேலா, நீங்க ஏன் இந்த முயற்சி எடுத்துக்கறீங்கங்கறதை நல்லா மனசில வச்சுகிட்டு தினமும் பாடுபட்டா எல்லாம் நல்லதா முடியும். வேற எதைப் பத்தியும் கவலைப்படாம சாதனை செய்யுங்க. உங்கள் வெற்றிக்கு என் நல்வாழ்த்துக்கள்!" என்றார்.
சுந்தர் மிக்க புத்துணர்ச்சியுடன் அருணின் கையை பலமாகக் இறுக்கிப் பிடித்துக் குலுக்கினார். "தளர்ந்து போய் விரக்தியா வந்தேன், அருண்! உங்க வார்த்தைகள் எனக்கு ஒரு புது நோக்கத்தையும், பெரிய மன பலத் தையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கு. அடுத்த முறை உங்களைச் சந்திக்கையிலே நீங்க வாழ்த்தியபடியே ஒரு சாதனையாளனா வந்து பார்க்கிறேன்." என்று கூறிவிட்டு நடையில் ஒரு குதிப்புடன் கிளம்பினார்.
ஒரு நற்காரியத்தை முடித்த திருப்தியுடன் அருணும் பாஷ் பேகல் கடைக்கு நடந்தார்!
(தொடரும்)
கதிரவன் எழில்மன்னன் |