இந்தியப் பங்குமார்க்கட்டில் சுறுசுறுப்பு - ஏராளமான வெளிநாட்டு முதலீடு
உலக முழுவதிலுமிருந்து சுமார் 25 வெளிநாட்டு நிதிமுதலீட்டு நிறுவனங்கள் (Foreign Institional Investors) சென்ற ஆறு மாதங்களில் இந்தியப் பங்குச் சந்தையில் புதிதாக நுழைந்துள்ளன. அமெரிக்காவிலிருந்து வந்தவை மட்டும் பதினொன்று.

ஜூன் மாதத்தில் மட்டும் 554 மில்லியன் டாலர்களை பங்குச் சந்தையில் கொட்டிய இந்த நிறுவனங்கள், ஜூலை மாதம் 14 தேதிக்குள் இன்னும் 321 மில்லியனைப் பொழிந்தன. 26 மாதத்தில் மிக உயர்ந்த நிலையான 3721 புள்ளிகளில் அன்று சென்செக்ஸ் முடிந்தது. இன்னும் பங்குகளின் விலைகள் அவற்றின் தகுதிக்குக் கீழேதான் இருக்கின்றன என்று வெளிநாட்டு நிறுவனங்கள் சொல்வதால், மேலும் டாலர் இவற்றைத் துரத்த வாய்ப்பு இருக்கிறது.

பங்குச் சந்தை சுறுசுறுப்பானதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம். வங்கியில் போடும் பணம் அதிக வருமானம் தராதது, நல்ல பருவமழை பெய்யும் என்னும் எதிர்பார்ப்பு, GDP (Gross Domestic Product) உயர்வாக இருக்கும் என்ற கணிப்பு, பொதுவாகவே நல்ல பொருளாதார மேம்பாடு, பாகிஸ்தானுடனான உறவில் சற்றே இளக்கம் - என்று பல. அதுவும் தவிர, மாருதி உத்யோக் லிமிடெட் (கார் தயாரிப்பாளர்கள்) பங்குகளை அரசாங்கம் ரூ. 125க்கு விற்க, முதல் நாள் விற்பனையிலேயே ரூ. 157ல் தொடங்கியதும் உற்சாகத்தைக் கூட்டியது.

வங்கிகள், உருக்காலைகள், சிமெண்ட், வாகனங்கள், மருந்துக் கம்பெனிகள் ஆகியவற்றின் பங்குகள் சூடாகக் கைமாறியதுடன் ஏராளமான லாபத்தைக் கொடுத்தன. மென்பொருள் நிறுவனங்கள் அவ்வளவு கவர்ச்சியாக இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தரமான பங்குகளைத் தேர்ந்தெடுத்தால் வருட இறுதிக்குள் 25 சதவீத லாபம் நிச்சயம் என்று பேச்சு.பங்குகளை அலசிப் பார்த்து வாங்கி விற்க முடியாதவர்கள் பணத்தைக் கொண்டுபோய் mutual fundகளில் போடுவதால் திடீரென்று அவற்றிற்கும் ஒரு மவுசு. sectoral funds என்று சொல்லப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் நன்றாக இருக்கின்றன. பணத்தை சும்மா வைத்திருந்தால் யாருக்கும் லாபமில்லை!

© TamilOnline.com