NRE வட்டிவிகிதம் குறைப்பு
நெடுநாட்களாகவே இந்திய வங்கிகளில் NRIக்கள் செய்யும் முதலீடுகளுக்கு அதிக வட்டி கொடுக்கப்பட்டு வந்தது.
அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் இது துணைசெய்தது. இதில் ஒரு பிரச்சினை என்னவென்றால் வெளிநாட்டில் குறைந்த வட்டிக்குப் பணம் வாங்கி அதை இந்தியாவில் முதலீடு செய்தால் சற்றும் சிரமப்படாமல் உபரி லாபம் ஈட்டமுடிந்தது. இதை சில NRIக்களும் அவர்கள் பெயரால் சில நிறுவனங்களும் செய்து வந்தன. மொத்தத்தில் இந்தியாவுக்கு அந்நியச் செலாவணியில் இழப்புத்தான் ஏற்பட்டது.
இதை உணர்ந்த ரிசர்வ் வங்கி இப்பொழுது NRE (Non Resident External) வங்கிக் கணக்குகளுக்குக் கொடுக்கப்படும் வட்டிக்கு உச்சவரம்பு விதித்துவிட்டது. இன்றைய நிலவரத்தில் ஒருவருட டெபாசிட்டுக்கு 3.8% மட்டுமே கிடைக்கும். பழைய 5.5% முதல் 6% வரை கிடைத்த காலம் மலையேறிவிட்டது. இதையறிந்த சில NRIக்கள் இந்தியப் பங்குமார்க்கட்டில் இறங்கிவிட்டதாக நம்பகமான தகவல்.
நல்ல வட்டியைக் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் Resurgent India Bonds வட்டியோடு திரும்பப் பெறும் காலம் வந்துவிட்டதே. இந்த டாலர்ச் செல்வத்தைத் திரட்டப் பல இந்திய வங்கிகளும் நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு புதுத்திட்டங்கள் தீட்டியிருக்கின்றன. கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் மறுமுதலீடு செய்யலாம்.
சு.கணபதி |