உண்மைச்சம்பவம் - நட்பு
அப்போது நான் தொலைபேசித்துறையில் பணிசெய்து கொண்டிருந்தேன். அதே அலுவலகத்தில் பணிசெய்த குமரனும் சேகரும் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) நண்பர்கள். வேறு வேறு ஊரைச் சேர்ந்தவர்கள். ஒரே அறையில் தங்கி இருந்தார்கள். இருவருக்குமே திருமணம் ஆகியிருந்தாலும் பொருளாதாரக் காரணங்களுக்காகக் குடும்பத்தைச் சென்னைக்குக் கூட்டிவரவில்லை. ஒரே அறை, ஒரே ஹோட்டலில் சாப்பாடு, சேர்ந்தே சினிமாவுக்குச் செல்வது என்று இருந்த இவர்களை நாங்கள் 'இரட்டையர்' என்று அழைப்போம். விடுப்பில் ஊருக்குச் சென்று வந்த சேகர் மிகுந்த மனவருத்தத்துடன் காணப்பட்டான். அவனுடைய மனைவிக்குப் பிரசவ காலம். அதோடு ஊரில் அவனுடைய தாயா ருக்கும் உடல் நலமில்லை. வைத்தியச் செலவுகளுக்குப் பணம் தேவைப்பட்டது. ஒரே குழப்பம். கடைசியாக எல்லோரும் சேகரைச் சேமிப்புச் சங்கத்திலிருந்து பத்தாயிரம் ரூபாய் (இன்றைய மதிப்பு ஒரு லட்சத்துக்கு மேல்) கடன் வாங்கும்படி அறிவுறுத்தினார்கள். குமார் கொடுத்த உத்தரவாதத்தின் பேரின் கடன் வழங்கப்பட்டது. சேகர் ஊருக்குப் போனான். அம்மாவின் வைத்தியமும், மனைவியின் பிள்ளைப் பேறும் நல்லபடி முடிந்தது. ஆண்குழந்தை. நண்பர்கள் இருவரும் ஒரே வீடுபார்த்துச் சென்னைக்குக் குடும்பத்தைக் கூட்டி வரத் தீர்மானித்தார்கள். இதைப்பற்றிப் பேசிவரச் சேகர் மீண்டும் சேலத்துக்குப் போனான்.

நாட்கள் கடந்தன. விடுப்பு முடிந்தது. சேகர் திரும்பி வரவில்லை. விசாரித்ததில் அவனுக்கு உடல்நலம் சரியில்லை என்று தெரியவந்தது. குமார் இரண்டு முறை போய்ப் பார்த்துவிட்டு வந்தான். எந்த முன்னேற்றமும் இல்லை. குமார் மிகவும் சிரமப்பட்டு சேகரைச் சென்னைக்கு அழைத்து வந்து விஜயா மருத்துவமனையில் சேர்த்தான். அதுவும் பலனளிக்காமல் மீண்டும் சேலத்துக்கே அழைத்துப் போனான். அதன் பிறகு சேகர் மீண்டும் சென்னைக்குத் திரும்பவே இல்லை. அவனது மறைவு எங்களுக்கெல்லாம் மிகுந்த வேதனையைத் தந்தது. குமாரை எங்களால் சமதானப்படுத்தவே முடியவில்லை.

காரியங்கள் முடிந்து சேகரின் மனைவி உரிய தொகைகளை வாங்க எங்கள் அலுவலகத்திற்கு வந்தார். "உங்கள் கணவர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அதைச் செலுத்துகிறீர்களா?" என்று அலுவலகத்தில் கேட்டனர். "என் கணவர் கடன் எதுவும் வாங்கியதாகச் சொல்லவில்லை. அதற்கு நான் பொறுப்பில்லை" என்று கூறிவிட்டார். இந்நிலையில் உத்திரவாதக் கையெழுத்துப் போட்டவர்தான் கடனை அடைக்கவேண்டும். அதன்படி குமாரின் மேல் பாரம் விழுந்தது. எங்களுக்கு மிகுந்த அதிர்ச்சி. "நாங்கள் சென்று சேகரின் மனைவியிடம் விவரத்தைக் கூறுகிறோம்" என்று குமாரிடம் சொன்னோம்.

அதற்கு அவனுடைய பதில்: "சேகர் என் நண்பன். அவனுக்குக் கஷ்டம் வந்தபோது நான் உதவினேன். இதற்கும் அவன் மனைவிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது." எங்களுக்கு நா எழவில்லை. அவன் தொடர்ந்தான்: "இந்தப் பிரச்சினை எனக்கும் சேகருக்கும் இடையிலானது. இதில் எல்லோரும் தலையிட்டு எங்கள் நட்பைக் கொச்சைப் படுத்தாதீர்கள்."

உடுக்கை இழந்தவன் கைபோலே ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

என்று வள்ளுவர் சொன்னது இதைத்தானோ?

டி.எம். ராஜகோபாலன்

© TamilOnline.com