தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் மருத்துவ செய்திகளில் சிறு வயது பருமன் மிக முக்கியமானது.
சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி ஐந்து சிறுவர் சிறுமிகளில் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக தெரிகிறது. அதி வேகமாக பரவி வரும் இந்த உடல் பருமன், வயது ஆக ஆக கூடுவதால், பின் விளைவுகள் அதிகமாகின்றன. உடல் பருமன் அதிகமாவ தால், சின்ன வயதிலேயே நீரிழிவு நோயும், இரத்த அழுத்தமும் எட்டிப் பார்க்கின்றன. வயது வந்தவர்களின் நோய்களாக கருதப்பட்டு வந்த கொழுப்பு நோயும், மூட்டு வலியும் சின்னஞ்சிறுமிகளையும், சிறுவர்களையும், குறிப்பாக பதின்ம வயதினரையும் தாக்கு கின்றன. கொழுக் மொழுக் என்று இருப்பது தான் குழந்தைக்கு அழகு என்ற எண்ணத்தை நாம் மாற்ற வேண்டும். நோய் வாய்ப்படாமல் இருப்பதே அழகு என்ற எண்ணத்தை வளர்க்க வேண்டும்.
யாரை தாக்கும்?
சிறு வயது பருமன் 6-11 வயதினரையும், பதின்ம வயது பருமன் 12-19 வயதினரையும் தாக்க வல்லது. 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை கவனத்துடன் வளர்ப்பதினால் இந்த பருமன் வருவதை தவிர்க்கலாம்.
பருமன் ஆவதற்கான காரணங்கள்
1. விளையாட்டு குறைதல்
2. அதிக நேரம் தொலைகாட்சி பார்த்தல், வீடியோ விளையாட்டுகள் விளையாடுதல்
3. பசிக்காத பொழுது உண்ணுதல்
4. அதிக கலோரி உள்ள உணவு உண்ணுதல்
5. அடிக்கடி வெளியே உண்ணுதல் (துரித உணவு வகை)
6. குடும்பத்துடன் சேர்ந்து செய்யும் வேலைகள் குறைதல்
7. வெற்று உணவாகிய சோடா வகைகளை அருந்துதல்
8. மரபணு மூலம் அதிக எடையாய் இருத்தல்
மேற்கூறிய காரணங்களில் முதலில் சொல்லப் பட்ட ஏழு காரணங்களும் பழக்க வழக்கங் களினால் மாறக்கூடியவை. முயன்றால் தவிர்க்க முடியக்கூடியவை.
எது பருமன்?
பலரும் பல விதமாய் எடை பற்றி எடை போடுவதுண்டு. அமெரிக்க அதிக எடை சங்கத்தின் அறிவிப்பு படி BMI என்று சொல்லப்படும் எண்ணிக்கை எடை கணிக்க உதவுகிறது. வயது வந்தவருக்கு கணிப்பது போலவே சிறுவர்களுக்கும் BMI கணக்கெடுக் கப்பட வேண்டும். அவரவர் உயரம் மற்றும் எடை வைத்து BMI கணக்கிடப்படும். சிறுவர்களுக்கு இந்த BMI அவரவர் வயதுக் கேற்ப வளர்ச்சி அட்டவணையில் குறிக்கப் படும். ஆறு வயதுக்கு மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கும், பதின்ம வயதினர்க்கும் BMI 85 முதல் 95 percentile இருக்குமேயானால் எடை அதிகம் (overweight) என்று சொல்லப்படுவர். 95 percentile க்கு மேல் இருப்பாரேயானால் பருமன் (Obese) என்று சொல்லப்படுவர். 2-6 வயது உடைய சிறுவர்களுக்கு வயது அதிகரித்தால் BMI 85-95 percentile இருந்தால், எடை அதிகம் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக மாகின்றன. BMI 95 percentile இருந்தால் பருமன் ஆவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாவதாகத் தெரிகிறது.
ஆகவே 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தை களை எடை பற்றிய கருத்துடன் வளர்ப்பது நல்லது. அதிக எடை உள்ளவர்கள் எடையை அதே எண்ணிக்கையில் வைத்து உயரம் அதிகரிக்க அதிகரிக்க BMI குறையும். ஆனால் பருமனாக உள்ள சிறுவர்கள் எடை குறைத்தால் ஒழிய BMI குறையாது.
பருமன் குறைப்பதற்கான வழிகள்
உணவு பழக்கம்
1. அதிக ஊட்ட சத்து உள்ள காய்கறிகள் பழங்களை உண்ண செய்ய வேண்டும்.
2. கூடுமானவரை துரித உணவு வகை களைத் தவிர்க்க வேண்டும்
3. வெற்று கலோரி திரவங்களை (soda or juices) தவிர்க்க வேண்டும்
4. அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.
5. பசித்தால் மட்டுமே உண்ண வேண்டும்.
வேலை செய்தல்
1. ஓடியாடும் விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும்
2. தொலைகாட்சி பார்ப்பதை குறைக்க வேண்டும்.
3. வீடியோ விளையாட்டுகளை குறைக்க வேண்டும்.
4. நடந்து செல்லும் பழக்கம் அதிகரிக்க வேண்டும்.
5. தேவைப்பட்டால் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
பெற்றோர் உதவி
இந்த முயற்சியில் பெற்றோரின் பங்கு பெரிதாகும். முதலில் இது தவிர்க்க பட வேண்டிய நோய் என்பதை பெற்றோர் உணர வேண்டும். வயதாக ஆக தானாக சரியாகிப் போய் விடும் என்ற மூட நம்பிக்கையை கைவிட வேண்டும். சிறு வயதில் பருமனாக இருந்தவர்கள் முயற்சியின்றி தானாக எடை மெலிந்தவரானதாக சரித்திரம் இல்லை. ஆனால் முயற்சி செய்தால் கண்டிப்பாக எடை குறைவதுண்டு. கீழ் காணும் வழிகள் முயற்சிக்கு உதவும்.
1. சின்ன குழந்தைகளுக்கு உணவுப் பண்டத்தை பரிசுப் பொருளாக அறிவிப்பதை கைவிடுங்கள்.
2. குழந்தைகள் தவறு செய்தால் உணவு தரமால் தண்டிப்பதும் நல்லதல்ல.
3. கூடுமானவரை குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து சாப்பிடும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
4. எல்லோருக்கும் ஒரே மாதிரியான தரமான சத்துள்ள உணவை தயார் செய்யுங்கள்.
5. குழந்தைகளுக்கு நல்ல உணவு வகைகள் இரண்டு சொல்லி அவர்களை தேர்வு செய்ய சொல்லுங்கள். ஆப்பிளா அல்லது ஆரஞ்சா என்பது நல்ல தேர்வு. ஆப்பிளா அல்லது இனிப்பு பிஸ்கட்-ஆ (Cookie) என்று தேர்வு செய்யச் சொல்லாதீர்கள்.
6. இதை ஒரு விளையாட்டு போல் செய்தால் சிறுவர்களும் ஈடுபாட்டுடன் செயல்படுவார்கள்.
7. குடும்பத்தினராக சேர்ந்து நடப்பது, மலை ஏறுவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுங்கள்.
8. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருங்கள்.
பள்ளிகளின் பங்கு
இந்த பருமன் நோய் வரமால் தவிர்க்கவும், வந்தால் குறைக்கவும் பள்ளிகளின் பங்கு அதிகம். அதனாலேயே சமீப காலமாக பள்ளிகளில் வழங்கப்படும் உணவுகளிலும், விளையாட்டு பாட திட்டத்திலும் கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதையும் பெற்றோர்கள் மேற்பார்வை செய்வது நல்லது.
மேலும் விவரங்களுக்கு www.obesity.org/subs/childhood/ என்ற வலைதளத்தை நாடவும்.
மரு. வரலட்சுமி நிரஞ்சன் |