மீட்பு
சிறப்பு ரயில் மதியம் இரண்டு மணிக்கு அமிர்தசரஸிலிருந்து புறப்பட்டு எட்டு மணிநேரம் கழித்து லாகூர், முகல்புரா வந்து சேர்ந்தது. வழியில் பலர் கொல்லப்பட்டிருந்தார்கள். இன்னும் அதிகம்பேர் காயமடைந்திருந்தார்கள். ஏராளமான பேர் காணாமல் போயிருந்தார்கள்.

மறுநாள் காலை பத்து மணி போல சிராஜுதீனுக்கு நினைவு திரும்பியது. சுற்றிலும் பெண்களும் குழந்தைகளும் ஆண்களும் ஓலமிட்டுக் கொண்டிருக்க வெற்றுத் தரையில் கிடந்தான். எதுவும் புரியவில்லை.

தூசு படர்ந்திருந்த வானத்தை வெறித்தபடி அப்படியே கிடந்தான். அங்கிருந்த கூச்சலையோ, குழப்பத்தையோ கவனித்ததாகத் தெரியவில்லை. புதிதாகப் பார்க்கிற ஒருவனுக்கு எப்போதும் ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறவனைப் போலத் தெரிந்திருப்பான். ஆழங்காண முடியாத குழிக்குள், நடுவில் தொங்கிக்கொண்டு இருப்பவனைப் போல அதிர்ச்சியில் அசையாமல் கிடந்தான்.

சற்றுக் கழித்து அவன் கண்கள் அசைந்து எதிர்பாராதவொரு நொடியில் சூரியனைப் பிடித்தன. அந்த அதிர்ச்சி அவனைத் திரும்பவும் இந்த உலகத்திற்குக் கொண்டுவந்தது. மூளைக்குள் காட்சிகள் வரிசையாக ஓடின. தாக்குதல்... நெருப்பு... தப்பிப்பிழைத்தது... ரயில்வே ஸ்டேஷன்... இரவு... சஹீனா. சடாரென்று எழுந்து அந்த அகதி முகாமுக்குள் நெருக்கியடித்துக் கிடந்த கூட்டத்திற்குள் தேட ஆரம்பித்தான்.

''சஹீனா...சஹீனா...'' என்று மகளுடைய பெயரைக் கத்திக் கொண்டே மணிக்கணக்கில் தேடிக் கொண்டிருந்தான். ஆனால், அவள் எங்கும் அகப்படவில்லை.

தொலைந்து போன மகன், மகள், மனைவி, தாய் என்று தேடிக்கொண்டு இருந்தவர்களின் கூச்சல்களில் அங்கு மோசமான குழப்பம் நிலவியது. கடைசியில் சிராஜுதீன் முயற்சியைக் கைவிட்டான். கூட்டத்திலிருந்து சற்றுத் தள்ளிப் போய் உட்கார்ந்து தெளிவாக யோசிக்க முயன்றான். சஹீனாவையும் அவள் அம்மாவையும் எந்த இடத்தில் பிரிந்தான்? மெல்ல அது அவன் ஞாபகத்தில் வந்து விழுந்தது - வயிறு கிழிந்து பிளந்து கிடந்த அவன் மனைவியின் சடலம். எவ்வளவு முயன்றாலும் நினைவிலிருந்து விலக்கமுடியாத காட்சி.

சஹீனாவின் தாய் செத்துவிட்டாள் அது மட்டும் நிச்சயம். அவன் கண் முன்னாலேயேதான். அவள் குரல் இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறது: "என்ன இங்கயே விட்டுடுங்க. பொண்ணக் கூட்டிட்டுப் போயிடுங்க."

இரண்டு பேரும் எழுந்து ஓட ஆரம்பித்திருந்தார்கள். சஹீனாவின் துப்பட்டா நழுவி விழுந்தது. அவன் நின்று அதை எடுக்கத் திரும்பினான். "அப்பா, போகிறது விடுங்கள்" அவள் கத்தினாள்.

அவனுடைய சட்டைப் பையில் ஏதோ சுருட்டிக் கிடந்ததை உணர முடிந்தது. நீளமான துணி. ஆமாம். அது என்னவென்று கண்டு கொண்டுவிட்டான். சஹீனாவின் துப்பட்டா. ஆனால், அவள் எங்கே?

மற்ற விவரங்கள் எதுவும் ஞாபகத்தில் இல்லை. ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் அவளைப் பத்திரமாகக் கொண்டு வந்து விட்டானா? பெட்டிக்குள் அவளும் ஏறினாளா? கலவரக்காரர்கள் ரயிலை நிறுத்தியபோது அவளைத் தூக்கிப் போய்விட்டார்களா?

வெறும் கேள்விகள் மட்டும். பதில்கள் எதுவும் இல்லை. கதறி அழ வேண்டும்போல இருந்தது. ஆனால், கண்ணீர் வர மறுத்தது. யாருடைய உதவியாவது தேவைப்பட்டது.

சில நாட்கள் கழித்து, ஒன்று கிடைத்தது. அவர்கள் இளைஞர்கள். எட்டுப்பேர். கையில் துப்பாக்கிகள். ஒரு ட்ரக்கும் இருந்தது. எல்லைக்கு அப்பால் தவறிப்போன பெண்களையும் குழந்தைகளையும் மீட்டுவரப் போவதாகச் சொன்னார்கள்.

தன் மகளின் அடையாளங்களை அவர்களிடம் விவரித்தான். "நல்ல சிவப்பாக, அழகாக இருப்பாள். இல்லை. என்னைப்போல இருக்கமாட்டாள். அவள் அம்மாவைப்போல ஜாடை. பதினேழு வயசிருக்கும். பெரிய கண்கள், கருகருவென்று முடி. இடது கன்னத்தில் ஒரு மச்சம். என் மகளைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். கடவுளின் ஆசி உங்களுக்குக் கிடைக்கட்டும்."

அந்த இளைஞர்கள் சிராஜுதீனிடம், "உங்கள் மகள் உயிரோடு இருந்தால் நிச்சயம் கண்டுபிடித்துக் கொண்டு வருவோம்" என்றார்கள்.

சொன்னது போல அவர்கள் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய உயிரைப் பணயம் வைத்து அமிர்தசரஸ¤க்குப் பயணித்து நிறையப் பெண்களையும் குழந்தைகளையும் முகாமிற்குத் திரும்பக் கொண்டு வந்தார்கள். ஆனால், அவர்களால் சஹீனாவை மட்டும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அடுத்த பயணத்தில் தெருவோரத்தில் ஒரு பெண்ணைக் கண்டார்கள். அவர்களைப் பார்த்ததுமே அவள் பயந்து ஓட ஆரம்பித்து விட்டாள். அவர்கள் ட்ரக்கை நிறுத்தி இறங்கி அவளைத் துரத்தினார்கள். ஒரு வழியாக ஒரு வயலில் அவளைப் பிடித்து விட்டார்கள். அவள் அழகாக இருந்தாள். இடது கன்னத்தில் ஒரு மச்சம் இருந்தது. அவர்களில் ஒருவன்: "பயப்படாதே, உன் பெயர் சஹீனாதானே?" அவள் முகம் வெளிறிப்போனது. ஆனால், அவர்கள் தாம் யார் என்று சொன்னதும் அவள் தான் சிராஜுதீனுடைய மகள் சஹீனா தான் என்பதை ஒப்புக் கொண்டாள்.

அந்த இளைஞர்கள் அவளை மிகுந்த பரிவோடு நடத்தினார்கள். சாப்பிட வைத்தார்கள். குடிக்கப் பால் கொடுத்தார்கள். ட்ரக்கில் ஏற்றிக் கொண்டார்கள். ஒருவன் அவள் போர்த்திக் கொள்ள தன்னுடைய தோற்சட்டையைக் கழற்றிக் கொடுத்தான். துப்பட்டா இல்லாமல் அவள் சங்கடத்தில் நெளிந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. கைகளால் மார்பகங்களை மறைத்தபடி இருந்தாள்.

இதற்குள் நாள்கள் பல கடந்துவிட்டிருந்தன. சிராஜுதீனுக்கு மகளைப் பற்றிய எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை. அவளைத் தேடி ஒவ்வொரு முகாமாக அலைந்து கொண்டிருந்தான். மகளைத் தேடிச்சென்ற அந்த இளைஞர்களின் முயற்சி வெற்றி பெற இரவுகளில் தொழுதான். அவர்களுடைய வார்த்தைகள் அவன் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன, "உங்கள் மகள் உயிரோடு இருந்தால் நிச்சயம் கண்டுபிடித்துக் கொண்டு வருவோம்."

ஒரு நாள் அவர்களை முகாமில் பார்த்து விட்டான். அவர்கள் ட்ரக்கை கிளப்பிப் போக இருந்தார்கள். அவர்களில் ஒருவனைப் பார்த்து "தம்பீ!" பின்னால் இரைந்தான், "என் மகளைக் கண்டுபிடித்து விட்டீர்களா?"

"கண்டுபிடிச்சுடுவோம்! கண்டுபிடிச்சுடுவோம்!" எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சொன்னார்கள்.

அந்தக் கிழவன் திரும்பவும் அவர்களுக்காகப் பிரார்த்தித்தான். அது அவனுக்குச் சற்று இதமாக இருந்தது.

அன்று மாலை முகாமில் திடீரென்று ஒரு பரபரப்பு. நான்கு பேர் சேர்ந்து ரயில் தண்டவாளத்திற்கு அருகில் மயங்கிக்கிடந்த ஒரு பெண்ணைத் தூக்கிச்செல்வதைப் பார்த்தான். அவர்கள் அவளை முகாம் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் பின்னாலேயே சென்றான்.

கொஞ்ச நேரம் ஆஸ்பத்திரிக்கு வெளியே தயங்கி நின்று கொண்டிருந்து விட்டு மெதுவாக உள்ளே போனான். ஒரு அறையில் ஒரு ஸ்ட்ரெச்சரில் யாரையோ கிடத்தியிருந்தது.

ஒரு விளக்கு எரிந்தது. இடது கன்னத்தில் மச்சம் இருந்த அழகான பெண். "சஹீனா!" சிராஜுதீன் அலறினான்.

விளக்கைப் போட்ட டாக்டர் சிராஜுதீனை முறைத்தார்.

"நான் அவளுடைய அப்பா" திக்கித் திணறிச் சொன்னான்.

டாக்டர் துவண்டு கிடந்த அந்த உடலைப் பார்த்தார். நாடித்துடிப்பைக் கவனித்தார்.

கிழவனைப் பார்த்து "அந்த ஜன்னலைத் திற" என்றார்.

ஸ்ட்ரெச்சரில் கிடந்த அந்த இளம்பெண் மெல்ல அசைந்தாள். இடுப்பில் இறுக்கிய சல்வாரின் நாடாவை அவளுடைய கைகள் துழாவித் தேடின. வலி வேதனையில் மெதுவாக, மிக மெதுவாக முடிச்சை அவிழ்த்தாள். உடுப்பைக் கீழே இறக்கிவிட்டுக் கால்களை அகட்டினாள்.

"உயிரோடு இருக்கிறாள். என் மகள் உயிரோடு இருக்கிறாள்." சிராஜுதீன் மகிழ்ச்சியில் கத்தினான்.

டாக்டர் வியர்த்து விக்கித்துப் போய் நின்று கொண்டிருந்தார்.

சதத் ஹசன் மாண்டோ
தமிழில்: வளர்மதி

******


சாதத் ஹசன் மாண்டோ

1940-களில் பம்பாய்த் திரையுலகத்தோடு ரத்தமும் சதையுமான உறவு கொண்டிருந்த பாகிஸ்தான் இலக்கியவாதி சதத் ஹசன் மாண்டோ. எந்தத் துணைக்கண்டத்தில் மதம், சாதி என்ற பிரிவினையில்லாமல் மக்கள் மக்களாக அங்கீகாரம் பெறவேண்டும் என்று கனவு கண்டாரோ, அந்தத் துணைக்கண்டமே துண்டானது.

பம்பாய்ப் படமுதலாளிகள் அவரைப் பாகிஸ்தானியர் என்று விரட்டினர். இத்தனைக்கும் நாற்பதுகளில் வெளிவந்த மிகச்சிறந்த பத்துப் படங்களின் குறிப்பிடத்தக்க சிருஷ்டிகர்த்தா அவர். பாகிஸ்தான் வாழ்க்கை அவரை விரக்தியின் விளிம்புக்குத் தள்ளியது.

காலத்தைத் தாண்டிய அவரது படைப்புகள் 'அசிங்கமானவை' என்று பாகிஸ்தான் அரசு தடை செய்தது. தமிழ்ப் படுத்தப்பட்டுள்ள 'மீட்பு' (The Return) அவற்றுள் ஒன்று. தனது 43வது வயதிலேயே அநியாயமாக உயிரிழந்தார். அவரது கதைகளை உருது மூலத்திலிருந்து காலித் ஹசன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.

© TamilOnline.com