பயத்தை உதறி தள்ளுங்கள்...
நான் எட்டு வருடங்களுக்கு முன்பு திருமணமாகி அமெரிக்கா வந்தேன். அதற்கு முன்பு என் கணவர் ஓர் அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு பையன் பிறந்த பிறகு விவாகரத்தும் செய்துவிட்டிருந்தார். எல்லா விவரமும் தெரிந்துதான் திருமணம் செய்து கொண்டேன்.

எனக்கு இரண்டு தடவை கருச்சிதைவு ஏற்பட்டது. குழந்தை இல்லை. வயது 38 ஆகிவிட்டது. இனி பிறக்குமோ இல்லையோ தெரியாது. இதற்கிடையில் தன்னுடைய மகனை இவர் மாதம் இரண்டு முறை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு வருவார். நானும் அந்தக் குழந்தையிடம் (பெயர்: மார்க்) ஆசையாகத்தான் இருப்பேன். அதில் பிரச்சனையில்லை எனக்கு.

இவர் விவாகரத்து செய்த அமெரிக்கப் பெண்மணி வேறு ஒருவருடன் வாழ்ந்து கொண்டிருந்து விட்டு, பிரிந்து, இப்போது மீண்டும் தனியாக இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். சமீபகாலமாகப் பிள்ளையைப் பார்க்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு, அவள் வீட்டில் நிறைய நேரம் தங்குகிறார். கேட்டால் மார்க்கின் பேரில் பழியைப் போடுகிறார்.

என்னை விட்டுவிட்டு மறுபடியும் அந்த அமெரிக்கப் பெண்ணுடன் சேர்ந்து விடுவாரோ என்று பயமாக இருக்கிறது. எங்கள் பந்தத்தை பலப்படுத்த குழந்தைகளும் இல்லை. இவர் கோபக்காரர் வேறு. தட்டிக் கேட்பதற்கும் தைரியமில்லை. என்னுடைய பயம் நியாயமா? அல்லது மனப்பிரமையா?


அன்புள்ள சிநேகிதி,

உடம்பின் உள்ளுக்குள் இருக்கும் உறுப்புகளுக்கெல்லாம் உள்ள வியாதியைப் பார்க்க, படம் பிடிக்க எத்தனையோ நுண்கருவிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஆனால் மனிதர்களின் மனதில் தோன்றும் உண்மையான எண்ணங்களை, உணர்ச்சிகளை உடனே கண்டறிய எந்தக் கருவியும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. இருந்தால் இது போன்ற பிரச்சனைகளை அணுகுவது சுலபம்.

உங்கள் கணவர் இந்த எட்டுவருட வாழ்க்கையில் உங்களிடம் மிகவும் ஆசையாக இருந்து, மனம் திறந்து பேசுபவராக இருந்தால், இந்த சந்தேகத்திற்கு அவசியமில்லை. அப்படியில்லையென்றால், இப்போது, நீங்கள் சந்தேகப்பட்டு ஒரு கோபக்காரக் கணவரிடம் கேட்டுப் பயனில்லை. அது உண்மையாக இல்லாமல் இருந்தால் அவருக்குக் கோபம் வரும். அவரை நம்பவில்லை என்று சாடுவார். அது உண்மையாக இருந்தாலும், அதை மறைக்க கோபத்தை ஒரு தற்காப்பாகப் பயன்படுத்திக் கொள்வார்.

ஆகவே ஓரிரண்டு மாதம் உங்கள் சந்தேகத்தைக் காட்டாமல் இயல்பாக இருந்துகொண்டே அவருடைய நடைமுறையில் அல்லது பழக்கத்தில் மாற்றம் இருக்கிறதா என்று கண்டுபிடியுங்கள். உதாரணமாக, ஏதேனும் விழா அல்லது பார்ட்டிக்குப் போக வேண்டியிருந்தும் அதைத் தவிர்த்து, அடிக்கடி அவருடைய பழைய மனைவி வீட்டிற்குப் போகிறாரா என்று பாருங்கள். அவர் திரும்பி வந்தால் அவர் பேச்சில் ஏதோ பரபரப்போ, அவசரமோ, இல்லை எதையோ மறைக்க முயல்வதோ தென்படுகிறதா என்று கண்டு அறியுங்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்கள் சந்தேகத்தை தெரிவிக்கக் கூடாது. மாறாக அவரிடம் மேலும் அன்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். (சில சமயம் வழி தவறிப் போகும் கணவன்மார்கள் இந்த அனபுக்குக் கட்டுப்பட்டு குற்ற உணர்ச்சியில் திரும்பி வந்துவிடுவார்கள்).

அப்படியும் நிலைமை சரியாகவில்லை. நிலைமை கட்டுக்கு மீறி போய்விட்டது என்று உங்களுக்குத் தோன்றினாலும், உங்கள் பயத்தை உதறித் தள்ளிவிட்டு, மீண்டும் சொல்கிறேன், பயத்தை உதறிவிட்டு, அவரிடம் நேருக்கு நேர் சந்தித்து இதைப்பற்றிப் பேசவேண்டும். அவர் கோபப்பட்டாலும், அவருடைய நடத்தையின் காரணமாக நீங்கள் எடுக்ககூடிய முடிவுகளைப்பற்றி அலசவேண்டும். சாதாரணமாக எப்போதும் சந்தேகப்பட்டு, கேள்வி கேட்கும் மனைவிகளை கணவர்கள் நச்சரிப்பு (nagging) என்ற பேரில் உதாசீனம் செய்து விடுவார்கள். ஆனால் நீங்கள் பயந்த சுபாவம் கொண்டவர் என்பதால், 'சாது மிரண்டால்' என்பதின் அர்த்தம் உங்கள் கணவருக்கு புரியக்கூடும்.

ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். உங்கள் கணவரின் மேல் எந்த கோபம் இருந்தாலும் அந்தக் குழந்தை மார்க்கை பாதிக்கவிடாமல் அவனிடம் உங்கள் அன்பையும் பாசத்தையும் தொடர்வது இப்போது மிகமிக முக்கியம். கவலைப்படாதீர்கள். கணவர் முறைதவறி நடந்தால் இந்த ஊரில் பெண்களுக்கு நிறையப் பாதுகாப்பு சலுகைகள் உண்டு. எல்லா இடங்களிலும் பெண்ணுரிமைச் சங்கங்களும் உண்டு. உங்கள் மனதில் ஒரு உறுதியும், நம்பிக்கையும் இருந்ததால்தான் உங்கள் கணவரை மணந்து கொண்டிருக்கிறீர்கள். ஆகவே இந்த இரண்டு குணங்களையும் இப்போது வெளிக்கொணரப் பாருங்கள்.

வெற்றி பெற வாழ்த்துகள்.
அன்புடன்,
சித்ரா வைத்தீஸ்வரன்

******


அன்புள்ள...

நான் 2 மாதங்களுக்கு முன்பு 'அன்புள்ள சிநேகிதியே' பகுதிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். நான் திருமணம் செய்து வைத்த பெண்ணை இங்கே 20 வருடம் கழித்து பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் அவள் அமெரிக்கா வந்து மாறிவிட்டாள் என்று என் குறையைப் பற்றி எழுதியிருந்தேன். தீர்க்கதரிசி போல பதில் எழுதியிருந்தீர்கள்.

மனிதர்களின் அடிப்படைக் குணம் மாறாது . சூழ்நிலை, சந்தப்பத்தினால் பழக்கம், செயல்கள் மாறலாம் என்று எழுதியிருந்தீர்கள். நீங்கள எழுதிய அந்த 'தென்றல்' கிடைத்து நான் படிப்பதற்கு இரண்டு நாள் முன்பு தான், என்னுடைய அந்த தோழி என்னைக் கூப்பிட்டு நிறைய நேரம் பேசினாள். நான் உண்மையிலேயே அழுதுவிட்டேன். அவளிடம் இது போல கடிதம் எழுதியிருப்பதையும் சொன்னேன். 'மிகவும் சோதனையான நேரம். அதனால் எதுவும் பேச முடியவில்லை. நேரில் சொல்லுகிறேன்'' என்றாள். செப்டம்பரில் வரும் 3 நாள் லீவில் என்னை வரச்சொல்லியிருக்கிறாள். நான் போவதாக இருக்கிறேன். என் மனதில் இருந்த உறுத்தல் போய்விட்டது. உங்களுக்கு ஆயிரம் நன்றி.

இப்படிக்கு,
........................

© TamilOnline.com