திருக்கருகாவூர் என்று அனைவராலும் அழைக்கப்படும் ஊருக்கு இன்னொரு பெயரும் உண்டு. இது அநேகமாக யாருக்குமே தெரிந்திருக்க முடியாது. பேச்சுவழக்கில் இத்தலம் திருக்களாவூர் என்று சொல்லப்படுகிறது. சோழநாட்டில் காவிரிக்கரையில் அமைந்துள்ள ஏராளமான தலங்களில் திருக்கருகாவூர் பல தனிச்சிறப்புக்கள் கொண்ட ஒரு பழமையான திருத்தலமாகும். இதனுடைய சிறப்புக்களை வரிசைப்படுத்தினால் பட்டியல் நீண்டுகொண்டே போகும்.
முதலாவதாக, தேவார மூவரான அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகியோர் பாடிய தலம் என்ற பெருமை பெற்றது என்பதால் தேவார காலத்திற்கும் முந்தையது. அதாவது ஏறத்தாழ 1200 ஆண்டுகட்கு முந்தைய பழமையான கோயில் என்ற பெருமைக்குரியது. அடுத்து, பஞ்சாரண்ய தலங்கள் வரிசையில் முதலாவதாக வைத்துப் பேசப்படும் பெருமை உடையது.
முல்லைவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகின்றது. முல்லைக் காடாக இருந்த இடத்தில் ஒரு புற்றின் நடுவிலே சுயம்புவாக, அதாவது தானாக ஒரு லிங்கம் தோன்றி, அதுவே முல்லைவன நாதர் என்ற பெயருடைய மூலவராக அமைந்தது. எனவே இத்தலத்தின் தல விருட்சமும் முல்லைக் கொடியாகும். முல்லை மலராலேயே இறைவனுக்கு அர்ச்சனையும் செய்யப்படுகிறது. முல்லைக்கொடியிடையே தோன்றியவர் என்பதற்கு அடையாளமாகப் படர்ந்திருந்த தழும்பை இன்றைக்கும் காணலாம். புற்றுமண் சூழலுக்கு இடையே இறைவன் தோன்றியதால் இங்குள்ள மூர்த்திக்குத் திருமுழுக்காட்டு (அபிஷேகம்) கிடையாது. மாறாக புனுகுச் சட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சுயம்புவான இறைவனுக்குப் பல்லவர்களாலும் அடுத்து சோழர்களாலும் படிப்படியாக கற்கோயில் எழுப்பப்பட்டது. இவ்வாறு பார்க்கும் போது இக்கோயில் பல்லவர் காலத்திற்கும் முந்தையது என்பதும், கிபி 7ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என்பதும் உறுதியாகின்றது.
இக்கோயிலின் மற்றொரு சிறப்பு மாதந்தோறும் நடைபெறும் பிரதோஷ வழிபாடுகள். 126 பிரதோஷ வழிபாடு செய்தவர்களுக்கு மறுப்பிறப்பு இல்லை என்பது காஞ்சி பெரியவர் கூறியுள்ள உண்மை. வளர்பிறை மற்றும் தேய்பிறை திரியோதசி திதியில் மாலைநேரத்தில் கதிரவன் மறைவுக்கு ஒன்றரை மணிநேரத்திற்கு முன்பும், கதிரன் மறைவுக்கு ஒன்றரை மணிக்கு பின்பும் (ஏழரை நாழிகை) ஆகிய இந்த இடைப்பட்டநேரம்தான் பிரதோஷ காலம். இந்த நேரத்தில்தான் சிவப்பெருமான் நந்தி தேவனின் இருகொம்புகளுக்கு நடுவே நின்று நடனம்புரியும் காட்சி தரிசிக்கின்ற காலம். இந்த நேரத்தில் சிவபெருமானுக்குச் சிறப்பு அபிஷேக, ஆராதனை, வழிபாடுகள் நடைபெறும். திருக்கருகாவூர் கோவிலில் பிரதோஷ வழிபாடு மிகப்பிரசித்தமானது என்பதால், அன்று இவ்வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
பெயர் வந்த வரலாறு
முல்லைவனத்தில் ஒரு காலத்தில் நித்துருவர் என்பவர் தம் மனைவி வேதிகையோடு, ஓர் ஆசிரமத்தில் தவம் செய்து கொண்டிருந்த இரண்டு முனிவர்களுக்கு வேண்டிய உதவிகளையெல்லாம் செய்தபடி வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் அவரது முகச்சோர்வைக் கண்டு முனிவர்கள் காரணம் கேட்டபோது நித்துருவர் தமக்குக் குழந்தைப் பேறு இல்லாமையைப்பற்றிக் கூறி வருந்தினார். முனிவர்கள் முல்லைவன நாதரையும், இறைவியையும் வழிபடுமாறு அறிவுறுத்தினார்கள். தம்பதியர் இருவரும் அவ்வாறே வழிபட வேதிகை கருவுற்றாள்.
ஒரு சமயம் வேதிகையின் கணவர் ஊரிலில்லாதபோது ஊர்த்துவபாதர் என்ற முனிவர் இவர்களது ஆசிரமத்தை நாடி வர, வேதிகை பேறுகால வலியினால் அவதிப்பட்டுக்கொண்டு மயக்க நிலையில் இருந்தாள். உண்மையைத் தெரிந்து கொள்ளுமுன்பே முனிவர் வேதிகை தன்னை அலட்சியப்படுத்தியதாக நினைத்து அவள் கரு சிதைந்துபோகுமாறு சாபமிட, கருவும் சிதைந்தது. வேதிகை இறைவியிடம் அழுது இறைஞ்ச, இறைவியும் அவள் கருவை ஒரு குடத்தில் இட்டு குழந்தை முழுவதுமாய் உருவாகும்வரை காத்து பின்னர் வேதிகையிடம் ஒப்படைத்தாள். இதன் காரணமாகவே இறைவியின் பெயர் கருக்காத்தநாயகி (கர்ப்பரட்சாம்பிகை) என்றும் வழங்கப் படலாயிற்று. ஊர் பெயரும் திரு கருகாவூர். அதாவது கரு கருகாத ஊர். இன்றும் இவ்விறைவியை வேண்டி இக்கோயிலில் அம்மன் பாதத்தில் வைத்து மந்திரித்துக் கொடுக்கப்படும் விளக்கெண்ணையைக் கருவுற்ற பெண்கள் பெற்றுச் சென்று பயன்படுத்தினால் சுகப்பிரசவம் ஆகும் என்ற நம்பிக்கை இருந்து வருவதும் வியக்கத்தக்க ஓர் செய்தி.
பால்குளம்
நெய்த்திருவன் என்ற பெயரிடப்பட்ட வேதிகையின் குழந்தைக்கு தாய்ப்பால் இல்லாது போகவே (கருப்பையில் இல்லாமல் குடத்தில் இடப்பட்டதால்) கருக்காத்த அம்மன் தேவலோகத்திலிருந்த காமதேனுவை வரவழைக்க, காமதேனுவும் தன் கால் குளம்பால் தரையில் கீற, அந்த இடத்தில் பால் குளம் தோன்றிற்று. இன்றும் கோயிலின் முன்னாள் க்ஷ£ரக்குண்டம் என்ற பெயரில் குளம் ஒன்று இருக்கக் காணலாம். வடமொழியில் க்ஷ£ரம் என்றால் பால். ஒரு காலத்தில் தமிழகத்தில் போர் நிகழ்கின்றபோது கர்ப்பிணிப் பெண்கள் பேறுகாலம்வரை இங்கு வந்து தங்கியிருப்பர். அவர்களுக்கு ஓர் புகலிடமாக இவ்வூர் இருந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்ல. தீராத சருமநோய் உள்ளவர்கள் பிரதோஷ நாளில் முல்லைவன நாதருக்குப் புனுகுச்சட்டம் சார்த்தி வழிபட்டு, அக்கோயிலில் தரப்படும் புற்று மண்ணை எடுத்துப் பூசிக்கொள்ள, தீராத சருமநோயும் நீங்கும் என்பதிலும் மக்கள் அசையாத நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.
பட்டீச்சுரத்தில் சிவபெருமானால் வழங்கப்பட்ட முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு திருக்கருகாவூர் வந்த திருஞான சம்பந்தர் 'முத்து' எனத் தொடங்கிப் பாடிய இத்தலத்துத் தேவாரப் பாடல் இதோ:
முத்திலங்கு முறுவல் உமை அஞ்சவே மத்தயானை மறுக அவ்வுரிவாங்கியக் கத்தைபோர்த்த கடவுள் கருகாவூர் எம் அத்தர் வண்ணம் அழலும் அழல் வண்ணமே
பிரமனிடம் வரம் பெற்ற கயாசுரன் என்ற அரக்கன் அனைவரையும் துன்புறுத்திக் கொண்டிருக்க அவனைக் கொன்று அந்த யானையின் தோலை உரித்து மேற்போர்வை யாய்ப் போர்த்திக்கொண்டான் சிவபெருமான் என்றும் அவனது செம்பொன்னை ஒத்த திருமேனிப் பிரகாசத்தின் ஒளியைக் கண்களால் தாங்கிக்கொள்ள முடியாத உயிரினங்கள், சிவபெருமான் இவ்வாறு போர்த்திக் கொண்ட இச்செயலால் பிழைத்தன என்பர். இவ்வாறாக இறைவனின் திருமேனி நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் நெருப்பின் நிறமாகும். இத்தகு பிரகாசத்தைக்கண்டு தான் திருஞான சம்பந்தர் 'அழல் வண்ணமே' எனப் பாடி வியந்திருக்கிறார்.
டாக்டர். அலர்மேலு ரிஷி |