தாயுமான ஆழ்வார்
பிறப்பு இறப்பு என்னும் கட்டுகளுக்காட்படாத பரம்பொருள் உலகின் அஞ்ஞான இருளை நீக்கத் தானே எடுத்த அவதாரங்களுள்ளும் கிருஷ்ணாவதாரமே பரிபூர்ணமானது.

ராமாவதாரத்தில் பகவான் அரசனாகப் பிறந்து ஆட்சியைத் துறந்து, துணைவியைப் பிரிந்து, அரக்கர் குலமறுத்து எனத் தன் அவதாரத்தின் கடமைகளை மிகவும் கருத்தாகச் செய்வதிலேயே முனைப்பாக இருந்துவிட்டதால் அவரை பாலனாக, விளையாட்டுப் பிள்ளையாக அனுபவிக்கும் வாய்ப்பு காதையை இயற்றிய பெருங்கவிகளுக்கு அவ்வளவாகக் கிட்டவில்லை எனலாம். ஆனால் கிருஷ்ணன் என்று நினைத்ததுமே அவனது பால்ய லீலைகள், பின்பு அவன் செய்த ராஸலீலைகளையும் எண்ணிக் கவிகளுக்கும், புராணகர்களுக்கும் அலுக்காத ஆனந்தமும் சுவாரஸ்யமும் ஏற்படுகின்றன. மீரா, ஆண்டாள், ஆழ்வார்கள்முதல் லீலாசுகர், நாராயண தீர்த்தர், ஊத்துக்காடு என நீண்டு பாரதியார் வரை அவனது லீலைகளை வர்ணித்து முடிவு கண்டவரில்லை.

கண்ணன் என்னும் பெருந்தெய்வத்திடம் பக்தியில் ஆழ்ந்த அடியாரான ஆழ்வார்களுள் அடியவர் என்ற நிலையில் இருந்துமட்டும் அவனை அனுபவிக்காது ஒரு தாயின் இடத்தில் தன்னை இருத்திக் கண்ணனைக் குழந்தையாக எண்ணி அவனது ஒவ்வொரு வளர்ச்சியின் நிலையையும் பாடிப் பரவசப்படுகிறார் விஷ்ணுசித்தர், பெரியாழ்வார் எனப் போற்றப்படும் பட்டர்பிரான்.

அதே சமயம் தன் மகளைக் கண்ணனுக்கு மணமுடித்துக் கொடுத்துவிட்டு ஆய்ப்பாடியில் வாழ்க்கைப்பட்ட தன் மகளை "பெருமகளாய்க் குடி வாழ்ந்து பெரும் பிள்ளை பெற்ற யசோதை மனமுகந்து மணாட்டுப்புறம் செய்யும் கொல்லோ?" என்று ஒரு பெண்ணைப் பெற்ற தாயின் கவலையையும் படுகிறார்.

பெரியாழ்வாரின் பாசுரங்கள் பின் வந்த பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் முன்னோடி எனலாம். கண்ணனென்னும் அப்பிள்ளைக்குத் தொட்டிலிட்டுத் தாலாட்டி, கண்ணேறு படாவண்ணம் காப்பிட்டு, நீராட்டி, பூச்சூட்டி, அம்புலி காட்டி அமுதூட்டி, அது மட்டுமா? 'பாவியேன் பாலகனைக் கன்று மேய்க்கக் காடு நோக்கி அனுப்பினேனே?" என அங்கலாய்த்து வருந்துமளவுக்குக் கண்ணனிடம் பிள்ளைப் பாசத்தை வளர்த்துக் கொண்டு தானே யசோதை ஆகி விடுகிறார் அவர்.

"மிடுக்கிலாமையால் யான் மெலிந்தேன் நங்காய்!" என அலுத்துக் கொள்ளுமளவு அவளைக் கண்ணன் படுத்தும் பாட்டையும் அவள் படும் பாட்டையும் ஆழ்வாரின் பாட்டில் அனுபவிப்போமா?

தினப்படி நம் வீட்டுச் செல்வங்களைக் குளிப்பாட்டும் படலம் எல்லாத் தாய்மாருக்குமே ஒரு சவால்தான். அவர்களைத் திமிரத் திமிர இழுத்துவந்து குளியல் தொட்டியில் நிறுத்தி, ஒவ்வொரு கட்டத்திலும் கத்திக் கூப்பாடு போடுவதை சமாளித்து நாமும் கூடவே கத்தி, ஒரு வழியாக வெளிவருவதற்குள் நாமே நாலுமுறை குளித்தாற்போல் ஆகிவிடும். கண்ணனை நீராட்டம் கண்டருளப் பண்ணும் ஆழ்வார் யசோதை முகமாக நமக்கு அக்காட்சியினைக் காட்டுகிறார்.

"வெண்ணெயளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு" நிற்கிறான் கண்ணன். நாள்முழுதும் ஆயர் சிறுவரோடு அலைந்து திரிந்து, விடிந்தது முதலே "கன்றுகளோடச் செவியில் கட்டெறும்பு பிடித்திட்டு, எண்ணெய்க் குடத்தை உருட்டி, இளம்பிள்ளை கிள்ளி எழுப்பி, கண்ணைப் புரட்டி விழித்து," தோழர்களை பயமுறுத்தி என்று பல வகையிலும் விளையாடி வருகிறான்.

அவனை நீராட வைக்க அப்பம் கலந்த சிற்றுண்டி யென்ன, உண்ணக் கனிகள் என்ன என்று தின்னும் ஆசைகாட்டி அழைக்கிறாள். அவனோ நின்ற இடத்தில் நிலைக்காது ஓட்டம் பிடிக்கிறான். உடலெல்லாம் மண்ணும் புழுதியுமாக நிற்கும் மகனைப் பார்க்கப் பெருமையும் பாசமும் பொங்குகின்றன அவளுக்கு. ஆயினும் அவனைக் குளிக்கவைக்க வேண்டுமே! இறுதியாக யசோதை ஒரு அஸ்திரத்தைப் பிரயோகம் செய்கிறாள்.

நம் வீட்டுக் குழந்தைகள் குளிக்கவோ, உடுத்தவோ அடம் செய்தால் "அதோ உன் சினேகிதன் (சினேகிதி) உன்னைப் பார்த்துச் சிரிக்கிறான்(ள்) பார். நாளை பள்ளி முழுதும் போய்ச்சொல்லி எல்லாரும் பரிகாசம் செய்யப் போகிறார்கள்" என்று சொல்வதில்லையா, அதே உத்தியைத்தான் அவளும் கடைப்பிடிக்கிறாள். கண்ணனின் அணுக்கத் தோழி நப்பின்னை. நந்தகோபன் இல்லத்துக்கு நினைத்த நேரமெல்லாம் வரப் போக இருக்கும் உரிமையுள்ளவள். அவள் பெயரை இங்கு துணைக்கு அழைக்கிறாள் யசோதை. இதோ பாசுரம்:

பூத்தொழுவினில் புக்குப் புழுதியளைந்த பொன்மேனி
காணப் பெரிதும் உகப்பன்; ஆகிலும் கண்டார் பழிப்பர்
நாணெத்தனையுமிலாதாய்! நப்பின்னை காணில் சிரிக்கும்!
மாணிக்கமே! என் மணியே! மஞ்சனமாட நீ வாராய்!

அஸ்திரம் நன்கு வேலை செய்தது. கண்ணன் நீராடப் போய்விட்டான். நாமும் அத் தெய்வக் குழந்தையின் லீலைகளை ஆழ்வார் வாயிலாகச் சுவைத்து இன்புற்றோம்.

அம்புஜவல்லி தேசிகாச்சாரி

© TamilOnline.com