மனதில் பட்டதை சொல்ல தயங்காத தன்மை, சினேகமான சிரிப்பு... படபடவென்று தன் நியாயங்களை பொரிந்துத் தள்ளும் இயல்பு... இதுதான் சினேகன்... தமிழ்திரையுலகில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் கவிஞர்... 28 வயது இளைஞர்...
தஞ்சாவூர் பகுதியில் செங்கிப்பட்டி அருகில் உள்ள புதுகரியப்பட்டி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் செல்வம்.
சமீபத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த 'சாமி' திரைப்படத்தில் இவரின் பாடல்கள் சூப்பர் ஹீட். முதன்முதலாக கவிஞர் வைரமுத்துவிடம் உதவியாளராக சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினை பெற்று தன் திரையுலக பிரவேசத்திற்கு ஓர் தளம் அமைத்துக் கொண்டார். வைரமுத்து அவர்களுடன், இவருக்கான தொடர்பைப் பற்றி குறிப்பிடுகையில், ''அப்போ வைரமுத்து சமூக இலக்கிய பேரவை'' என்றொரு இயக்கம் மாவட்டந்தோறும் இயங்கி வந்தது. இப்போ அது ''வெற்றி தமிழர் பேரவை'' என்று அழைக்கப்படுகிறது. இப்பேரவையின் மாநிலதுணைப் பொதுச்செயலர் திரு. செழியன் அவர்களின் சிநேகம் எனக்கு கிடைத்தது. அவர் மூலம் எனக்கு வைரமுத்து அவர்களின் அறிமுகம் கிடைத்தது. கவிதை எழுதுவதில் எனக்குள்ள தனிப்பட்ட ஆர்வத்தைக் கண்ட வைரமுத்து அவர்கள் 1989-90ல் என்னை அவர்களுடன் இணைத்துக் கொண்டார்'' என்றார்.
அன்று முதல் தொடர்ந்து கிட்டத்தட்ட 95வரை அதாவது 5 வருடங்கள் வைரமுத்து அவர்களின் உதவியாளராகப் பணிப்புரிந்து பின்பு, சில தனிப்பட்ட காரணங்களால் விலகி வந்தேன். கிட்டத்தட்ட சில வருட காத்திருப்புக்குப் பின் ''புத்தம் புது பூவே'' என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இவர் பாடல்கள் எழுதினர். அத்தனை பாடல்களும் ஹிட். ஆனால் படம் திரைக்கு வரவில்லை. தொடர்ந்து 'பெண்கள்'' ''கண்டேன் சீதை'' என்ற படத்திலும் பாடல் எழுதினார். அதற்குப் பிறகு இவர் எழுதி பல பாடல்கள் வந்தன என்றாலும் குறிப்பா ''பாண்டவர் பூமி'' படத்தை சொல்ல வேண்டும். இதில் இவர் எழுதிய ''அவரவர் வாழ்க்கையில்'' என்ற பாடல் தமிழகத்தில் எல்லோரையும் முணுமுணுக்க வைத்தது... மெல்ல சினேகன் என்ற இளைஞன் - கவிஞன் வெளியுலகிற்கு அடையாளப்படுத்தப்பட்டான்.
'' என் பாடல் ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது. என் தாயார் அந்தப் பாடலை என் வீட்டில் கேட்டுக் கொண்டிருந்தார்... அளவிட முடியாத சந்தோஷம் அவருக்கு... பாடலைக் கேட்டுக் கொண்டே தன் இறுதி மூச்சை விட்டு விட்டார்'' - இது என் வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் என்கிறார் சினேகன்.
'சாமி' திரைப்படத்தில் இவர் எழுதிய ''கலியாணம்தான்...'' என்ற பாடல் மிகப் பிரபலமாகியது. இதில் இவருக்கும் சந்தோஷம்தான் என்றாலும், இந்தப் பாடலுக்கு பல இடங்களில் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது.
ஏன் இந்த வகைப்பாடல்களை எழுத வேண்டும் என்றவுடன், ''பொதுவா தமிழ்த்திரைப்பட உலகில் எடுத்தீங்கன்னா... அன்று கண்ணதாசன், வாலி, ஏன் இன்றைய வைரமுத்து அவர்கள் வரை இதுமாதிரி பாடல் எழுதாமல் இல்லை... என் முன்னோர்கள் எல்லோரும் இப்படி பாடல்கள் எழுதியிருக்கிறார்கள்... இந்தப் பாடலை பலர் விமர்சனம் செய்கிறார்கள்... சில வியாபார நுணுக்கங்களுக்காக வளைந்து கொடுக்க வேண்டியிருக்கிறது... இதே நீங்கள் என் கவிதைத் தொகுப்பைப் பார்த்தீங்கன்னா... அதில் இப்படிப்பட்ட பாடல்கள் கண்டிப்பா இருக்காது...'' என்கிறார்.
சமயம் கிடைக்கும் போதெல்லாம் கவிதைப் புத்தகங்களை எழுதியுள்ள சிநேகன் 'முதல் அத்தியாயம்' , 'இன்னும் பெண்கள் அழகாய் இருக்கிறார்கள்' உள்ளிட்ட தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
உங்கள் பாடல் வரிகள் கண்ணதாசன், வைரமுத்து ஆகியோரின் வரிகளை சில இடங்களில் நினைவுப்படுத்துகிறதே என்றவுடன், ''ஆம், இது இயற்கை... தந்தையின் வழியில் தான் மகன் நடப்பான்... என் எழுத்தில் அவர்களின் சாயல் இருப்பது தவிர்க்க முடியாதது... எப்படி ஒரு குழந்தை அவன் தாய், தந்தையின் குணத்தை ஒத்திருக்கிறதோ அதுபோல்தான் இதுவும்... ஆனால் இப்போ என்னுடைய சில பாடல்களை கேட்டு, அதில் என் பெயர் இடம் பெறாமல் இருந்தாலும் வரிகளை வைத்தே, இந்தப் பாடல் நீங்கள் எழுதியதுதானே என்று கேட்கிறார்கள்... '' என்கிறார்.
''எங்கோ கிராமத்தில் களிமண்ணாக இருந்த என்னை, சிற்பியாக ஆக்கியவர் வைரமுத்து. என் கவிதைக்கும், தமிழுக்கும் அவர்தான் தந்தை'' என்று வைரமுத்துவைப் பற்றி குறிப்படும் போது உணர்ச்சிப் பொங்க கூறினார்.
கிட்டத்தட்ட 200 பாடல்களுக்கு மேல் இயற்றியுள்ள சிநேகன் அவர்கள் பல இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்திருக்கிறார். ஆனால் இதுவரை இளையராஜா, ஏ.ஆர். ரஹமான் ஆகியோரிடம் தான் பணியாற்றவில்லை... அதற்கான சந்தர்ப்பம் இன்னும் அமையவில்லை என்கிறார்.
சினிமாவில் சாதிக்க நிறைய இருக்கிறது. சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் ஓடிக்கொண்டிருக்கும் இந்த இளைஞருக்கு மண் மேல் ஒருவித ஈடுபாடு. ஆம் அவர் பிறந்த மண் மேல். தான் பிறந்த மண்ணை அதிகம் நேசிக்கிறார். இன்னும் சொல்ல வேண்டுமானால் மண் மேல் பைத்தியம் என்றே கூறலாம். ஒவ்வொரு மனிதனுக்கும் தான் பிறந்த மண்ணின் மேல் ஒரு காதல் இருக்க வேண்டும்... பற்று இருக்க வேண்டும் என்கிறார்.
போட்டிகள் நிறைந்த சினிமா உலகில் இடைவிடாத பேராட்டத்திற்குப்பின் கண்ணதாசன், வாலி, வைரமுத்து வரிசையில் இன்று தனக்கென்று ஒரு பாணி அமைத்துக் கொண்டு வருகிறார் சினேகன் என்றால் அது பொய்யன்று.
சந்திப்பு: கேடிஸ்ரீ |