மங்கயர்க்கரசியின் காதல்
சூசிகை

குலோத்துங்க சோழனுக்காகக் கலிங்கம் சென்று, வென்று வந்த கருணாகரத் தொண்டைமானுடைய மகளான மங்கையர்க்கரசி என்னும் மங்கை, கருணாகரன் என்னும் வாலிபனைக் காதலிக்கிறாள். அவள் தகப்பன் இறந்துவிட்டதால், அவளுடைய சிற்றப்பன்தான் தற்காலம் அவள் குடும்பத்துக்குத் தலைவன். அவன் அவளை மார்த்தாண்டன் என்னும் வேறு ஓர் இளைஞனை மணக்கும்படி வற்புறுத்தி வருகிறான். ஆனால் மங்கையர்க்கரசி கருணாகரனையே விவாகம் செய்துகொள்வது என நிச்சயித்துக்கொண்டு அவனை ஒரு நாள் இரவு ஊரின் புறத்திலுள்ள ஒரு காளி கோயிலுக்கு வரும்படிச் சொல்லிவிட்டுத் தான் குறித்த நேரத்தில் கோயிலுக்குச் சென்று காத்துக் கொண்டிருக்கிறாள். பிறகு நடக்கும் விஷயம் கதையில் தெரியும்.

எங்கே பார்த்தாலும் இருள்; காரிருள்; கருத்த கனத்த மேகங்கள் வானத்தில் இடைவிடாது சென்று கொண்டிருக்கின்றன. சந்திரன் சற்று நேரத்திற்குத் தோன்றுகிறான். உடனே முன்னிலும் கனமான மேகங்களுக்கு இடையில் மறைத்து விடுகிறான். காற்று சீறிக்கொண்டு செல்கிறது. தூரத்தில் புலியும், கரடியும் உறுமிக் கொண்டிருக்கின்றன. பக்கத்துக் கொல் லைகளில் நரிகள் ஊளையிட்ட வண்ணமாக இருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தின் மீதிருந்து ஒரு கோட்டான் பயங்கரமாகக் கத்துகிறது; உடனே நிறுத்தி விடுகிறது.

பத்திரகாளி கோயிலில் விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. காற்று, தீபத்தை அலைக்கும் போதெல்லாம் மரங்களின் நிழல்கள் அசைவதானது பூதங்கள் ஒன்றை ஒன்று எதிர்த்துப் போர்புரிவது போல் இருக்கிறது. பத்திரகாளியின் தோற்றம் பயங்கரமாக இருக்கிறது.

இந்த நள்ளிரவில், இந்தப் பயங்கரமான வேளையில், பத்திரகாளி சந்நிதியில் தனியே உட்கார்ந்து கொண்டு சிந்தையில் ஆழ்ந்திருக்கும் இக்கன்னி யாவள்?

சத்தம் செய்யாதே, யாழின் இன்னிசை போன்ற குரலில் அவள் ஏதோ பேசுகிறாள்: 'இத்தனை நேரமாகி விட்டதே, இன்னும் என் கருணாகரன் வரவில்லையே! கருணாகரா! ஏன் இன்னும் தாமதிக்கிறாய்? குறித்த நேரத்தைச் சற்றுக் கடந்தாலும் என் உயிர் துடித்துப் போய்விடுமென்று உனக்குத் தெரியாதா? தேவி! மகாகாளி! பத்திரகாளி! உன் சந்நிதியில் கருணாகரனுக்கு மாலையிட வேண்டுமென்றே இங்கே வந்திருக்கிறேன். சிற்றப்பன், மார்த் தாண்டனை மணக்கும்படி வற்புறுத்துகிறான். சிங்கத்தைப் பார்த்த கண்ணால் செந்நாயைப் பார்ப்பேனோ? சக்கரக் கோட்டத்திலே விசயதர பூபதிக்காக என் தந்தை செய்த போரில், போர்க்களம் முழுதும் கறங்குபோல் திரிந்து, பகைவர் யானை சேனையையெல்லாம் ஊதையிற்பட்ட பூளைப்பூவென்ன நூறி எறிந்து வாகை சூடினவன் கருணாகரன் அன்றோ! அவனுடைய நடை மேகத்தின் கதி போல இருக்கும்! அவன் வரும்போது தரையிலே ஒரு தேவன் நடந்து வருவதுபோலிருக்கும்!'

'காளீ! உன்னிடத்து வருகிறேன் என்று வாக்களித்த என் கருணாகரனுக்கு நடுவழியில் தீங்கு வராமல் காப்பாய்! இன்னும் வரவில்லையே கருணன்! என் செய்வேன்! என் செய்வேன்!'

மங்கையர்க்கரசி இவ்விதம் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஒரு வீரன் புயற்காற்று வருவது போல வந்து அவளுக்கெதிரே நின்று, 'கருணாகரனை இனி அழையாதே! உன் குரல் இனி அவன் காதில் கேளாது. மங்கையர் திலகமே! உன் பேரிலுள்ள சொல்லொண்ணாக் காதல் என்னைத் தூண்ட, நான் அவனைத் தனி வழியில் மறித்துச் சுவர்க்கம் அனுப்பிவிட்டேன். வாளுக்கு இரையாகிவிட்டவனை இனி நினைத்து வருந்தாதே. நின் கயல்போன்ற கண்ணால் நீ கண்ணீர் விடுவது எனக்குச் சகிக்கவில்லை! கருணாகரன் பேரின் மோகித்துப் போயிருந்தாய். அவனைத் தனிப் போரில் வென்ற என் வீரத்தைப் பார்! அவனிலும் அதிகமாக நான் உன்னைக் காதலிக்கிறேன். உன் அருட்கண்ணால் என்னைப் பார்ப்பாய். என் உடல், பொருள், ஆவி மூன்றையும் உன் பாதத்திலேயே சமர்ப்பிக் கிறேன். உன் சுந்தரக் குமுதச் செவ்வாயினால் ஓர் அருள் மொழி மாத்திரம் எனக்கு உரைப்பாய்' என்று இவ்வாறு சொல்வானாயினான்.

மங்கையர்க்கரசி சற்று நேரம் அசைவற்று விட்டாள்.

ஆனால் சடுதியில் தேறி ஆவேசம் வந்தவள் போல் விழித்துப் பார்த்து, 'மார்த்தாண்டா, கருணாகரன் மடிந்த இடத்தை எனக்குக் காட்டுவாய்' என்றாள்.

இருவரும் சென்றார்கள். ஒரு தனிப்பாதை வழியே செல்லுகிறார்கள். நிசப்தம், நிசப்தம், எங்கே பார்த்தாலும் நிசப்தம். மேகங்கள் சற்று விலகுகின்றன. சந்திரன் இலேசான மேகத்துக்குப் பின்னிருந்து மங்கின ஒளியைத் தருகிறான். ஆனால் பாதை ஒரு மரம் அடர்ந்த காட்டினில் புகுந்துவிட்டது. மார்த்தாண்டனையும் மங்கையர்க்கரசியையும் இருள் மறுபடியும் விழுங்கிவிட்டது.

மார்த்தாண்டன் திடீரென நின்றுவிட்டான். கன்னியும் நிற்கின்றாள். அவள் முகத்தினின்று வரும் பெருமூச்சைத் தவிர அங்கே வேறு சப்தம் இல்லை.

வானத்தில் ஒரு காற்று வேகமாய் வீசிச் சந்திரனை மறைத்த மேகங்களை வாரி ஏகிவிட்டது. ஓர் ஆந்தை இறக்கையை அடித்துக் கொண்டு மேலே பறந்து சென்றது. வன மத்தியத்தைச் சந்திரன் தன் ஒளியினால் விளக்குகிறான்.

ஒரு மரத்தின் அடியில் பளீர், பளீர் என்று ஏதோ ஒரு பொருள் மின்னிக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தையும் பேசாமல் மங்கையர்க்கரசி அந்த மரத்தடிக்குச் சென்றாள். சென்றாள், உடனே விழுந்தாள். விழுந்தாள், கோவென்று அலறினாள்.

'கருணாகரா! கருணாகரா! என் காதல் கணவனே! எங்கே சென்றுவிட்டாய்! உனக்கு இங்கே மாலையிடலாம் என்று வந்தேனே! ஒரு நிமிஷத்தில் வீர சுவர்க்கம் சென்றுவிட்டாயே! இனி இந்த உலகத்தில் அன்புக்கும் வீரத்துக்கும் யாரே உளர்? ஆ காளி! பக்தி நிறைந்த மனத்தோடு உனக்கு நறுமலர் கொணர்ந்து பூசை செய்தேனே; இதுதானா உன் அருள்!'

'கருணா! உன்னை என் உயிர் எனவே நினைந்திருந்தேனே; நீ போன பிறகு எவ்விதம் நான் இன்னும் நின்று கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கிறேன்? என் நாதா, உன் உதடு அசைகிறது போல் இருக்கிறதே! என்னை அழைக்கிறாயோடா? வந்தேன்! வந்தேன்!'

இவ்வாறு பிரலாபித்துக் கொண்டு அவள் உயிரற்றுக் கிடக்கும் கருணாகரன் உடலின்மீது வீழ்ந்தாள். நெடுநேரம் வரையில் அவள் எழுந்திருக்கவில்லை. அப்பொழுது அவள் மனது என்னவெல்லாம் நினைந்தது என்று யாரால் சொல்லலாகும்?

கடைசியாக மங்கையர்க்கரசி எழுந்தாள். ஆனால் எழுந்ததும் அவள் உருவமே மாறுபட்டுப் போய்விட்டது. இப்பொழுது அவள் ரெளத்திராகாரமாக விளங்குகிறாள். மேகங்கள் சந்திரனை மூடிவிட்டன. அந்த நள்ளிருளில் அவள் கண்கள் தழல் விட்டு எரிகின்றன. காளியே மனித உரு எடுத்தாற்போல் நிற்கிறாள். மார்த்தாண்டனை ஏற எடுத்துப் பார்த்தாள். நாகத்தைக் கண்ட பறவைபோல் அவன் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.

'பாதகா! என் சிங்கத்தை மறைந்து வந்து கொன்று விட்டாயே; என்னை மணக்கலாம் என்றல்லவா இருந்தாய். இந்தா மாலையிடுகிறேன் வா!' என்று சொல்லிக்கொண்டே மடியிலிருந்த கையீட்டியை உருவினாள். மார்த்தாண்டன் மீது பெண்புலிபோல் பாய்ந்தாள். மருமத்தில் அவனைக் குத்தி வீழ்த்தி விட்டாள்.

'வஞ்சகா! பாதகா! போ! தைரியமிருந்தால் வீரசுவர்க்கத்திற்குப் போய்க் கருணாகரனோடு போர் செய்! நானும் வருகிறேன். கருணன் போனபிறகு எனக்கு இனி இவ்வுலகில் ஒன்றுமில்லை. காளி! இந்த உடலை உனக்கு இங்கே பலியிடுகிறேன்; ஏற்றுக்கொள்! கருணன் கூப்பிடுகிறான். வந்துவிட்டேன். என் நாதா, வந்துவிட்டேன்.

இனித்தாமதியேன். என் கடமை தீர்ந்துவிட்டது. உன் உயிரை வஞ்சித்து வாங்கினவனைப் பழிவாங்கிவிட்டேன். இதோ வந்துவிட்டேன்!'

இவ்வாறு சொல்லிக்கொண்டே கருணாகரன் உடலிருந்த இடம் சென்று தன்னையும் குத்திக் கொண்டு விழுந்துவிட்டாள்.

மங்கையர்க்கரசியின் காதல் இவ்விதம் முடிந்தது.

வ.வே.சு. ஐயர்

© TamilOnline.com