பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் மத வாழ்வு ஆயம், மத வாழ்வு அலுவலகம், ·ப்ரிஸ்ட் வளாக மையம், யூத வாழ்க்கை மையம் மற்றும் பன்னாட்டு மையம் இணைந்து 'புனித நடனமும் புனிதச் சிந்தனையும்' என்ற தலைப்பிட்டு திருமதி பாலா தேவி சந்திரசேகர் அவர்களின் பரதநாட்டியத்தை செப்டம்பர் 21ம் தேதி வழங்குகின்றன. இது ·ப்ரிஸ்ட் வளாக மைய அரங்கில் மாலை 7.30 மணிக்கு நடைபெறும்.
பிரின்ஸ்டனின் மதநம்பிக்கைகள் விழாவின் ஒரு பகுதியாகும் இந்த நிகழ்ச்சி. அரங்கக் கலைகள், ஆன்மீகம் மற்றும் மத நம்பிக்கையின் சங்கமத்தை ஆராயப்புகும் இவ்விழா உலக நடனங்களின் வழியே கலை மற்று கலாச்சாரத்திற்கு உரமூட்டக் கருதுகிறது.
பாலா அவர்கள் நர்த்தகி மட்டுமல்ல, ஒரு நடன அமைப்பாளருமாவார். பிரபல நாட்டிய அறிஞர் டாக்டர் பத்மா சுப்பிரமணியம் அவர்களிடமும் குரு ஜயலக்ஷ்மி நாராயணன் (அகடெமி ஆ·ப் பரதநாட்டியம்) அவர்களிடமும் இவர் பயின்றார். வழக்கிழந்த சில நடன மரபுகளுக்கு உயிரூட்டி இவர் கற்பித்து வருகிறார். நடனச் சிற்பம் எனப்படும் இதனை அசையும் நடனமணியின் அசையா ஓவியம் என்று சொல்லலாம். இலக்கியம், சிற்பங்கள், கல்வெட்டுக்கள் ஆகிவற்றிலிருந்து பிழிந்தெடுத்த இந்தக் கலையைத் தன் அனுபவத்தோடு தொடுத்து இவர் பயிற்றுவதாக இவரைப் பற்றிய குறிப்பு தெரிவிக்கிறது.
சென்ற பதினைந்து ஆண்டுகளாகத் திருமதி பாலா வேறு அவைகளில் இந்தியப் பாரம்பரிய நடனத்தைப் பார்வையாளர்களுக்கு அளித்து வந்திருக்கிறார். தவிரக் கீழை மற்றும் மேலை நாட்டுப் பாணி முதுநிலை நடன மாணவர் களுக்குத் செயற்பட்டறைகள் நடத்தியுள்ளார்.
பிரின்ஸ்டன் பல்கலைக்கழக அடையாள அட்டையுள்ளோருக்கு அனுமதி இலவசம். ஏனையோருக்கு 15 டாலர் (பெரியவர்) மற்றும் 6 டாலர் (சிறியோர்) என்ற விலையில் ·ப்ரிஸ்ட் மைய விற்பனை அலுவலகத்தில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு 609 258 5006 என்ற எண்ணில் பன்னாட்டு மையத்துடன் தொடர்பு கொள்க. |