இந்தமுறை சென்னை வந்தபோது முதன் முதலில் நான் அமெரிக்காவுக்குக் கிளம்பியதி லிருந்து 25 ஆண்டுக் காலம் ஆகியிருக்கின்றது. இந்த இடைவெளியில் எவ்வளவு மாற்றங்கள்! நான் இந்தியாவை விட்டுக் கிளம்பும்போது இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலைச் சர்வாதிகாரத்தை இந்திய வாக்காளர்கள் தேர்தலில் முறியடித்திருந்தார்கள். ஆனால், தமிழ்நாடு என்னவோ அன்றும் சர்வாதிகாரத்துக்குத்தான் வாக்களித்திருந்தது!
தமிழ்நாடு அரசியல் தலைவரான ஒரு நடிகரை முதலமைச்சராய்த் தேர்ந்தெடுத்திருந்தது. ஆனால் அவருக்கு முன்னரே அமெரிக்காவில், கலி·போர்னியா அரசியல் தலைவரான ரோனால்டு ரேகனை ஆளுநர் பதவிக்குத் தேர்ந்தெடுத்துப் புகழ் சேர்த்துக் கொண்டது. 25 ஆண்டுகள் கழித்து கலி·போர்னியா மீண்டும் அரசியல் தெரிந்த ஒரு நடிகரை ஆளுநராகத் தேர்ந்தெடுக்கக் கூடும் என்கிறார்கள்! அமெரிக்காவும் கிட்டத்தட்ட ஒரு நெருக்கடி நிலையில்தான் இருக்கிறது.
இதுவரை ஒரு நகராட்சி நாய் பிடிக்கும் பதவிகூட வகிக்காத ஆர்னால்டு ஸ்வார்ட்ச நெக்கர் ஆளுநர் பதவிக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? கலி·போர்னியாவின் பொருளாதார நிலை மோசமாகிக் கொண்டே இருப்பது உண்மைதான். என்றாலும், அதை ஒரு சினிமாக்காரர் வந்து சரி செய்யப் போகிறார் என்று ஏன் மக்கள் நினைக்க வேண்டும்? அது அவர்களுக்கு கலி·போர்னியா வின் அரசியல் தலைமை மீது நம்பிக்கையில்லை என்பதைத் தான் காட்டுகிறது. இந்த ஆளுநர் மீளழைப்புத் தேர்தல் (Govenor Recall Election) ஏனைய மாநிலங்களுக்கு ஒரு சர்க்கஸ் வேடிக்கைபோல் இருந்தாலும், கலி·போர்னியாவின் சிக்கல்களைப் பற்றி எல்லோரும் கவலைப்பட வேண்டியிருக்கும். பொதுவாகக் கலி·போர்னியாவின் இன்றைய சிக்கல்கள் சில காலம் கழித்து ஏனைய அமெரிக்க மாநிலங்களுக்கும் பரவுவது வழக்கம். இந்த முறையும் அதற்கு விதி விலக்கல்ல. சென்னை மிக நன்றாக வளர்ந்திருக்கிறது. புறநகர்ப் பகுதிகளில் கொசு வளர்ப்புத் திட்டம், சேரி மயமாக்கல், சாலைகளில் குழி பறித்தல் போன்றவை மும்முரமாக நடந்து கொண்டிருந்தாலும், மழைநீர் சேகரிப்புத் திட்டம் மூலம் நிலத்தடி நீர் வளத்தைக் கூட்டுவது பாராட்டுக்குரியது. சென்னைச் சாலைகளிலும் சரக்கு வண்டிகள் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் தாங்க முடிகிறது. அண்ணாசாலையிலும் போக்குவரத்து எதிர்பார்த்ததைவிட ஒழுங்காகவே செல்கிறது. மெரீனா கடற்கரையில் எனக்குத் தெரிந்த ஒவ்வொரு சின்னத்தையும் வேகமாக அகற்றிக் கொண்டிருக்கிறார்கள். 10,000 ரூபாய்க்கு ஒரு கணினி வாங்க முடிகிறதாம். மாதம் ரூ. 1000க்கு 512 KB இணையத் தொடர்பு கிடைக்கிறதாம். தமிழ் இணைய மாநாட்டிலிருந்து செல் பேசி வழியாக இணையத்தில் நேர்முக வர்ணனை கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறார் முன்னாள் அமெரிக்கவாசி பத்ரி சேஷாத்திரி. 90’களின் தொடக்கத்தில் soc.culture.tamil தொடங்கியபோது இணையம் வழியாகத் தமிழ்நாட்டின் எதிர்காலக் கனவுகளைப் பற்றி அரட்டை அடித்தவர்களில் அவரும் ஒருவர். அந்தக் கனவுகள் பல நனவாவதைக் கண்கூடாகப் பார்த்து மகிழ்கிறார் பத்ரி. தமிழ்நாட்டின், இந்தியாவின் பொற்காலம் தொடங்கிக் கொண்டிருக்கிறது என்பது பலர் கண்களில் தெரிகிறது.
அமெரிக்காவை விட்டு இந்தியாவுக்குப் போய்க் கொண்டிருக்கும் வேலைகளைப் பற்றி நாம் கவலைப்படுவது போல, ஏனைய வளர்ந்த நாடுகளும் கவலை கொண்டிருக்கின்றன. ஆங்கிலப் புலமையால்தான் இந்த வேலைகள் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்து கொண்டிருக் கின்றன என்ற நோக்கில் சீனாவும், தென் கொரியாவும்கூட ஆங்கிலப் புலமைக்குப் போட்டி போடத்துவங்கி விட்டன. கொரியர் களால் R என்பதை L என்பது போல் உச்சரிப்பதைத் தவிர்த்துச் சரியாக உச்சரிக்க நாக்கை நீட்டிக் கொள்ளும் அறுவைச் சிகிச்சை செய்து கொள்கிறார்களாம்.
நம்மவர்களுக்கு எப்போதுமே நாக்கு நீளம் என்று கவலைப் படுபவர்கள், பரவாயில்லையே, இதிலும் ஒரு நன்மை இருக்கிறதே என்று ஆறுதல் கொள்ளலாம். சிங்கப்பூரிலும் இதே கவலைதான். சிங்கப்பூர் ஊதியங்கள் அமெரிக்க ஊதியங்களை விடக் கூடுதல் என்பதால், சிங்கப்பூரிலிருந்தும் வேலைகள் இந்தியாவுக்குப் பெயரத் தொடங்கி விட்டன. அவர்கள் வேலையில்லாத் திண்டாட்டத்தைக் குறைக்க அரசு முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஆங்கிலப் புலமையும், தொழில் திறமையும் மட்டும் இருந்தால் இந்தியாவுடன் போட்டி போட முடியாது என்ற முடிவுக்கு இவர்களும் வந்து விட்டார்கள். சிங்கப்பூர் ஊதியங்கள் குறையவேண்டும் அல்லது சிங்கப்பூர் வேறு ஏதாவது செய்துதான் பிழைக்க வேண்டும். கலி·போர்னியா நோய் சிங்கப் பூருக்கும் தொற்றிக் கொண்டிருக்கிறது. கலி·போர்னியர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் அடுத்த அலைக்குக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சிங்கப்பூருக்குக் காத்துக் கொண்டிருக்கும் பழக்கம் இல்லை. திட்டம் போட்டுத்தான் பழக்கம்! என்ன செய்யப் போகிறார்கள் என்று அறிய நானும் ஆவலாய் இருக்கிறேன்.
இந்தியாவின் கவலை வேறு. மும்பை தெருவோரக் கடைகளிலே ஊசி விற்கிறார்கள். “ஜப்பானில்” செய்யப் பட்டது என்று அறிவிக்கும் இந்த நவீனப் பொட்டலத்தில் 50 ஊசிகள், வெவ்வேறு அளவில். விலை 5 ரூபாய்.
இந்தியர்கள் ஒரு ஊசி 1 ரூபாய் என்று விற்றாலே நஷ்டம் அடையும்போது, ஐம்பது ஊசிகளை ஐந்து ரூபாய்க்கு விற்கும் இந்தப் பொட்டலம், அநேகமாக சீனாவிலிருந்து கடத்தல் வழியாகத் தான் வந்து குவிந்திருக்க வேண்டும். இந்த நிலை நீடித்தால், இந்தியா வின் ஊசித் தொழிற்சாலைகளை இழுத்து மூட வேண்டியதுதான்.
ஏற்கனவே சீனாவிலிருந்து வந்து குவியும் மலிவு விலைச் சாமான்கள் இந்தியத் தொழிலதிபர்களை அசர வைத்திருக்கின்றன. ஊசி, நூல் மட்டுமல்ல, மலிவு விலைத் துணிகளும், சைக்கிள்களும் வந்து குவிவது நுகர்வோருக்குக் கொண்டாட்டம், தொழிலாளர்களுக்குத் திண்டாட்டம். உலக மயமாக்கல், தாராள மயமாக்கல் கொள்கைகளால் உற்பத்தித் திறன், மலிவான உற்பத்திச் செலவு உள்ள நிறுவனங்கள்/நாடுகள் உலகமெங்கும் தம் பொருள்களை விற்க வாய்ப்புகள் கூடிக் கொண்டிருக்கின்றன. எந்த அலையில் அழைப்பு மையம், வணிக முறை வேலை வெளிக்கொடுத்தல் (Business Process Outsourcing) போன்ற வேலைகள் இந்தியாவுக்கு வருகின்றனவோ, அதே அலையில்தான் இந்தியாவின் சிறு தொழில் வேலைகள் சீனாவுக்குப் போய்க் கொண்டிருக்கின்றன. வருகின்ற மென்பொருள் வேலைகள் நடுத்தரக் குடும்பத்தினர் சிலரைக் காப்பாற்றலாம். ஆனால் மற்றவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? ஆமாம், விரும்புகிறோமோ இல்லையோ, நாம் சுவாரசியமான நாட்களில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
மணி மு. மணிவண்ணன் |