இந்திய உணவகம் ஒன்றில் தென்றல் இதழ்கள் கண்டேன். கடல் கடந்து வாழும் தமிழர்களுக்காக வெளிவரும் தென்றல் பயனுள்ளதாகவும் சுவையுள்ளதாகவும் பலவிதமான பகுதிகளைக் கொண்டும் இருக்கிறது.
குறிப்பாக ஜூன், ஜூலை இதழ்களில் வெளியான ஆலங்குடி, திருநாராயணபுரம் பற்றிய அலர்மேல் ரிஷியின் வழிபாட்டுக் கட்டுரை சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. திரைகடல் ஓடி திரவியம் தேடு என்பது பழமொழி. ஆனால் இன்றோ தமிழர்கள் விண்ணில் பறந்து வித்தைகள் பல கற்றுப் பொருள், புகழ் ஈட்டுவதோடு நமது தமிழ்க் கலாசாரம், பண்பாடு, ஆன்மீகம், அறிவுத்திறன் ஆகிய எதிலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை ஒவ்வொரு படைப்பும் உணர்த்துகின்றது.
மகாதேவன் வைத்தியநாதன் ஹாஃப்மன் எஸ்டேட், இல்லினாய்ஸ்
******
தெவன் அவென்யூவில் ஒரு கடையில் தென்றல் இதழைப் பார்த்தோம். இலவசம் என்ற வார்த்தை எங்களை ஈர்த்தது. ஓர் இதழை வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.
தென்றலைப் படித்துப் பார்த்தபோது என்னால் நம்பவே முடியவில்லை - எத்தனை விஷயங்கள் அடங்கியிருகின்றன அதில்! இந்தியாவில் நாளுக்கு நாள் தினசரிகள், வாரப்பத்திரிகை, மாத இதழ்களெல்லாம் விலை ஏறிக் கொண்டே போகின்றன. ஆனால் அழகான அட்டை நல்ல காகிதம், இவ்வளவு விஷயங்கள் எல்லாவற்றையும் நீங்கள் இந்த நாட்டில் (நம் நாட்டைவிடப் பல மடங்கு விலைவாசி உயர்ந்த நாட்டில்) எப்படித்தான் இலவசமாகக் கொடுக்கிறீர்களோ என்னால் நம்பவே முடியவில்லை.
உங்களுக்கு எப்படிப் பாராட்டு தெரிவிப்பது என்றே எனக்குத் தெரியவில்லை. இது மேலும் மேலும் வளர்ந்து அபிவிருத்தி அடைய வேண்டுமென்று பகவானைப் பிரார்த்திக்கிறேன்.
எஸ். மீனாட்சி, சிகாகோ, இல்லினாய்ஸ்
******
தென்றலை தற்செயலாக இந்தியன் கடையில் புதையலெனக் கண்டெடுத்தேன். கவிதையில் மிகவும் ஆர்வம் உள்ள எனக்கு ஜூலை இதழில் ஹரி கிருஷ்ணன் அவர்களின் கவிதை பார்த்ததும் ஒரே சந்தோஷம்.
தென்றல் வாசகர்களில் கவிதை ஆர்வம் உள்ளவர்கள் உயிரெழுத்து என்கிற எமது கவிதை இணையக் குழுவில் சேரலாம். முகவரி: http://groups.yahoo.com/group/uyirezuththu/
கற்பகம், டெட்ராயிட், மிஷிகன்.
******
ஆகஸ்ட்'03 இதழில் 'வளமான நாடாக்குவோம்' என்ற தலைப்பில் நமது இந்தியக் குடியரசுத் தலைவர் ஏபிஜே. அப்துல்கலாம் அவர்களின் கட்டுரையை படிக்கப் படிக்க உடலிலே பலவிதமான உணர்ச்சிகள் உண்டாகின்றன. இவற்றைத் தங்க எழுத்துகளில் பொறிக்க வேண்டும்.
தவிர ஆசிரியர் அவர்கள் 'தென்றல்' எந்த ஒருகட்சியையும் சார்ந்தது அல்ல என்று திட்டவட்டமாக எழுதியிருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. சில வாசகர்கள் எழுதியிருப்பதை good ஆக எடுத்துக் கொள்ள வேண்டுமே தவிர குட்டாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அம்புஜவல்லியின் 'தாயுமான ஆழ்வார்' ஒரு சிறந்த குறிப்பு. டாக்டர் அலர்மேல் ரிஷியின் 'திருக்கருகாவூர்' ரொம்பப் பிரமாதமாய் அமைந்திருக்கிறது. தமிழக அரசியல் களம் என்கிற தலைப்பின் கீழ் நியாயமான முறையில் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
அட்லாண்டா ராஜன்
******
தென்றலில் 'அன்புள்ள சிநேகிதியே' சித்ரா வைத்தீஸ்வரன் அவர்களின் ஆலோசனைகள் மயில் இறகினால் உள்ளத்தை நீவி விடுவதுபோல் அமைந்துள்ளன. தென்றலின் இந்தப் பகுதி ஆலோசனை கேட்பவர்களுக்கு தென்றலின் குளுமை தருகிறது. தொடரட்டும் இந்த அன்புப் பணி.
ரகுபத், கலிஃபோர்னியா
****** |