கோக், பெப்சிக்குத் தடையா?
கோக்கோ கோலா, பெப்சி குளிர்பானங்களில் நச்சுப்பொருள் கலப்பு இருப்பதாக சிஎஸ்ஈ (சென்டர் ·பார் சயின்ஸ் அண்ட் என்விரான் மென்ட்) வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து அவற்றைத் தடை செய்ய வேண்டுமென்ற குரல் பரவலாக ஒலிக்கிறது. தமிழக அரசுகூடத் தடை செய்வது குறித்து ஆழமாகப் பரிசிலித்து வருகிறது.

இதற்காக சென்னை மாநகராட்சிப் பிரதேசத்தில் கோக், பெப்சி உள்பட வேறு சில குளிர்பானங்களின் சாம்பிள்களைப் பரிசோத னைக்கு எடுத்திருக்கிறது.

இந்த பானங்களின் நிர்வாகங்கள் சிஎஸ்ஈக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வீராவேசமாக வழக்குத் தொடர்ந்துவிட்டு ஏனோ காரணம் சொல்லாமலே அவ்வழக்கை வாபஸ் பெற்றன. இதற்கிடையே மைசூரில் இருக்கும் CFTRI (மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம்) இவை பருக ஆபத்தற்றவை என்று சொல்ல அதை சுஷ்மா ஸ்வராஜ் பாராளு மன்றத்தில் வாசித்தார். இத்தீர்ப்பை எதிர்க் கட்சிகள் ஏற்கமறுக்கவே, இதனை ஆராய பாராளுமன்றக்குழு ஒன்று அமைக்கத் தயார் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

1999இலேயே சென்னை கிங்ஸ் இன்ஸ்டிட் யூட்டின் உணவுப் பரிசோதனைக் கூடம் பெப்ஸிகோவின் செவன் அப் பானத்தில் மஞ்சள் நிற அங்கக (organic) அன்னியப் பொருள் இருப்பதால் அது பருகத்தகுந்ததல்ல என்று கூறியது தெரியவந்துள்ளது.

இதற்கிடையில் கோக் பெப்சி உள்பட குளிர்பானங்களுக்கு எதிராகப் பொதுமக்களும் பல்வேறு கட்சி அமைப்புகளும் பலவிதமான போராட்டங்களில் இறங்கியுள்ளனர். பல துண்டுப்பிரசுரங்கள்கூட வெளியிடப்பட்டுள்ளன.

இதில் யார் வெல்லுவார், இதை யார் சொல்லுவார்?

கேடிஸ்ரீ

© TamilOnline.com