சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள கண்ணகி சிலை இரவோடு இரவாக அகற்றப் பட்டது. இதற்குப் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியும் அரசு இதை பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. தொடர்ந்து இராணி மேரி கல்லூரியை இடிக்கவும் அரசு முயற்சி செய்தது. மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் எதிர்ப்பால் இம்முயற்சி பின்னர் கைவிடப்பட்டது.
சிறிது கால இடைவெளிக்குப்பின் மறுபடியும் கடற்கரையில் உள்ள சீரணி அரங்கம் மற்றும் இரண்டு ஹோட்டல்களும் இரவோடு இரவாக அகற்றப்பட்டுவிட்டன. இந்நிலையில் சென்னை முன்னாள் மேயர் மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். மனுவில் ஸ்டாலின் தெரிவிப்பது என்னவென்றால் ''மெரீனா கடற்கரையில் கட்டடங்களை இடிப்பதில் அரசு வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும்'' என்பதே.
இம்மனு மீதான விசாரணையின் போது அரசு சார்பில் வாதிட்ட அட்வகேட் ஜெனரல் என்.ஆர். சந்திரன் மெரீனாவில் உள்ள அண்ணா, எம்ஜிஆர் சமாதிகளை இடிக்கும் திட்டம் அரசுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்தி கூறியுள்ளார்.
ஆக எம்ஜிஆர், அண்ணா சமாதிகள் இடிக்கப்படாது என நம்பலாம்.
கேடிஸ்ரீ |