கலி ஃபோர்னியா காலம் - பாகம் 10
முன் சுருக்கம்:

2000-க்கும், 2001-க்கும் இடையிலான ஒரு வருட காலத்தில் அமெரிக்கப் பொருளாதார நிலையின் பெரும் சீர்குலைவு எதனால் ஏற்பட்டிருக்கலாம் என்று கற்பனை உலகுக்குச் சென்று பார்த்தோம்.

நாரதர், கலி·போர்னியாவில் புரளும் செல்வம் லக்ஷ்மி கடாட்சத்தாலேயே என்று கலகமூட்டி விடவே, வந்து பார்த்த விஷ்ணுவும் முதலில் லக்ஷ்மியின் அருள் பலத்தை ஒப்புக் கொண்டார். ஆனால் டாட்-காம் கொப்பளம் உடைந்து, அதன்பின் 9/11 விளைவு, என்ரான், வொர்ல்ட்காம் ஊழல் எனத் துன்பங்கள் தொடர்ந்தன. அவற்றுக்குக் காரணம் மாயையால் விளைந்த மமதையும் பேராசையும் என்று விஷ்ணு விளக்கினார்.

அப்படிப் பட்ட விளைவுகளிலிருந்து எப்படி மக்கள் விடுபட்டு மீண்டும் சீர்நிலை பெறுவது என்று நாரதர் கேட்கவே, மஹாவிஷ்ணு தான் கண்ணனாக அவதரித்த போதே கீதையில் கர்ம யோகம் பற்றி உரைத்து விட்டதாகக் கூறினார்.

நாரதர் பலரும் கீதையை மறந்து விட்டதால் அதை மீண்டும் தற்கால ரீதியில் உணர்த்த வழி கேட்டார். லக்ஷ்மி தேவியும் விஷ்ணு மீண்டும் அதற்காக அவதரிக்க வேண்டுமோ என்று கேட்டாள். விஷ்ணு, அவசியமில்லை, புத்தர் போன்ற பலரும் அந்தக் கருத்துக்களை அவ்வப்போது உரைத்திருக்கிறார்கள், தற்போது கூட குடும்ப வாழ்வு வாழ்ந்து கொண்டே ஞானம் பெற்ற பலர் மற்றவர்களுக்கு வழி காட்டுகிறார்கள் என்று கூறி, அத்தகைய ஒருவரை பூலோகத்தில் காட்டினார்.

அவர் பெயர் அருண். அவர் பல வருட காலமாக பல உயர் தொழில் நுட்ப (hi-tech) நிறுவனங்களில் பணி புரிந்தவர். அவர் அடைந்திருந்த வெற்றிகளாலும் venture உலகில் அவருக்கிருந்த பலப் பலத் தொடர்புகளாலும் அவருடைய பெயர் பரவியிருந்தது. அப்படியிருந்தாலும் தலைக் கனமின்றி யார் என்ன கேட்டாலும் பொறுமையாகப் பதிலளிப்பார். அதே போல் யார் என்ன உதவி கேட்டாலும், தன்னாலானவரை தயங்காமல் செய்வார்.

அருணைப் பலர் கேட்கும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதில்கள் மூலம் நாரதரின் கேள்விக்கு நாராயணன் உரைத்த பதிலின் விளக்கத்தைச் சிறிது சிறிதாக அறிந்து கொண்டிருக்கிறோம்.

அருணுடன் பாஷ் பேகல் கடைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தவர்களில் ஒருவனான சிவா தன் பிரச்சனையை எழுப்பினான்.

"அருண், என் பேர் சிவா. நீங்க சொல்றதையெல்லாம் நான் கொஞ்ச நாளாக் கேட்டுக்கிட்டிருக்கேன். ரொம்ப தெளிவா, உண்மையா, ஏத்துக்கொள்ளும்படி இருக்கு. என் நிலைமைக்கும் எதாவது தீர்வு சொல்வீங்கன்னு நம்பறேன்."

அருண் அடக்கத்தோடு புன்னகைத்தார். "ரொம்பவே எதிர்பார்ப்பு வளர்த்துக்காதீங்க, சிவா! எனக்குத் தெரிஞ்ச அளவு, தோணினதை சொல்றேன் அவ்வளவுதான். ஏத்துக்கறதும், ஏத்துக்காததும் கேக்கறவங்களைப் பொறுத்தது. உங்க பிரச்சனை என்ன? உதவ முடியுமான்னு பாக்கறேன்."

சிவா, "அருண், நீங்க நிறைய நிறுவனங்களோட தொடர்பு வச்சிருக்கீங்க. உங்களால விளக்கம் தர முடியும்னு நினைக்கிறேன்" என்றான்.

அருண் மெளனமாகத் தலையசைத்து, மேலும் தொடருமாறு தூண்டினார்.

சிவா தொடர்ந்தான். "நான் வேலை பாத்த நிறுவனத்துல எஞ்சினீயரிங் துறையிலயும் வாடிக்கையாளர் உதவித் துறையிலயும் இருந்த முக்கா வாசிப் பதவிகளைச் சென்னையில திறந்திருக்கற எங்க புது மையத்துக்கு மாத்திட்டாங்க. அங்க உடனே போக முடியாத, அல்லது போக விருப்பமில்லாதவங்களுக்கு, எல்லாருக்கும் வேலை போயிடுச்சு - எனக்குந்தான்."

அருண் பரிதாபத்துடன் உச்சுக் கொட்டினார். "ஹ¥ம்... இந்த மாதிரி நிறையவே நடக்குது. எனக்குத் தெரிஞ்ச நிறைய பேருக்கு இந்த மாதிரி நிலைமைதான். என் மனைவிக்கும் வேலை இதே மாதிரி போயிடுச்சு. ஆனா அவ என்ன, ஆனந்தமா வீட்டு வேலை, பசங்கன்னு இறங்கிட்டா. உங்க மாதிரி ஆளுங்களுக்கு ரொம்பக் கஷ்டம்தான். இப்ப இங்க சிலிகான் வேல்லியில வேற வேல கிடைக்கறதே குதிரைக் கொம்பாப் போச்சு!"

சிவா ஆமோதித்தான். "சரியாச் சொல்லிட்டீங்க அருண். குதிரைக் கொம்பு கூட யூனிகார்னைப் புடிச்சு எடுத்துடலாம் போலிருக்கு. வேலை கிடைக்கறது அதை விட அபூர்வமாப் போச்சு! நானும் எவ்வளவோ தேடிப் பாத்துட்டேன். ஆனா எங்கப் பாத்தாலும் அதே பாட்டுத்தான். நான் கேக்கற இடத்துல எல்லாம் இந்தியாவுக்கோ, சைனாவுக்கோ, இல்லன்னா ரஷியாவுக்கோ வேலைகளை அனுப்பிட்டிருக்காங்க. புதுசா மூலதனம் கிடைச்ச ஆரம்பநிலை நிறுவனங்க கூட இங்க ரெண்டு வேலை வச்சுகிட்டு, இந்தியாவில இருபது வேலை சேத்துடறாங்க. பத்திரிகைக்காரங்க பெரிய கம்பனிகளைக் குடாய்ஞ்சுக் கேட்டா, 'இல்லையே, நாங்க அங்க வளர்கிறோம், இங்க குறைக்கலையேன்னு' வேற புளுகிடறாங்க! என்ன செய்யறதுன்னே தெரியலை." என்றான்.

அருண் மீண்டும் உச்சுக் கொட்டினார். "ரொம்ப வருத்தமா இருக்கீங்கன்னு தெரியுது... ஆனா, உங்களுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு உடனே தோணலை. இதுதான் இப்ப இருக்கற நிலைமை. நாம எல்லாமே இதுக்கு ஏத்தா மாதிரி இணைஞ்சு போய்த்தான் ஆகணும்..."

சிவாவின் முகம் ஏமாற்றத்தால் தொய்ந்தே போய்விட்டது. அருண் மற்றவர்களுக்கு அளித்த உபதேசத்தால் அவர்களுக்குக் கிடைத்த மனத்தெளிவைப் பார்த்துப் பார்த்துப் பழகியிருந்தான் சிவா. தன் பிரச்சனையை விளக்கிய உடனேயே அருண் மின்னலைப் போன்ற ஒரு யோசனையைக் கூறித் தன் வாழ்க்கையையே மாற்றி விடுவார் என்று எதிர்பார்த்திருந்த அவனுக்கு அருணின் முதல் வார்த்தைகள் மிகவும் பலவீனமாகத்தான் தோன்றின.

சிவாவின் முகத்தில் விளையாடிய ஏமாற்றத் தைக் கண்டு மெலிதாகத் தனக்குத் தானே முறுவலித்துக் கொண்ட அருண் தொடர்ந்தார். "...ஆனால் சிவா, இந்த மாதிரி நடப்பது ஒன்றும் புதுசில்லை. சரித்திரத்தில் ஏற்கனவே இந்த மாதிரி மற்ற தொழில் துறைகளில் நடந்த வைகளை நாம் நினைவில் நிறுத்திக் கொண்டால், இந்த முறை நடப்பதைச் சமாளிப்பது எப்படி என்று புரியும்."

அந்த முன் சரித்திரம் தெரிந்திராத இளைஞனான சிவாவுக்கு ஆர்வமும், புத்துணர்ச்சியும் பிறந்தன. "வேறு துறைகளில் இப்படி நடந்துச்சா? என்ன ஆச்சு? எப்படி சமாளிச்சாங்க? அந்த மாதிரி செய்யமுடியும்னா நானும் முயற்சி பண்ணிப் பாக்கறேன்" என்றான்.

அருணின் முறுவல் பெரிய புன்னகையாக மலர்ந்தது. "சபாஷ் சிவா! சரித்திரத்திலிருந்து கத்துக்கிட்டு நிலைமையை முன்னேற்றிக்க முயலும் உங்க முற்போக்கான மனப்பாங்கை நான் மிகவும் பாராட்டறேன். இதுக்கு முன்னாடி பல முறை இந்தமாதிரி வேலை வாய்ப்புக்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாயிருக்கு. உதாரணமா, துணிமணிகள், பொம்மைகள், மற்றும் ரேடியோ, டெலிவிஷன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் இவையெல்லாம் ஒரு காலத்துல அமெரிக்காவிலேயே பெரிய பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப் பட்டுகிட்டிருந்தன. ஆனா, முப்பது வருடங் களுக்கு முன்னாலயே உற்பத்திச் செலவைக் குறைக்க வேண்டி, பெரிய நிறுவனங்கள் தாய்வான், ஹாங்காங், சைனா, பிலிப்பைன்ஸ் போன்ற இடங்களில் உற்பத்தி செஞ்சு அமெரிக்காவில கொண்டு வந்து விக்க ஆரம்பிச்சுட்டாங்க."

சிவாவின் சிந்தனை தூண்டப் பட்டது! மெளனமாகத் தலையாட்டி ஆமோதித்து, மேலும் தொடருமாறு சைகை செய்தான்.

"ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் உள்ள சோனி போன்ற பெரும் நிறுவனங்களின் போட்டியால, எலக்ட்ரானிக் சாதனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கறதையே நிறுத்திட்டாங்க. GEதான் பெரும் விதி விலக்கு! அவங்க கூட வெளிநாட்டுலதான் உற்பத்தி பண்றாங்க. இப்ப பாத்தீங்கன்னா, Made in USAங்கற பட்டம் அந்த மாதிரிப் பொருள் எதுலயும் இருக்கறது ரொம்ப அபூர்வமாப் போச்சு. துணிமணிகள் கூட இப்ப இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து வருது."

சிவா இடைமறித்தான். "அந்த மாதிரி தொழிற்சாலைகளில் வேலை செஞ்சவங்க என்ன ஆனாங்க?"

அருண் சிரித்தார். "அங்க தானே போய்க்கிட்டிருக்கேன். அந்த மாதிரி வேலைகள் எல்லாம் ஆவியாயிடுச்சு. அதுல வேலை நீக்கம் செய்யப் பட்டவங்க சில பேர் வயசாயிட்டிருந்தா ரிடையர் ஆயிட்டாங்க. இல்லாட்டா மீதி இருக்கற, வளர்கிற புது தொழிற்சாலைகளில வேலை தேடிக்கிட்டாங்க. இறக்குமதிக் கட்டுப்பாட்டால கார்கள் நிறைய இன்னும் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்படுது. அதில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் இந்தியா போன்ற வெளிநாடுகளில தயாரிச்சு இங்க கடைசியா கார்களா உருவாக்கறாங்க. தேசியப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பல பொருட்களும், பல விலை அதிகமான எலக்ட்ரானிக் மற்றும் கனரகப் பொருட்களும்தான் இன்னும் அமெரிக்காவில உற்பத்தி செய்யப்படுது."

சிவா ஆவலுடன் "அப்ப வேலை போனவங்களுக்கெல்லாம் வேற தொழிற் சாலைகளில வேலை கிடைச்சுடுச்சா?" என்று வினவினான்.

அருண் இல்லை என்று தலையசைத்து விளக்கினார். "பல பேருக்குக் கிடைச்சுது. ஆனா இன்னும் பல பேர் வேறு திறன்களை வளர்த்துக்கிட்டு தொழில்துறை மாறிப் போயிட்டாங்க. சில பேர் ப்ளூ காலர் எனப்படும் தொழிற்சாலை வேலைகளிலிருந்து, Information Technology போன்ற வெள்ளைக் காலர் எனப்படும் அலுவலகத் தொழில்களுக்கு மாறிட்டாங்க. சில பேர் சட்ட உதவி, மருத்துவ உதவி போன்ற தொழிலுக்குப் போயிட்டாங்க. சில பேர் ரீடெயில் விற்பனை, ஏற்றுமதி / இறக்குமதி போன்ற சேவைத் துறைகளுக்கு (service industry) மாறிட்டாங்க."

சிவா யோசித்தான். "சரி, அதுக்கப்புறமும் அந்த மாதிரி வேலை ஏற்றுமதி நடந்திருக்கா? பல முறை நடந்திருக்குன்னு சொன்னீங்களே?" என்றான்.

அருண் ஆமோதித்தார். "ஆமாம்! அதுக்கு முன்னாலும் நடந்திருக்கு, பிறகும் பல முறை ஆகியிருக்கு. அந்த முறை நடந்ததை ஒரு உதாரணத்துக்குச் சொன்னேன். வேறு முறை நடந்ததைப் பத்தியும் இப்ப மேற்கொண்டு சொல்றேன்."

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com