நம்மைச் சுற்றிலும் நம்மை இணைக்கும் வலை. நினைவினால் நெய்துகொண்ட நல்லுறவுகளென்னும் நிலை இவ் வலை! பின்னிப் பிணையப் பட்டிருக்கின்றோம். நமக்குள்ளே நமக்கென நாம்!
உன்னையன்றி உயர்வில்லை. என்னையன்றி எழிலில்லை. நம்மையன்றி நிகழ்வுகள் எதுவுமே இல்லை. பெறுவதும் தருவதும் தலையாய தருமங்கள்! தன்னலம் பாராது தருதல் இனிமை! பேராசைப் படாது பெறுதல் பெருமை!
செழிப்பும் சரிவும் சுகமும் செறுவும் சிறையும் சிரிப்பும் சினமும் சகிப்பும் சுந்தரச் சாளரங்கள்! புலரியிலும் பொழுதிலும் பாசமிகு பந்தங்கள். பிணக்கிலே சில சமயம் - பிளவேற்படும் படகதனில். பகைமைப் பிரவாகம் வெள்ளெமெனப் பெருக்கெடுக்கும் - அடடா! அதன் விளைவு? ஆதலினால் அன்புள்ளமே கிரகணக் கணங்களில் கதிரவனைக் காணாமல் இருப்பதே கண்களுக்கு நல்லது.
கும்மியடிப்போர் கூடியாடி மகிழலாம். ஆனால் கரகாட்டம் ஆடுபவன் தன் தலையில் மட்டுமே கும்பத்தைச் சுமக்கவேண்டும். அது போல சில தருணங்களில் தன் வலியுடன் தனிமையிலே அழுதிடலும் ஒரு சுகமே!
எத்தனைதான் உறவிருந்தாலும் உறங்குவது - நம் உள் மனதின் உணர்வோடுதானே! களைத்தபின் இளைப்பாற கேளிக்கை தேவையில்லை. நிசப்தமும் நிம்மதியும் ஒருமையில்தான் குடியிருக்கும். எனவே, தேனுறவே - தாளாத துயர் முட்டும் தினமதனில் தூரப்பட்டு துண்டித்துக் கொண்டு தவித்திருப்போம். உன்னில் என்னையும் என்னில் உன்னையும் தேடிப்பார்த்துத் தெளிவுறுவோம் தனிமைப்பட்டுத் திறனறிவோம் தனிமைப்பட்டுத் தவமிருப்போம்... இன்னுறவு வலையதனின் வலிமைதனை வளர்த்திடுவோம்!
கற்பகம்
(ஆகஸ்ட் மாதம் 14ம் நாள் வடகிழக்கு அமெரிக்கக் கண்டம் முழுதும் மின்சாரத்தடை ஏற்பட்டு இருட்டில் மூழ்க, அதே பகுதியில் இருக்கும் பென்சில்வேனியாவும், வாஷிங்டனும், எங்கோ தவறு நிகழ்ந்திருக்கிறது, என்ற தகவல் அறியப்பெற்று, மின்சார வலையில் (grid) இருந்து தமது நிலையங்களைத் துண்டித்துக்கொண்டு தங்கள் பகுதிகளை இருட்டடிப்பிலிருந்து பாதுகாத்துக்கொண்டனர். இந்த மின்சார வலை பற்றிய சிந்தனையுடன் தனிநபரைக் கோர்த்த போது, தெறித்த கவிதை...) |